

இஸ்ரவேல் நாட்டில் தாவீது என்னும் சிறுவன் வாழ்ந்துவந்தான். அவன் தன் தகப்பனாருடைய ஆடுகளை மேய்த்துவந்தான். அவனுடைய மூத்த சகோதரர்கள் எழுவரில் மூவர் இஸ்ரவேல் நாட்டு ராணுவத்தின் சேவகர்கள். தாவீதின் தகப்பன் ஈசாய், தாவீதை ராணுவத்தில் இருக்கிற அவனுடைய அண்ணன்களைச் சந்தித்து நலம் விசாரித்து வர அனுப்பினார்.
அந்நாள்களில் இஸ்ரவேல் நாட்டுக்கு அருகில் இருந்த பெலிஸ்தர் இஸ்ரவேல் மீது போர் தொடுக்கும்படி படையெடுத்து வந்திருந்தார்கள். பெலிஸ்திய ராணுவத்தில் கோலியாத் எனும் பெயர் கொண்ட ராட்சசன் ஒருவன் இருந்தான். அவனைக் கண்டு ஒட்டுமொத்த இஸ்ரவேல் ராணுவமும் பயந்து நடுங்கியது. ஒவ்வொரு நாளும் அவன் இஸ்ரவேல் ராணுவத்துக்கு முன்பாக வந்து நின்று, இஸ்ரவேல் மக்களின் கடவுளைச் சபித்து, ஏளனம் செய்வான். இஸ்ரவேல் நாட்டையும் மிகவும் இழிவாகப் பேசுவான்.
“நாம் எல்லாரும் போர் செய்வதற்குப் பதிலாக உங்களில் ஒருவனை நீங்கள் தேர்ந்தெடுங்கள். அவன், என்னோடு சண்டை போடட்டும். அவன் என்னைத் தோற்கடித்தால் எங்கள் முழு பெலிஸ்திய நாடும் உங்களுக்கு அடிமையாக இருப்பார்கள். நான் அவனைத் தோற்கடித்தால் நீங்கள் எல்லாரும் எங்களுக்கு அடிமைகள்” என அறைகூவல் விடுத்தான்.
தாவீது தன்னுடைய அண்ணன்களைப் பார்க்கப் போர்க்களத்துக்கு வந்த போதும், கோலியாத் முன்னால் வந்து இஸ்ரவேல் நாட்டையும் அவர்களின் கடவுளையும் சபித்துப் பேசினான். “பலமுள்ள இஸ்ரவேலின் கடவுளை நான் நம்புகிறேன். கடவுளின் பலத்தால் நான் இந்த ராட்சசனைத் தோற்கடிப்பேன் என்று தாவீது சொன்னான்.
தாவீதின் இந்த வார்த்தைகளை அன்றைய இஸ்ரவேலின் ராஜாவாக இருந்த சவுலுக்கு அறிவித்தார்கள். தாவீது வெறும் 15 வயதுச் சிறுவனாக இருந்தபடியாலும், போர் புரிவதில் அவனுக்குப் பயிற்சி இல்லாததாலும் தாவீதின் மீது சவுலுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. ஆனாலும், அவனது தைரியத்தையும் உறுதியையும் பார்த்து அந்த ராட்சசனுடன் சண்டைக்குச் செல்ல தாவீதுக்கு அனுமதி அளித்தான்.
போருக்குத் தேவையான ஆயுதங்களும் பாதுகாப்பு கவசங்களும் தாவீதுக்குக் கொடுக்கப்பட்டன. அவை எதையும் தாவீது எடுக்கவில்லை. கல் எரியும் ஒரு கவணையும் ஐந்து கூழாங்கற்களையும் மட்டும் எடுத்துக் கொண்டான். தன்னுடன் சண்டையிட வந்திருக்கும் தாவீதைக் கண்ட கோலியாத், “உன்னை வானத்துப் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் இரையாக்குவேன்” என்றான். தாவீது, கோலியாத்திடம் “நீ வாளோடும் ஈட்டியோடும் எறிவேலோடும் என்னிடம் வருகிறாய்.
நானோ நீ இகழ்ந்த இஸ்ரவேலின் கடவுளாகிய ஆண்டவர் தம் பெயரால் வருகிறேன். இன்றே ஆண்டவர் உன்னை என் கையில் ஒப்புவிப்பார். நான் உன்னை வீழ்த்தி, உன் உடலைத் துண்டிப்பேன். ஆண்டவர் வாளினாலும் ஈட்டியினாலும் மீட்கிறவர் அல்லர் என்று இந்த மக்கள் கூட்டம் அறிந்து கொள்ளட்டும். ஏனெனில், இது ஆண்டவரின் போர்! அவரே உங்களை எங்கள் கையில் ஒப்புவிப்பார்” என்றான்.
கோலியாத் தாவீதைத் தாக்க விரைந்து ஓடினான். தாவீது ஒரு கல்லை எடுத்துக் கவணில் வைத்துச் சுழற்றி கோலியாத்தின் நெற்றியைக் குறிபார்த்து அடித்தான். அந்தக் கூழாங்கல் அவனது நெற்றிக்குள் தாக்கிப் பதியவே தரையில் முகம் குப்புற விழுந்தான்.
நம் முன் இருக்கும் பிரச்சினை எவ்வளவு பெரிதாக இருந்தாலும் நம்பிக்கையுடன் வேண்டுதலை வைக்கும் எவருக்கும் உதவி செய்கிற கடவுளாக யேசு இருக்கிறார் என்று திருமறை போதிக்கிறது.
- merchikannan@gmail.com