

நீங்கள் இறைவனை நம்பலாம், அல்லது நம்பாமல் இருக்கலாம். ஆனால், இயற்கையின் தாக்கத்தைத் தவிர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதை அறிந்திருப்பது நல்லது. ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் – நான் நம்புகிற, நீங்கள் நம்பாத இறைவனாயினும், நான் அனுபவிக்கிற, நீங்கள் வெல்ல முயல்கிற இயற்கையாயினும் சரி – இரண்டுக்கும் நம் மீது அபிப்பிராயம் எதுவும் கிடையாது.
தென்றல் இனிமையானது, பாலைவனம் கொடுமையானது என்பதெல்லாம் நம்முடைய எண்ணங்களே. இயற்கைக்கு இரண்டும் இயல்புகளே. ஒன்றை இன்பமென்றும் இன்னொன்றைத் துன்பமென்றும் நாம்தான் பெயர் வைத்துக் கொண்டாடுகிறோம், திண்டாடுகிறோம். இறைவன் எதற்கும் பெயர் வைக்கவில்லை! கரும்பலகையில் எழுதியோ, கம்ப்யூட்டரைத் திறந்தோ எந்த வகுப்பும் எடுக்கவில்லை.
பயிருக்கு மழை மட்டுமா தேவை? வெயிலும்தான். வெயில், புழுவுக்குப் பகை மட்டுமா? கதிரொளி இல்லையேல் புழுவும் ஊர்வதற்கு உயிர் நேராது.
அறியாமையும் இயல்பும்: இறைவனோ, இயற்கையோ இரண்டுக்கும் எந்தவிதமான மனப்பான்மையும், எதைக் குறித்தும், எவரைப் பற்றியும் எந்த அபிப்பிராயமும் கிடையாது. நம்மால் அப்படி இருக்க முடியுமா? நமக்குத்தான் ஓயாமல் எண்ணும் தளமாக, சிந்திக்கும் கருவியாக, மனம் என்ற ஒன்று இருக்கிறதே! மனித உருவில் உலவும் ஒவ்வொரு ஜீவனும் மனம் செலுத்தும் வழியில்தான் நடக்கிறது.
மனதின் ஆளுமை தவிர்க்க முடியாத ஒன்றுதான். மனசாட்சியின்படி நடக்கப் பழகும்போதுதான், ஜீவன் என்பது உண்மையில் மனிதனாகிறது. தன்னுள் திரும்பி, தான் யாரென்று தீவிரமாக விசாரிக்கத் தொடங்கிய பிறகு மனம் தேவைப்படாமலேயே மற்றவர்களுடன் உறவாடும் ஒரு வசதி அந்த மனிதனுக்கு ஏற்படுகிறது. ஒரு சராசரி மனிதனுக்கு இது அதிசயமாக, அல்லது நம்ப முடியாத ஒன்றாகத் தோன்றலாம். அவனுக்கு அறியாமை எப்படி இயல்போ, அதேபோல ஞானிக்கு இது சகஜம்.
இலக்கை நோக்கி இயக்கம்: நீங்கள் எதை நம்புகிறீர்களோ நம்பாதிருக்கிறீர்களோ, உங்களுக்கு அமைதி தேவைப்படுகிறதா இல்லையா? அமைதியை விரும்பாதவர்கள், அறிந்தோ அறியாமலோ அதை நாடாதவர்கள் யார்? அமைதியைப் பெறுவதற்காக ஆர்ப்பாட்டத்தை நாடுவதும் அமைதிக்கான முயற்சிதான் என்பதைப் புரிந்துகொண்டால்தான், மொத்தப் பிரபஞ்சமும், அண்டபகிரண்டங்களும் உயிர்மயமானவை என்பதும், எல்லாம் ஒரு வல்லமை மிகுந்த சக்தியால் இயக்கப்படுகின்றன என்பதும், எல்லாம் ஓர் உன்னதமான இலக்கை நோக்கியே இயங்குகின்றன என்பதும் புரியவரும். இந்த ஆழமான புரிதலை எய்துவதற்கும் மனமே போதும்.
இந்தப் புரிதலின் மூலம், மனிதன் அபிப்பிராயங்களின் ஆளுமையிலிருந்து விடுபடுகிறான். அப்போது, களேபரமாய் இருந்த மனது, அவன் கட்டளையை எதிர்பார்த்துக் கைகட்டி நிற்கிறது. இதுதான் ஞானியின் நிலை. இதுதான் பிள்ளையார் முன்பு கைகூப்பி நிற்கின்ற மூஞ்சுறு!
சத்தியத்தில் ருசி கண்டவனுக்கு மனப்பான்மை இருக்காது. மனப்பான்மை இல்லாதவனுக்கு அபிப்பிராயங்கள் கிடையாது.அதுதான் கண்ணன் கீதையில் சொல்லும் ‘சமதிருஷ்டி.’ இதைத்தான்,
கேடு மாக்கமுங் கெட்ட திருவினார்
ஓடுஞ் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிட லேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்
- என்று பன்னிரெண்டாம் திருமுறை பளிச்சென்று சொல்கிறது.
இமயத்தில், ஜாகேஷ்வருக்குச் சென்று கொண்டிருக்கிறேன் நான். அங்கிருந்து வந்துகொண்டிருந்தார் குருநாதர். நெருக்கடியான அல்மோராவில் ஒரு வளைவில் நின்றுகொண்டிருக்கிறோம். பனிச்சிகரங்களைப் பார்த்தபடி பல்குத்திக் கொண்டிருக்கிறார். மனத்தில் பதிந்துவிட்ட அந்த ஞானப் புன்னகை.
இன்பமும் துன்பமும்: ‘மனிதன் இன்பத்தை நாடி நாடித் துன்பத்தில் விழுகிறான். நானென்ன மனிதன் இன்பத்தை நாடக் கூடாது துன்பத்தை நாட வேண்டும் என்றா சொல்கிறேன்? அவன் இன்பம் தரும் என்று நினைப்பது துன்பத்தில் அல்லவா முடிகிறது? அவன் எதை இன்பம் என்கிறானோ அதுவே துன்பம் என்கிறேன் நான்.
இரண்டுமே அவன் வைத்துக்கொண்ட பெயர்களே தவிர, இரண்டு அங்கே இல்லை என்கிறேன்,’ என்று சொல்லிச் சற்றே மலை முகடுகளைப் பார்த்துவிட்டு, என்னைப் பார்த்துக் கேட்டார், ‘எந்தக் கல்லாய் இருந்தால் என்ன, சொந்தப் பல்லை உடைத்துக் கொள்ள!’
இன்பம் துன்பம் இவற்றைத் தள்ளி வைத்துவிட்டு, அமைதியை அதுவும் நம்முள் விழைந்தால், ஒரு மகத்தான நிம்மதி தோன்றும். மனப்பான்மைகளாலும் அபிப்பிராயங்களாலும் இதுவரை மறைந்திருந்த ஒரு மகத்தான அழகு முதன்முறையாக நமக்குப் புலனாகும். ஆக்கம், அழிவு, ஜனனம், மரணம், அழுகை, சிரிப்பு என்று நாம் அன்றாடம் உலகில் பார்க்கின்ற காட்சிகள், நிகழ்வுகள் எல்லாம் அப்படியே இருக்கும். எதுவும் மாறியிருக்காது. ஆனால் நம் பார்வை அறவே மாறியிருக்கும்.
குறைபட்டுக் கொள்ள மாட்டோம்
குதூகலிக்க மாட்டோம்
சிறைப்பட்டுப் புழுங்க மாட்டோம்
சிலிர்த்துக்கொள்ள மாட்டோம்
நிறைவே நிம்மதி.
- அந்த நிம்மதியே இறைவன் சந்நிதி. அங்கே தனியே இறைவன் என்று ஒன்று கிடையாது. உள்ளில் தெரிவதே ஊரெங்கும் தெரியும்.
(தரிசனம் நிகழும்)
- tavenkateswaran@gmail.com