

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து மதீனாவுக்கு வந்த பின்னர் மக்காவில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அதனால் மக்கள் பெரும் துன்பத்தில் தவித்தனர். அப்போது, யமாமா நாட்டிலிருந்து மக்காவுக்கு உணவுப் பொருள்கள் வந்தன. மக்களின் பசித் தீயை அவை ஓரளவுக்கு அணைத்தன. இந்நிலையில் யமாமா நாட்டுத் தலைவர் திமாமத் இப்னு ஆதால் மதீனா வந்து நபிகளாரைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றார்.
நபிகளாருக்கு மக்கத்து நிராகரிப்பாளர்கள் இழைத்த பல இன்னல்களையும் கொடுமைகளையும் கேள்விப்பட்ட திமாமத் (ரலி) நாடு திரும்பியதும் மக்கத்து குரைசிகளுக்கு உணவுப் பொருள்கள் அனுப்புவதை உடனே தடைசெய்தார்.
இச்சிக்கலில் இருந்து மக்களைக் காப்பாற்ற குரைசிகளின் தலைவர் அபூஸுப்யான் மதீனாவுக்கு விரைந்தார். அங்கு நபிகளாரைச் சந்தித்து மக்காவின் நிலை குறித்து எடுத்துரைத்தார்.
“முஹம்மதே! பத்ர் போரிலும் நாங்கள் பலரையும் இழந்துவிட்டோம். இப்போது பஞ்சத்திலும் பலரையும் இழக்கின்ற சூழலில் உள்ளோம். எனவே முஹம்மதே! ரஹ்மத்துல் லில் ஆலமீனாக (அகில உலகிற்கும் அருட்கொடையாக) அனுப்பப்பட்டவர் என்று நீர் சொல்கிறீர் அல்லவா?” என்றார் அபூஸுப்யான்.
“ஆம்!” என்றார் நாயகம் (ஸல்).
“அப்படியானால் அருள்கூர்ந்து இப்பஞ்சம் எங்களை விட்டு நீங்கிட பிரார்த்தனை புரியும்” என்றார்.
நபிகளார், “பஞ்சத்திலிருந்து அம்மக்கள் உடனே விடுபடவேண்டும்” என்று பிரார்த்தனை புரிந்தார்.
பிரார்த்தனை செய்ததோடு நபிகள், உடனே யமாமாவின் திமாமத் இப்னு (ரலி) ஆதாலுக்கு ஆள் அனுப்பி மக்காவின் மீதிருந்த தடையை நீக்கிடவும் உணவு தானியங்களை உடனே அனுப்பவும் ஏற்பாடு செய்தார்.
எதிரிகள் மீதும் நபிகளார் காட்டிய இந்த இரக்கமானது, மனிதாபிமானத்தின் உயர்வினை உலகிற்கு எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
இறைவன் அம்மக்களின் பஞ்சத்தைப் போக்கினான். மக்காவில் நிலைமை சீரானது. ஆனால், அம்மக்கள் திருந்தவில்லை. நபியின் மீது தங்களது அட்டூழியத்தை மீண்டும் கட்டவிழ்த்துவிட்டனர்.
இதுகுறித்து திருக்குர்ஆனின் (23/75) வசனம் இவ்வாறு பேசுகிறது:
“வேதனையைக் கொண்டு அவர்களை (மக்காவின் குரைசிகளை) திட்டமாக நாம் (பசி பட்டினியால்) பிடித்தோம். அப்பொழுதும் அவர்கள் தங்களுடைய ரப்புக்கு (இரட்சகனுக்கு) அடிபணியவில்லை. அவர்கள் தாழ்ந்து (பணிந்து பிரார்தித்ததும்) கொண்டதுமில்லை.
கஷ்டம் ஏன் வந்தது என்று மனிதன் சிந்திப்பதில்லை, அதில் பாடமும் படிப்பதில்லை. ஏற்பட்ட கஷ்டத்தை எப்படியாவது போக்கிட முயல்கின்றான். ஆனால் அக்கஷ்டமானது அவனை விட்டு நீங்கியதும், அவன் மீண்டும் பழைய நிலைக்கே திரும்புகிறான்”.
- ervaimohdsalahudeen@gmail.com