ஓணம்: மன்னனை வரவேற்கும் மக்களின் திருவிழா!

ஓணம்: மன்னனை வரவேற்கும் மக்களின் திருவிழா!
Updated on
2 min read

கேரளத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஓணம் பண்டிகை தனித்துவமானது. அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் இந்தப் பண்டிகை திருவோணம் நட்சத்திரம் வரை பத்து நாள்களுக்குக் கொண்டாடப்படுகிறது.

மன்னன் மகாபலி சக்கரவர்த்தி மூவுலகையும் வெற்றி கொண்டார். வீரமும் தீரமும் மிக்க அந்த மன்னர் ஈகையிலும் சிறந்து விளங்கினார். இதனால் அவருக்கு ஏற்பட்ட ஆணவத்தையும் அவரு டைய பக்தியின் மேன்மையையும் உலகுக்கு உணர்த்த திருமால் எடுத்த அவதாரமே வாமன அவதாரம்.

மூன்று உலகிற்கும் தானே முதல்வன் என்று ஆணவத்தோடு இருந்த மகாபலி சக்கரவர்த்தியிடம் வாமன ரூபத்தில் வந்த திருமால் மூன்று அடி இடம் கேட்டார்.

“குள்ளத் தோற்றத்தில் மூன்றடி தானம்... தந்தேன்" என்றார் மகாபலி சக்கரவர்த்தி.

வாமன ரூபத்திலிலிருந்து விஸ்வரூபம் எடுத்த திருமால் முதல் அடியில் மண்ணையும் இரண்டாவது அடியில் விண்ணையும் எடுத்துவைக்க, மூன்றாவது அடிக்குத் தன் தலையையே (ஆணவத்தை) கொடுத்த மகாபலி திருமாலின் உள்ளத்திலும் மக்களின் உள்ளங்களிலும் நிறைந்தார். மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை பகவான் விஷ்ணு அடக்கிய சம்பவத்தை ஒட்டி இந்தத் திருவிழா கொண்டாடப்படுவதாக ஐதிகம்.

விஸ்வரூப தரிசனத்தோடு காட்சி கொடுத்த திருமாலிடம், மகாபலி, ஆண்டுதோறும் திருவோண நட்சத்திரத்தில் தன் நாட்டு மக்கள் வளமுடன் வாழ்வதைப் பார்வையிட வரம் அருள வேண்டினார். அதன்படி மகாபலி சக்கரவர்த்தி ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் மக்களைக் காணவருவதாக நம்பப்படுகிறது. அதனால் அவரை வரவேற்கும் விதத்தில் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்கின்றனர்.

சிங்கம் மாதத்தின் சிறப்பு: ஒவ்வொரு ஆண்டும் சிங்கம் எனப்படும் மலையாள மாதத்தில் இந்தப் பண்டிகை தொடங்குகிறது. பண்டிகை அஸ்தம் நட்சத்திர நாளில் தொடங்கும். தொடர்ந்து சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என பத்து நாள்கள் முழுவதும் வெகு விமரிசையாக ஓணம் கொண்டாடப்படும்.

பிரம்மாண்டமான யானைகளின் அணிவகுப்போடு திருப்புனித்துராவிலிருந்து ராமாயணம், மகாபாரதம், பாகவதக் கதைகள் போன்ற புராண சம்பவங்களை விளக்கும் காட்சிகள் இந்த ஊர்வலத்தில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. ஓணம் கொண்டாட்டத்தில் கேரளத்தின் பாரம்பரியமான கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் முக்கியமான இடம் இருக்கும். பாரம்பரியமான நடன வடிவங்களான மோகினியாட்டம், கதகளி, திருவாதிரைக் களி, புலிக் களி, கும்மட்டிக்களி, தும்பித் துள்ளல், ஒட்டன் துள்ளல் போன்ற நடனங்கள் ஆடப்படும்.

பத்து நாள் கொண்டாட்டம்: முதல் மூன்று நட்சத்திர நாள்களான அஸ்தம், சித்திரை, சுவாதி ஆகிய நாள்களில் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயும் நண்பர் களுக்கு இடையேயும் பரிசுகளைப் பரிமாறிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

பண்டிகையின் நான்காவது நாளான விசாக நட்சத்திர நாளன்று, நவசுவையுடன் கூடிய உணவைத் தயாரித்து உறவினர்களுடன் சேர்ந்து உணவருந்தி மகிழ்கின்றனர். ஏறக்குறைய இருபதுக்கும் மேற்பட்ட உணவு வகைகளுடன் இருக்கும் இந்த விருந்தையே கேரளத்தில் ஓணம் ஸத்யா என்று அழைக்கின்றனர்.

அனுஷம் நட்சத்திரத்துக்கான ஐந்தாம் நாளில் கேரளத்துக்கு உரிய படகுப் போட்டிகள் பரவலாக நடக்கும். இந்தப் போட்டியின்போது, படகு செலுத்துவோர் தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளும் விதத்தில் வஞ்சிப்பாட்டு எனும் பாடலைப் பாடியபடி துரித கதியில் துடுப்பைப்போட்டு படகின் வேகத்தைக் கூட்டுவர்.

கேரளத்தின் மிகவும் பாரம்பரியமான இந்தப் படகுப் போட்டியில் மூன்று விதமான படகுகள் பங்கெடுக்கும். துடுப்புகள் மிகவும் நீண்டிருக்கும் படகுகள், பாம்புப் படகுகள், பாரம்பரியப் படகுகள் ஆகியவை இடம்பெறும். சில இடங்களில் படகுப்பாட்டு எனப்படும் தனிப்பாடலைப் பாடும் நிகழ்வும் நடக்கும்.

ஆறாவது நாள் திருக்கேட்டை நட்சத்திர நாளில் அத்தப்பூ களத்தில் புதிய மலர்கள் சேர்க்கப்படுவது வழக்கம். மூத்த குடும்ப உறுப்பினர்களை அவர்களின் இல்லம் தேடிச் சென்று குடும்பத்தினர் ஆசிர்வாதம் பெறுவார்கள்.

ஏழாம் நாளான மூலம் நட்சத்திர நாளில் கேரளத்தின் பல இடங்களில் புலிக்களி, கைக்கொட்டுக் களி போன்ற நிகழ்த்துக் கலைகள் நடத்தப்படுகின்றன.

எட்டாம் நாள் பூராடம் நாளில் அத்தப் பூக்களத்தின் மையத்தில் ஓணத்தப்பம் என அழைக்கப்படும் மகாபலி சக்கரவர்த்தி மற்றும் வாமனர் களிமண் திருவுருக்கள் இடம்பெறும் சடங்கு நிகழ்த்தப்படுகிறது.

ஒன்பதாம் நாள் உத்திராடம் நாளில் மன்னர் மகாபலியை வரவேற்பதற்காக மக்கள் தங்களைப் பல விதங்களிலும் தயார்படுத்திக் கொள்கின்றனர். இந்த நாளை `முதல் ஓணம்' என்னும் சிறப்புப் பெயரோடு கேரளத்தில் அழைக்கின்றனர்.

பத்தாவது நாளான திருவோணம் நாளில், அரிசி மாவைக் கொண்டு வீட்டின் வாசலில் கோலம் இடுகின்றனர். புத்தாடை உடுத்தி, ஏழைகளுக்கு அன்னதானமும் செய்கின்றனர். மகாபலி சக்கரவர்த்தி ஒவ்வொரு வீட்டிற்கும் விஜயம் செய்யும் நாளாக இது கருதப்படுகிறது. இந்த நாளில் குடும்பத்தினர் சேர்ந்து ஓணம் ஸத்யா விருந்துடன் மகிழ்ச்சியையும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in