

இறைவனைக் குறிப்பிட்ட ஒரு நன்னாளில் பல்வேறு புண்ணியத் தலங்களிலும் வழிபடுவது நம் மண்ணின் மரபு. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கைலாயத் தலங்களும், முக்தித் தலமான பழைய காயலும் நம் முன்னே பிரம்மாண்டமாய் உயர்ந்து திகழ்கின்றன.
நவ கோள்கள் வரிசையில் அமைந்துள்ள நவ கைலாயங்கள் மற்றும் பழைய காயல் திருக்கோயில் சைவத்தின் புகழ் உலகெங்கும் பரவ வழிவகுத்துள்ளன. இது தொடர்பாக, தலபுராண வரலாறு சொல்வதை சுருக்கமாகக் காணலாம்:
முனிவருக்குக் கிடைத்த முக்தி: பொதிகை மலையில் தங்கி தமிழ் வளர்த்தவர் குறுமுனி அகத்தியர். ஒரு சமயம் அந்த மாமுனியின் முதன்மைச் சீடராகிய உரோமசர் முனிவருக்கு உலகின் அப்பனும் அம்மையுமாகிய பரமனையும், பார்வதியையும் நவகோள்கள் வரிசையில் வழிபட வேண்டும். அந்த தரிசனத்துக்குப் பின் முக்தியும் பெற வேண்டும் என்னும் எண்ணம் தோன்றியது. உடனே அவர் குருநாதராகிய அகத்திய மாமுனிவரிடம் தன் உள்ளத்தின் விருப்பத்தைக் கூறினார்.
அகத்தியர், உரோமசர் முனிவரிடம் ஒன்பது தாமரை மொட்டுக்களைக் கொடுத்து, ‘தாமிரபரணி தீர்த்தத்தில் இவற்றை மிதக்க விடு. அவை எங்கெங்கு கரை ஒதுங்குகின்றனவோ, அங்கெல்லாம் ஒரு சிவாலயத்தை எழுப்ப வேண்டும். அங்கு அருள் பாலிக்கும் ஈசனுக்கு கைலாசநாதர் என்றும் அம்மைக்கு சிவகாமி என்றும் பெயர் சூட்டி வழிபட்டு மகிழ்வாய்’ என்று அருளுரை கூறினார்.
உடனே குருவின் ஆணையை சிரமேற்கொண்டு தாமிரபரணி தீர்த்தத்தில் தாமரைகளை விட்டார் உரோமசர். அம்மலர்கள் மெல்ல அசைந்தாடி நதியின் போக்கிலேயே சென்றன. வழியில் பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்த பூ மங்கலம் ஆகிய நதிக்கரைத் தலங்களில் ஒதுங்கி நின்றன.
இந்த ஒன்பது தலங்களிலும் உரோமசர் முனிவர் அழகிய கலைநயமிக்க சிவாலயங்களை உருவாக்கினார். தாமிரபரணி கடலில் சங்கமிக்கும் இடமான சங்குமுக தீர்த்த கட்டத்தில் நீராடி கடற்கரையில் ஆழ்நிலை தியானத்தில் அமர்ந்தார்.
தவமுனிவரின் தியானத்தை மெச்சிய ஈசன் அங்கே காட்சியளித்து அவரது விருப்பப்படி முக்திப் பேற்றைத் தந்தார். அது சமயம் உரோமசர் பரமனிடம் ஒரு விண்ணப்பம் வைத்தார். அதன்படி ‘எதிர்காலத்தில் எவரெல்லாம் இத்தீர்த்தக் கட்டத்தில் நீராடி கோரிக்கையும், பிரார்த்தனையையும் வைக்கின்றனரோ அவர்களுக்கும் முக்திப் பேற்றினைத் தந்தருளுள வேண்டும்’ என்றார். ‘அப்படியே வரமளித்தேன்” என்று ஆசிர்வதித்து மறைந்தார் ஈசன். முக்தி வரம் கிடைத்து ஈசனிடம் சரண் புகுந்தார் உரோமசர்.
மன்னர்கள் போற்றிய கோயில்: இந்த அரிய நிகழ்வைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் அருள்மிகு சங்குமுகேஸ்வரரை பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபட ஆரம்பித்தனர். முகமண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்கிற கட்டமைப்பில் கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் முகமண்டபம், மகாமண்டபம் ஆகியவை நாயக்கர் காலத் திருப்பணியாகும். இதனைச் செய்து முடித்த மன்னரின் திருவுருவச் சிலை மகா மண்டபத் தூண் ஒன்றில் உள்ளது. தலவிருட்சம் வில்வம். முக மண்டபத்தில் நவகிரகம், கால பைரவர் சந்நிதிகள் உள்ளன. மகாமண்டப வடபுறம் தில்லைக் கூத்தரின் சந்நிதியும், தெற்கே வாசலும் உள்ளன.
நவகோள்கள் வரிசை: மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புப் பெற்ற இத்தலங்களில் நவகோள்கள் வரிசையில் கைலாசநாதரையும், சிவகாமியையும் பேரன்போடு தரிசித்து மகிழலாம். இவற்றில் முதல் மூன்று தலங்களை மேலைக் கைலாயங்கள் (சூரியன், சந்திரன், செவ்வாய்) என்றும், அடுத்த மூன்றினை (ராகு, வியாழன், சனி) நடு கைலாயங்கள் எனவும், கடைசி மூன்றினை (புதன், கேது, வெள்ளி) கீழ் கைலாயங்கள் என்றும் அழைக்கின்றனர்.
‘அர்த்த மண்டப வாசலில் விநாயகர், சுப்பிரமணியர், பிரதோஷ நந்தீசர் விக்ரகங்கள் உள்ளன. கருவறை மூலவராக, அருள்மிகு சங்குமுகேஸ்வரர் சாந்நித்யமிக்க தெய்வமாக காட்சியளிக்கிறார். தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை சந்நிதிகள் உள்ளன. மூலவர் விமானம் நாகர வடிவில் உள்ளது. சுவாமி சந்நிதியின் வலப்பக்கம் அம்பாள் கமலாம்பிகை தனிக்கோயில் கொண்டு எழந்தருளி இருக்கிறார். சுவாமி சந்நிதியைப் போன்றே இந்த அம்பாள் சந்நிதியும் எழிலாக உருவாக்கப்பட்டுள்ளது.
அம்பாள் கமலாம்பிகை வலக்கையில் நீலோத்பவ மலர் ஏந்தியும் இடக்கையைத் தொங்க விட்டபடியும் தன்னை நாடி வரும் அடியார்களின் கோரிக்கைகளை கனிவுடன் தீர்த்து வைக்கும் கருணாம்பிகையாக காட்சியளிக்கிறார். தினம் ஒரு கால பூசை நடைபெறுகிறது.
ஆண்டு முழுவதும் அநேக வைபவங்கள் நடக்கின்றன. குறிப்பாக ஆடி அமாவாசை, தை அமாவாசை, ஆனி திருவோணம் நட்சத்திர நாளில் வருஷாபிசேகம் ஆகிய மூன்று நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சங்குமுகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.
இந்த மூன்று வைபவங்களிலும் கோயில் நடை அதிகாலை ஐந்து மணிக்கு திறக்கப்பட்டு இரவு வரை தரிசனம் தொடர்ந்திருக்கும். அது சமயம் கைலாய வாத்திய இசையும், அன்னதானமும் நடந்த வண்ணம் இருக்கும்.
பழைய காயல் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் நடக்கும் அனைத்து கோயில் விழாக்கள் தொடங்கும் முன்னர் இந்த சங்குமுக தீர்த்தக் கட்டத்தில் வந்து புனித தீர்த்தம் எடுத்துச்செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதுபோல, பித்ருக்களுக்கு தர்ப்பணம் தருபவர்கள் தங்கள் கடமை முடிந்ததும் முன்னோர்களுக்கு முக்திப்பலன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு செல்கிறார்கள்.
அமைவிடம்: தூத்துக்குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் 16 கி.மீ. தொலைவில் பழைய காயல் திருத்தலம் அமைந்துள்ளது. பழைய காயலுக்கு முந்தைய பேருந்து நிறுத்தமான இரட்சண்யபுரத்தில் இறங்கி கோயிலை எளிதாக அடையலாம். கோயிலில் இருந்து சங்குமுக தீர்த்த கட்டம் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
- vganesanapk2023@gmail.com