

திருச்சி என்றதுமே அனைவரது சிந்தையிலும் தோன்றுவது, கம்பீரத் தோற்றம் கொண்ட மலைக்கோட்டையும் அதன் உச்சியில் வீற்றிருக்கும் பிள்ளையாரும்தான். அகண்ட காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள திருச்சி மலைக்கோட்டை, சுமார் 1,800 ஆண்டுகளுக்கு முன்பே, குணபரன் என்கிற மகேந்திர பல்லவ மன்னர் காலத்தில் ஆலய நிர்மாணப் பணிகள் தொடங்கி, மதுரை நாயக்க மன்னர்களால் விஜயநகர மன்னர்கள் முன்னிலையில் பூர்த்திசெய்யப்பட்டது.
பழமையான மலைக்கோயில்களில் ஒன்றான மலைக்கோட்டை 11 ஆண்டுகள் உழைத்து நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 275 அடி உயரமும் 417 படிக்கட்டுக்களையும் இந்தக் கோட்டை கொண்டிருக்கிறது. அப்பர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், தாயுமான அடிகள் ஆகியோரின் பாடல்களால் வெளிப்படுத்தப்பட்ட மிகச்சிறந்த கட்டுமானங்களைக் கொண்ட புனிதத் தலம் இது.
இந்தக் கோயிலின் மற்றுமொரு சிறப்பு இங்குள்ள இரண்டு குகைகள். ஒன்று மலை மீது அமைந்துள்ளது. அதில் கிரந்தத்திலும் கீழே உள்ள குகையில் 104 செய்யுள்கள் அந்தாதியாகவும் இருக்கின்றன. உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குக் கீழே தாயுமானவ சுவாமி கோயிலும் சிறப்பு வாய்ந்த ஆயிரங்கால் மண்டபமும் உள்ளன.
வினைகள் தீர்க்கும் விநாயகப் பெருமானின் ஆலயங்களில் மலை உச்சியில் அமைந்த கோயில் என்னும் பெருமை பெற்ற உச்சிப்பிள்ளையார் கோயில் இங்கே அமைந்ததின் பின்னணியில் சுவாரசியமான ஒரு வரலாறு இருப்பதை விநாயகர் புராணம் விரிவாக விளக்குகிறது.
தல வரலாறு: மகாவிஷ்ணு ராமாவதாரத்தில் ஸ்ரீ ராமராக, ராவணனிடம் போர் செய்து சீதையை மீட்டு அயோத்தி சென்றார். விபீஷ்ணன், சுக்ரீவன், அனுமன் ஆகியோரும் உடன் சென்றனர். சீதையை மீட்க விபீஷ்ணனும் துணையிருந்ததால் அசுர குலத்தில் பிறந்தவனாகவும் ராவணனுடைய தம்பியாகவும் இருந்ததாலும், நியாயத்தின் பக்கம் இருந்து நல்லெண்ணத்துடன் உதவி செய்ததால் ஸ்ரீ ராமர், விபீஷணன் மேல் நன்மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்.
அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகம் முடிந்ததும் விபீஷ்ணன் விடைபெற்றுத் திரும்பும்போது ஸ்ரீராமர், தான் வணங்கிவந்த ஸ்ரீரங்கநாதர் சிலையை விபீஷ்ணனிடம் நினைவுப் பரிசாக வழங்கினார்.
“இந்த விக்கிரகத்தை நல்ல முறையில் நீ பூஜை செய்துவந்தால் பல நன்மைகள் ஏற்படும்” என்று கூறி ராமன், விபீஷ்ணனுக்கு ஆசி வழங்கினார். மேலும், “இந்த விக்கிரகத்தை நீ இலங்கைக்குச் சென்று சேரும் வரை எந்த இடத்திலும் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் வைத்த இடத்திலேயே ஸ்ரீரங்கநாதர் தங்கிவிடுவார். மீண்டும் விக்கிரகமாக உள்ள அவரைத் தூக்க உன்னால் இயலாது” என்று கூறி அனுப்பினார் ஸ்ரீராமர்.
தேவர்கள் முறையீடு: அசுர குலத்தில் பிறந்தவனிடம் ஸ்ரீரங்கநாதர் சிலையைத் தந்து. அவன் முறையாக வழிபட்டால் நிச்சயம் விபீஷ்ணன் யாரும் வெல்ல முடியாத அசுர குலத் தலைவனாகத் திகழ்வான். அவன் நல்லவனாக இருக்கும் வரை அது நல்லதுதான். ஆனால், ‘மாறுவது மனம்’ என்பார்களே, அதுபோன்று ஒருவேளை விபீஷ்ணனின் நல்ல குணம் மாறி, தன்னுடைய பிறவிக் குணமான அசுரத்தன்மையை வெளிப்படுத்தினால் அது நமக்கு ஆபத்து என தேவர்கள் எண்ணினர்.
அதனால், ஸ்ரீராமர், விபீஷ்ணனிடம் தந்த சிலையை எப்படியாவது வாங்கியே தீர வேண்டும் என்று முடிவுசெய்தனர். அதனால், தேவர்கள் தங்கள் பயத்தை விநாயகரிடம் சொல்லி முறையிட்டனர். “அமைதியாக இருங்கள். ஆக வேண்டியதை யெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். ஆத்மலிங்கத்தை ராவணனால் இலங்கைக்கு எடுத்துச் செல்ல முடிந்ததா? அதுபோல் விபீஷ்ணனும், ஸ்ரீரங்கநாதர் சிலையை இலங்கைக்கு எடுத்துச் செல்ல முடியாது” என்று தேவர்களுக்கு நம்பிக்கை தந்து அனுப்பினார்.
குட்டுப்பட்ட விநாயகர்: இது எதையும் அறியாத விபீஷ்ணன், ரங்கநாதர் சிலையை இலங்கைக்கு எடுத்துக்கொண்டு தெற்காகச் சென்று கொண்டிருந்தான். மாலை நேரம் வந்ததால் இறைவனைப் பூஜிக்க வேண்டும் என்று கருதி காவிரிக்கரை பக்கம் வந்தார். ‘இறைவனைப் பூஜிக்கும் முன் குளிக்க வேண்டுமே, எப்படிக் குளிப்பது? இந்த ரங்கநாதர் சிலையைக் கீழே வைத்துவிட்டால் அந்த இடத்திலேயே ரங்கநாதர் அமர்ந்துவிடுவார் என்றாரே ராமர்.
என்ன செய்வது?’ என்று குழப்பத்தில் இருந்தான். அந்த நேரத்தில் மாடு மேய்த்துகொண்டு ஒரு சிறுவன் எதிரில் வந்துகொண்டு இருந்தான். அந்தச் சிறுவனை அழைத்து, “இந்தச் சிலையைப் பத்திரமாகக் கையில் பிடித்துக் கொள். நான் ஆற்றில் குளித்துவிட்டுவருகிறேன்” என்றார் விபீஷ்ணர்.
விபீஷ்ணர் குளித்துக்கொண்டிருக்கும்போது, அந்தச் சிறுவன் ஸ்ரீரங்கநாதர் சிலையைத் தரையில் வைத்துவிட்டு ஓடிவிட்டான். இதைக் கண்ட விபீஷ்ணர் கோபம் கொண்டு அந்தச் சிறுவனைத் துரத்திக்கொண்டு ஓடினார். சிறுவன் நிற்காமல் மிக வேகமாக ஓடி, அங்கிருந்த ஒரு மலை உச்சியில் ஏறி அமர்ந்தான். வேகமாக ஓடியதாலும் வெகு தொலைவுக்குச் சிறுவனைத் துரத்தி வந்ததாலும் களைப்பும் கோபமும் அடைந்த விபீஷ்ணர், அந்தச் சிறுவன் தலையில் ஓங்கிக் குட்டினார்.
குட்டுப்பட்ட அச்சிறுவன், “என்னைக் கண்டால் எல்லாரும் தன்னைத் தானே குட்டிக்கொள்வார்கள். ஆனால் நீயோ என்னையே குட்டிவிட்டாயே..” என்று சிரித்துக் கொண்டே, விநாயகராக விபீஷ்ணனுக்குக் காட்சி தந்து, அந்த இடத்திலேயே சிலையாக அமர்ந்தார். இதனால் உச்சிப்பிள்ளையாரின் சிலையில் விபீஷ்ணனிடம் தலையில் குட்டுப்பட்ட சிறுபள்ளம் இருக்கிறது.
மலைக்கோயில் உருவான கதை: மகேந்திரவர்ம பல்லவன் ஒரு முறை, மலைப் பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த மலைப் பகுதியைக் கிழக்குப் பக்கமாகப் பார்த்தபோது யானை முகமாகவும், வடக்கிலிருந்து பார்க்கும்போது மயில் நிற்பது போலவும், தெற்கில் இருந்து பார்க்கும்போது யானை போலவும் காட்சி கொடுத்தது மலை. (தற்போதும் மலைக்கோட்டையைச் சுற்றியுள்ள உயரமான கட்டிடங்களில் ஏறி நின்று பார்த்தால் மலைக்கோட்டையை இதே வடிவங்களில் காண முடியும்).
இதைக் கண்ட அரசர் இந்த மலையில் ஏதோ தெய்விகச் சக்தி இருக்கவேண்டும் என்று கருதி, மலை மீது ஏறிப் பார்த்தார். அங்கே ஒரு விநாயகர் சிலையைக் கண்டார். அதைத் தன் அரண்மனைக்கு எடுத்துச் செல்ல முயன்றபோது, சிலையை அசைக்க முடியவில்லை. அதனால், மலையிலேயே கோயில் கட்டினார். அக்கோயிலே, தற்போது உச்சிப் பிள்ளையார் குடிகொண்டு அருளும் ஆலயமாக விளங்கிவருகிறது.
உச்சிப்பிள்ளையாருக்கு, பக்தர்கள் பால் அபிஷேகமும், அருகம்புல் சாற்றியும் வழிபடுகின்றனர். எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் இவரை வணங்கிவிட்டுத் தொடங்கினால் காரியத்தில் வெற்றி உறுதி என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தற்போது மலைக்கோட்டையின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சந்நிதியும் அமைக்கப்பட்டுள்ளது. இவரும், காரிய சித்தி விநாயகராக விளங்குகிறார்.
ஆலய விழாக்கள்: மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா பத்து நாள்கள் சிறப்பாகக் கொண்டாடப் படும். விநாயகர் சதுர்த்தியன்று, தலா 75 கிலோ எடையில் இரண்டு பிரம்மாண்டமான கொழுக்கட்டைகள் உச்சிப் பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்யப்பட்டுப் பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகிக்கப்படுவது சிறப்பம்சம்.
அதே போன்று, சதுர்த்தியின் நிறைவு விழாவில், உற்சவ விநாயகருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடத்தப்படும். இந்த வைபவம் பார்ப்பவர்களுக்குக் கண்கொள்ளாக் காட்சியாக அமையும். இது தவிர, தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளும் இந்த ஆலயத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
சிறந்த ஆன்மிகத் தலமாகவும் சுற்றுலாத் தலமாகவும் விளங்கும் மலைக்கோட்டையும், அதில் வாசம் செய்யும் விநாயகப் பெருமானும், அவர் அருளால் ஸ்ரீரங்கநாதரும் திருச்சியில் அமர்ந்து, இன்றளவும் தங்களின் அன்பாலும் அருளாலும் மக்களுக்கு நற்கதி அளித்துவருகின்றனர்.