

உற்றவரம் ஏது?
உள்ளிழுக்கும் மூச்சு!
உயர்பெருமை யாது? இதை
உணர்கின்ற வாய்ப்பு!
பெற்றதுவே யாவும், என்னும்
பெரும்பணிவே ஞானம்
பிரிவற்றது வானம், இதைப்
பேசுவதே கானம்!
சிலருக்குக் கடவுளைக் காணவேண்டும் என்னும் ஆவல் இருக்கிறது. சிலருக்கு, அவன் கண்ணில் படட்டும், அவன் தலைகுனியும் வண்ணம் நாலு வார்த்தை கேட்கவேண்டும் என்னும் ஆத்திரம் இருக்கிறது. அந்த ஆவலுக்கும், இந்த ஆத்திரத்திற்கும் அகப்படாமல், முகம் தெரியாத புன்னகையொன்று மானுடத்தை நெருடிக் கொண்டுதான் இருக்கிறது.
காணவேண்டும் என்னும் ஆவலும், அப்படி ஒருவன் கிடையவே கிடையாது என்னும் ஆத்திரமும்தான் அவன் கண்ணில் படாததற்குக் காரணம். ஏனென்றால், இரண்டுமே அபிப்பிராயங்களாக இருந்தால்கூடப் பரவாயில்லை. அவை மாறியோ, மறந்தோ போகலாம். இறுக்கமான தீர்மானங்களாக இருப்பதே தொல்லை. சிந்தனையை இறுக்கிக்கொண்டே இருக்குமே!
காற்று எங்கே? காற்று எங்கே? என்றொருவனும், காற்று என்று ஒன்று கிடையாது என்று இன்னொருவனும் கத்திக்கொண்டே இருக்கிறார்கள். எப்படிக் காண்பான் அவன்? எதைப் போய் மறுப்பான் இவன்? முன்னவன், ஒருநாள் புயலின் புள்ளியாய் பிரமிக்கக் கூடும். பின்னவனோ, ஒரு மாலைப் பொழுதில் இளந்தென்றலால் புரட்டிப் போடப்படக் கூடும்!
எதையேனும் ஒன்றைக் கற்பிக்கும் வரை, உண்மை என்பது நழுவிக்கொண்டேதான் இருக்கும். தன்மைகளைக் கற்பித்தல், பெயர்களைச் சூட்டல் இவையெல்லாம் நம்முடைய வரம்புகளின் பகிரங்கங்களே அன்றி உண்மையின் சொரூபமாகாது. உண்மைக்குச் சொரூபம்தான் ஏது!
கடவுள் என்னும் உண்மையை அல்லது உண்மை என்னும் கடவுளை, மனம் என்னும் வரம்பிலிருந்தபடி எப்படி அறிவது?
‘மனத்தைத் திருப்பு' என்றார் குருநாதர்.
‘என்ன ஐயா சொல்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.
‘அதோ பார்! அந்தக் கோயிலில் கதவுகள் கோணல் மாணலாக இல்லை. நேர்த்தியான வரிசையில்தான் அவை நிறுவப்பட்டிருக்கின்றன. எத்தனை படிகள் இருந்தாலும், நீ எவ்வளவு தொலைவில் நின்று கொண்டிருந்தாலும், அர்ச்சகர் கற்பூரத் தட்டை ஏந்தும்போது, உன்னால் அந்த தெய்வத்தைக் காண முடிகிறதா, இல்லையா?’
`ஆம், ஐயா.'
‘அப்படித்தான், எல்லா வரம்புகளும் உள்ள மனத்தைத் திருப்பி எந்த வரம்புமே இல்லாத சத்தியத்தை உன்னுள்ளே நீ தரிசிக்கலாமே!’ என்று கன்னத்திலும் போட்டுக்கொண்டு, கண்சிமிட்டிப் போனார் என் கடவுளாகிய குரு.
நம்மை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். நம்மில்தான் எத்தனை எண்ணங்கள், உணர்ச்சிகள், குழப்பங்கள், தெளிவுகள், தேவைகள், அறிவுகள், அறியாமைகள்! இவற்றுக்கெல்லாம் ஆதாரம் எது? கல்வியா? உலக அனுபவமா? நம்முடைய தனிப்பட்ட திறமையா? ஒன்றுமே இல்லை! உயிர் ஐயா உயிர்!
உயிரில்லாமல் மனமில்லை. மனமில்லாமல் நமக்கு மகிழ்ச்சியும் இல்லை, துன்பமும் இல்லை. உயிருக்கு ஏது ஆதாரம்? மூச்சு! கவனியுங்கள், காற்றில்லை, மூச்சு! சுவாசம்! பிராணன்! தமிழில் ‘கால்' என்னும் சொல் இதைத்தான் குறிக்கிறது என்று கொள்கிறேன் நான். உயிருக்கு ஆதாரம் கால். அது வெறும் காற்றில்லை. ஆதாரம் காற்றானால் அவனியிலே மரணமேது!
காலனை ஆளும் கடவுள்: `கால்' என்னும் சொல்லுக்கும் `காலன்' என்னும் சொல்லுக்கும் தொடர்பிருப்பதாக நான் கருதுகிறேன். உயிரை உடம்பிலிருந்து கூறு போடுகிறவன் கூற்றுவன். நிச்சயித்த நேரத்தில் உயிரை எடுப்பவன் காலன். அவன் காற்றைப் பிடுங்குவதில்லை. கால் என்னும் உயிரைப் பிடுங்குகிறான். எனவே அவன் காலன்.
என்னடா இது, கடவுளைக் காட்டென்றால், காலனைக் காட்டி பயமுறுத்துகிறாயே என்று பாயாதீர்கள்! கடவுள் யார்? காலகாலன். காலனையும் ஆளுபவன். ஏனென்றால், காலன் என்பவன் அல்லது மரணம் என்பது உயிரை எடுப்பது. கொடுப்பதல்ல. கடவுளை எதனால் காலனுக்கும் மேலானவன் என்கிறோம்? உயிரைக் கொடுப்பதாலா? இல்லை! என் குருநாதர் எனக்குச் சொன்னதை நீங்களும் கேட்டுப் பாருங்கள்:
‘ஒரே நேரத்தில் ஜனனமாகவும் மரணமாகவும் எது இருக்கிறதோ அதுவே கடவுள்.’
கடவுளே இறப்புக்கும், பிறப்புக்கும் காரணம் என்று பொதுவாகச் சொல்கிறோம். அது அல்ல குருநாதர் சொன்னது. ‘ஒரே நேரத்தில்' என்றார் பாருங்கள்! அதில்தான் உண்மை உட்கார்ந்து கொண்டு கண்ணைச் சிமிட்டிச் சிமிட்டி நம்மைப் பரிகசிக்கின்றது. ஒரே நேரத்தில் ஜனனமாகவும், மரணமாகவுமா? அதை எப்படிப் புரிந்து கொள்வது?
மூச்சை கவனி! முக்தி உன் விரல்நுனி!
பேச்சை நிறுத்து! பேருலகில் நீ தனி!
ஆச்சரியங்கள் அடங்கும் தருணம்
அவத்தைகளெல்லாம் ஒடுங்கும் தருணம்....
மூச்சு ஒடுங்க ஒடுங்கத்தான் மனம் அடங்கும். மனம் அடங்கினால்தான் உயிர் புரியும். உயிர் புரிந்தால்தான் உண்மை தெரியும். உண்மையில், உண்மைதான் நாம் என்னும் உண்மை தெளிவாகும். அந்தத் தெளிவில், தேகம், புலன்கள், மனம், புத்தி, சித்தம், ஆணவம் என்னும் அத்தனை கதவுகளும் ஒரே நேரத்தில் திறக்கும்.
பேதங்கள் ஒன்றன் மீது ஒன்று விழுந்து குலையும். அங்கே குருவின் திருக்கரம் ஒரு தட்டை ஏந்தும். அந்தக் கற்பூர ஒளியில் கடவுள் முகம் தெரியும். அந்த முகத்தில் உங்கள் சாயை தென்படும். அதைக் கண்டு, உங்கள் அந்தரங்கம் சற்று நாணும். ஓரத்தில் நின்று கொண்டிருந்த குருவின் முகத்தில் ஒரு குறுநகை அரும்பும். அது கடவுளின் திருமுகத்தில் எதிரொளிக்கும்.
அங்கே குரு மறைவார். அப்போதுதான், அவர் மறைந்தபின் தொடர்ந்து நின்றுகொண்டிருக்கும் கடவுள் அவரேதான் என்ற ஞானம் நேர்ந்து உங்கள் விழிகள் பனிக்கும். அந்தக் கணத்தில் கடவுள் என்று நீங்கள் தனியாகக் கண்ட ஒன்றும் காணாமல் போயிருக்கும்.
நீங்கள் மட்டும் மிஞ்சியிருப்பீர்கள். ஒற்றை உயிராகவும் எல்லா உயிர்களாகவும் ஜனனமாகவும் மரணமாகவும் ஒரே நேரத்தில்.
- தரிசனம் நிகழும்
- tavenkateswaran@gmail.com