

பாரம்பரியத்தின் பெருமையைக் காப்பாற்ற நினைப்பவர்களுக்குப் பழமையின் பெருமையாகத் தோன்றும் கிருஷ்ணன், புதுமையை நாடும் இளைஞர்களுக்குப் புத்துணர்வின் வடிவமாகிறான். ஒரு மயிலிறகு, ஒரு புல்லாங்குழல் வரைந்தால் போதும். “இது கிருஷ்ணன்!” எனக் குழந்தைகள் குதூகலிப்பார்கள்.
உலகத் தமிழ் மாநாடாக இருந்தாலும், ஐநா அவையாக இருந்தாலும் அங்கே கிருஷ்ணன் பாடுபொருளாகிறார். தெற்கே ஆண்டாள், வடக்கே மீரா, என மனங்களில் உறையும் தத்துவமாகக் கொண்டாடப்படுபவர் கிருஷ்ணன்.
வட மொழியில் ஊத்துக்காடு வேங்கட கவி எழுதியிருக்கும் ‘ஸ்வாகதம் கிருஷ்ணா’ அப்படிப்பட்ட ஒரு பழமையான பாடல். இந்தத் தலைமுறையைச் சேர்ந்த மது, புல்லாங்குழல் கலைஞர் பூர்ணிமா ஈமனி, மிருதங்கம், கஞ்சிரா, கொன்னக்கோல் கலைஞர் அக்ஷய் அனந்தபத்மநாபன் ஆகியோர் இந்தப் பாடலைப் பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைக்கும் விதத்தில் பாடி அசத்தியிருக்கின்றனர்.
ஜதியைச் சொல்லியபடியே அதை வாத்தியத்தில் வாசிப்பது அரிதான விஷயம். அது அனந்துவுக்கு நன்றாகவே கைவசமாகியிருக்கிறது. கொன்னக்கோல் மூலம் தொடங்கும் பாடலின் இடையிசையில் கர்னாடக இசையில் கையாளப்படும் திஸ்ர நடைக்கு இணையான மேற்குலகின் வால்ட்ஸ் பீட்டில் ஸ்வாகதம் கிருஷ்ணன் மகிழ்ச்சியாக மலர்வதை நீங்களும் கேட்கலாம், பார்க்கலாம், ரசிக்கலாம்!
பரமானந்தத்தின் ஆனந்தம்! - முழுக்க முழுக்க கர்னாடக இசையின் பின்னணியில் இந்தப் பாடலைக் கேட்பது சுநாதம். ஆனந்தம். ‘பிருந்தாவன சாரங்கா’ ராகத்தின் தன்மை மாறாமல் இந்தத் தலைமுறைக்கு ஏற்ப அதே பாடலைக் கேட்பதும் பரமானந்தத்தைத் தருகிறது.
இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி தீட்சிதரின் புகழ்பெற்ற கிருதியான ‘ரங்கபுர விஹாரா’வை அனைத்திந்திய வானொலி நிலையத்தில் பாடியிருக்கிறார். ஐநா அவையின் அரங்கிலும் இந்தப் பாடலை எம்.எஸ். பாடியிருக்கிறார். மிகவும் பிரபலமான இந்தப் பாடலை மூத்த இசைக் கலைஞர்கள் பலரும் பாடியிருக்கின்றனர்.
‘பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகர் உளானே…’
தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் இந்தப் பாசுரத்தைப் பாடிய பின், பிருந்தாவன சாரங்கா ராகத்தின் மெலிதான ஆலாபனையைத் தொடர்ந்து ஹரிஷ் சிவராமகிருஷ்ணனின் குரலில் ஒலிக்கிறது, முத்துசாமி தீட்சிதரின் ‘ரங்கபுர விஹாரா’.
சுவாமி சீதாராமனும் பிரவீன்குமாரும் பாடும் வார்த்தைகளைச் சேதப்படுத்தாமல் மயிலிறகின் வருடலாக கீபோர்ட், கிதாரில் மென்மையான முகப்பு இசையையும் கார்டு புரொமோஷன்களையும் இடையிசையையும் இசைத் தூறலாக ஒலிக்கவிட்டிருக்கின்றனர்.
ஹரிஷ் சிவராமகிருஷ்ணனின் ஆலாபனையும் உச்சஸ்தாயியை எட்டிப் பிடிக்கும் லாகவமும் மிகவும் இயல்பாக வெளிப்படுகின்றன. சம்ஸ்கிருதமாக இருந்தாலும் வார்த்தைகளின் உச்சரிப்பு தெளிவாக இருக்கிறது. மனதை விசாலப்படுத்தும் ரங்கனின் பெருமை பேசும் வரிகளும் அடுக்கடுக்காக விரியும் பாடலின் அர்த்தங்களும் நம்மைப் பரவசப்படுத்துகின்றன.
கிருஷ்ண பிரேமையில் உங்களையும் மகிழ்விக்க ரங்கபுர விமானத்தில் பயணிக்கத் தயாராகுங்கள்!
ஆறு நிமிடத்தில் 25 கிருஷ்ண பாடல்கள்! - தாசர்களால் எழுதப்பட்ட மிகவும் பிரபலமான பஜன் பாடல்களிலிலிருந்து 25 பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் முதல் வரிகளைக் கொண்டே ஆறு நிமிடங்களுக்கு நீளும் ஒரு ‘மேஷ்-அப்’ பாமாலையை ஏகேயெஸ், லக் ஷ்மி குழுவினர் தொடுத்திருக்கின்றனர்.
மீரா தொடங்கி தாசர் பாடல்களுக்கென்றே ஆன்மிக பக்தர்கள் பலர் ரசிகர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட பக்தர்களின் உயரிய ரசனைக்கு உரிய விருந்தாக கிருஷ்ண ஜெயந்திக்காக ஒலிக்கிறது இந்தப் பாடல் தொகுப்பு. ஒவ்வொரு பாடலின் விரிவான வடிவமும் இந்த இணைப்பிலேயே இருக்கும் வகையில் உருவாக்கியிருக்கின்றனர்.
தனிமையில் ஆசுவாசமாகப் பக்திப் பாடல்களை விரும்பிக் கேட்பவருக்கும், நாமசங்கீர்த்தனத்தில் இணைந்து பாட விரும்புபவருக்கும் இதில் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் பயனுள்ளவையாக இருக்கும்.
கண்ணன் வருகின்ற நேரம்! - ‘ஸ்வாகதம் கிருஷ்ணா’ எழுதிய ஊத்துக்காடு வேங்கட கவி, காவடிச் சிந்து மெட்டில் ‘கண்ணன் வருகின்ற நேரம்’ எனும் தமிழ்த்தேன் சிந்தும் பாடலையும் எழுதியிருக்கிறார். கண்ணன் வரும் நேரத்தில் என்னவெல்லாம் நடக்கிறது பாருங்கள் என்பதைப் பட்டியலிடும் பாங்கில் சிறகை விரித்துப் பறக்கிறது அவரது கற்பனை. மோனக் குயிலுக்கு நிகராகக் கண்ணனின் குழலோசை கேட்கிறது.
அதைக் கேட்கும்போதே நம்மைப் பிரிந்த உயிர்கூட நம்மைச் சேரும், நதி பாடும் என்று நயமான கற்பனைகளில் நாமே தொலைபவர்களாகவும் நாமே நம்மைக் கண்டறிபவர்களாகவும் ஒரு கண்ணாமூச்சி ஆட்டத்தை இந்தப் பாடல் நம் மனத்தில் ஏற்படுத்துகிறது.
“கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை
என்று கண்டதும் வண்டொன்றும் வரலை
இது கனவோ அல்ல நனவோ
எனக் கருதாதிரு மனமே
ஒரு காலமும் பொய் ஒன்றும் சொல்லேன்
எங்கள் கண்ணன் அன்றி வேறு இல்லேன்!”
- எனும் வரிகளை மேலோட்டமாக உதட்டிலிருந்து பாடாமல், மனதின் ஆழத்திலிருந்து அனுபவித்துப் பாடியிருக்கிறார் சிவ ஸ்கந்தபிரசாத். அவரின் குரலில் இருக்கும் உருக்கமும் ஏக்கமும் கேட்கும் நம்மையும் தொற்றிக்கொள்கின்றன! கண்ணனின் கானம் கேட்க உங்கள் செவிகள் தயாரா?