

என்னில் இறைவன் எங்குள்ளான்?
இறைவனில் நான்தான் எங்குள்ளேன்?
நான் எதுவெதுவாகவோ இருந்து கொண்டிருப்ப தனால், நான் அவனில் எங்கே என்றும், என்னில் அவன் எங்கே என்றும் கேள்விகள் எழுகின்றன. இறைவன் தான் ஓர் ஆளில்லை, குறிப்பிட்ட எதுவுமில்லை என்று சொல்லிவிட்ட பிறகு, அவன் என்னில் எங்கே என்பதைக் காட்டிலும், என்னில் எதுவாக அல்லது எவையெவையாக இருக்கிறான் என்று விசாரிப்பதே சரியாகப்படுகிறது.
சரி, என்னில் அவன் யார்? சிந்தனையா? இரக்கமா? பொறுமையா? காதலா? ஒழுக்கமா? கல்வியா? மன்னிப்பா? என்ன, விடையே இல்லை? இவையெல்லாம் மனித குணங்கள், தன்மைகள், பண்புகள். இவற்றை ஒரு மனிதன் உணர்வுடன் வளர்த்துக்கொள்வது நல்லது. அதுதான் காலும் கையும் முளைத்த ஒரு வடிவத்திற்கு மனிதன் என்னும் பொருளைக் கொடுக்கும். ஆனால், இறைவன் இவையல்ல, அல்லது இவை மட்டுமல்ல!
நானும் இறைவனும்:
இறைக்கு என்ன தன்மை இருக்க முடியும்!
அதுதான் உயிர்களின் நலம் நாடும் தன்மை. எது உயிர்களின் நலம்? பரிணாம வளர்ச்சி, பரிபக்குவம், இறையும் நானும் வேறில்லை என்று உணர்தல். இதுதான் இறைவனின் விழைவாக இருக்க முடியும். இதுவேதான் மனிதனின் விழைவாக இருக்க வேண்டும். இறைவனின் இந்த விழைவுக்கு நாம் ஒரு பெயர்சூட்ட வேண்டுமென்றால், அதைப் `பேரன்பு' என்றோ `பெருங்கருணை' என்றோதான் சொல்ல முடியும்.
ஏனென்றால், இந்த உலகம் என்பது துன்பங்கள் மண்டிக் கிடக்கும் இடமாக இருக்கிறது. உள்ளும் புறமும் பூசல். இதில் உயிர் தடுமாறும் ஊசல். இதில் உயர்வு தாழ்வெனப் பேசல். இதில் ஒவ்வொரு கணமும் மரண விளக்கை நோக்கி உவந்து பறக்கும் உயிரெனும் ஈசல்!
நம்முடைய சண்டைகள், சரசங்களெல்லாம் ஒருபக்கம் இருக்க, எந்தக் கணத்திலும் மரணம் நேர்ந்து நம்முடைய கதையென்னும் மெல்லிய கயிறு அறுந்து போகலாம் என்பதுதான் நிதர்சன மாக இருக்கிறது. இதில் பரிணாம வளர்ச்சியாவது, பரிபக்குவமாவது என்று தோன்றுகிறது.
அப்படியல்ல! துன்பங்களிலிருந்து விடுபட்டு நிம்மதி காண விரும்பாதார் யார்? அவர் யாராக இருந்தாலும் அவருக்கு ஒருவழிதான் இருக்கிறது. அதுதான் அன்பு பேணல். அன்பு என்பது, மனிதப் பண்புகளில் ஒன்றல்ல! பிரபஞ்சத்தின் தன்மை. உயிரின் அடிப்படை இயல்பு. அன்பு என்பது குணமாக விகசிப்பது எப்போது? அடுத்தவர் நலத்தை நாடும்போது.
நாம் அன்பை உருவாக்க வேண்டியதில்லை; அது ஏற்கெனவே நம்முள் ளேயே இருக்கிறது; ஆனால் அதை விழிப்புடன் உணரவேண்டியதாக இருக்கிறது; கவனத்துடன் வளர்க்க வேண்டியதாகவும் இருக்கிறது. இவ்விதம், பிறர் நலம் விழைந்து, நம்முள் இருக்கும் அன்பைப் பேணப்பேண, நம்முள் இறைவன் என்பவன் பேரன்பாக இருக்கிறான் என்பது தெரியவருகிறது.
ஞானம் ஆனந்தம்: விறகில் நெய்யை ஊற்றினால் தீயெழாது. தீயை மூட்டித்தான் தீயை எழுப்ப முடியும். அதன் பிறகு நெய்யூற்றியும், சுள்ளிகளை நிமிண்டியும் எழுப்பிய தீயைப் பாதுகாக்கலாம். அதுபோலத்தான் இதுவும். நம்மில் எது அன்பாக இருக்கிறதோ, அதுதான் அகன்று விரிந்துகொண்டே இருக்கும் இந்த அண்டத் தொகைகள் அனைத்தையும் ஆண்டு புரக்கிறது என்பது புரியவரும். இந்த ஞானமே ஆனந்தம்.
என்ன சொல்கிறாய் நீ? - ஊழல் செய்யும் உலுத்தர்களை, இரக்கமே இல்லாமல் பிறரைக் கொல்லும் தீவிரவாதிகளை, பொய்யர்களை, எத்தர்களை ஆரத் தழுவி அன்பு செய்து நெகிழ முடியுமா?
முடியாதுதான்.
அப்படியானால் என்னவாயிற்று உன் அன்பு பற்றிய உபதேசம்?
இரண்டு முகம்: அன்புக்கு இரண்டு முகங்கள் இருக்கின்றன. ஒன்று அன்பு ‘செய்தல்.’ அசைவில்தான் இயக்கம் என்பது புரிகிறது. வழங்கத்தான் அன்பு என்பது புரிகிறது. இன்னொன்று அன்பாய் ‘இருத்தல். ’ அன்பு ஒரு செயலில் வெளிப்படும்போது அது சேவை அல்லது தொண்டு என்றாகிறது. அன்பு செய்தல் வேண்டும்! ஆனால், எவ்வளவு செய்ய முடியும்? எவ்வளவு செய்துவிட முடியும்? இயன்ற விதம் இயன்ற பேர்க்குச் செய்தல் வேண்டும்.
ஆனால், நலம் விழைதல் என்பதற்கு அளவை உண்டா! வரம்புதான் உண்டா! வெளியே யதார்த்தம் எப்படி இருந்தாலும், உள்ளே அந்த உலுத்தர்கள் பட்டியல் திருந்த வேண்டும், மனம் மாறி நல்வழிக்கு வரவேண்டும் என்று விழையலாமே? நமக்கு மனம் என்றொன்று இருப்பதனால் இந்த விழைவு ஒரு விருப்பமாக இருக்கிறது. இறைவனுக்கு மனம் இல்லையாதலால் அவனில் அந்த விழைவு இயல்பாக இருக்கிறது.
நம்மில் அன்பின் பேரியல்பு பிரார்த்தனை. இறைவனின் அன்போ இயல்பான தவம். நமக்கு ஏக்கம் இருக்கிறது. அவனோ காத்திருக்கிறான் - ஆற்றங்கரைப் பிள்ளையார் போலோ, கயிலையில் தவத்திலிருக்கும் பரமன் போலோ, இல்லை ஒருநாள் வண்ணத்தைத் தாண்டி என்னை இவர்கள் உணர்வார்கள் என்று காத்திருக்கும் வானத்தைப் போலோ!
‘அன்பிற் சிறந்த தவமில்லை’ என்றான் பாரதி. ‘செய்க தவம்!’ என்று அவன் சொல்லும்போது அன்பு செய்வதில் நம்மை அவன் ஆட்படுத்துகிறான். அதேநேரம், பிறர்நலம் விழைதலே அன்பின் உன்னதம், ஆதாரம் என்றும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
மனித வடிவில் ஒருநாள் அன்பும் பேரன்பும் ஆரத் தழுவிக்கொள்ளும். அப்போது, தன்மை, குணம் எதுவுமில்லாத இறைக்கும் விழி பனிக்கும். அந்தத் தழுதழுப்பில் புதிய கவிதை பிறக்கும்!
நம்முடைய உள்ளக் கதவைத் தயக்கமின்றி மெல்லத் திறந்துவைக்கும் போதில்தான், வீட்டு விளக்கும் வீதி வெளிச்சமும் கைகுலுக்கிக் கொள்ளும். அந்தத் தருணம், வீதியோரம் கழற்றிப்போட்ட வாழைப்பழத் தோலாய் விதி கிடக்கும். அதையொரு பசு மெல்லச் சுவைக்கும். அந்தச் சுவைப்பில் பிரபஞ்சமே சிலிர்க்கும்.
(தரிசனம் நிகழும்)
- tavenkateswaran@gmail.com