

எங்கோ படித்த ஞாபகம்
எவரோ சொன்ன வார்த்தைகள்
தங்கும் தகவல் ஆயிரம்
தத்துவம் அறிய உதவுமோ!
சிலர், வெகு சிலர், இயல்பாகவே கடவுளை அறிந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள், மற்றவர்களுடைய அறியாமையைக் கண்டு பரிகசிப்பதில்லை. அவர்களைவிடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று நினைத்துக்கொள்வதும் இல்லை. அவர்களுடைய இயல்பைக் கேலி செய்பவர்களையும் அவர்கள் வெறுப்பதில்லை. அவதூறு சொல்பவர்களை எதிர்ப்பதுமில்லை, அதனால் ஒருபோதும் துவள்வதுமில்லை.
அம்புக்கு இரைபோல் அலைவார்; அவரன்றோ
அம்புவியைக் காப்பார் அமர்ந்து!
அவர்களுக்கு அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அனைவரிடத்தும் அன்பாக இருக்கிறார்கள். அனைத்துயிர்களின் நலத்தை நாடுபவர்களாக இருக்கிறார்கள்.
இந்த இயல்பு அவர்களுக்கு எப்படி இயல்கிறது?
ஒன்று, அவர்கள் கடவுளைப் புத்தகங்கள், சொற்பொழிவுகள் மூலம் தெரிந்துகொள்ள முற்படவில்லை. இரண்டு, அவர்கள் கடவுளைத் தேடவே இல்லை. கண்டார்கள்.
பிரதிபலிப்பு முக்கியம்: எனில் நூல்கள், ஆன்மிகப் பிரசங்கங்கள் இவையெல்லாம் பயனற்றவையா? அப்படிச் சொல்லவில்லை. நாம் படிப்பது, கேட்பது இவற்றில் எது நம்முடைய தற்போதைய அனுபவத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது? நம்முடைய அனுபவத்துக்குச் சான்றாக அதில் என்ன இருக்கிறது? இதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.
மனப்பாடம் செய்வதும் ஒப்பிப்பதும் தரிசனமாகாது. புத்தியின் சிலம்பாட்டம் உண்மையைக் காட்டாது. நாம் படிப்பதும், கேட்பதும், நம்முடைய நிலையை - நம் நிலை குழப்பமாக இருந்தாலும் சரி - படம்பிடிப்பதாக இருக்கவேண்டும். அதற்கு அடுத்த கட்டம் இப்படி இருக்கலாம் என்று நம்மைத் தூண்ட வேண்டும். அந்தப் படிப்புதான், அந்தப் பேச்சுதான் நமக்குப் பயனளிக்கும்.
ரமணர் போன்ற மாமனிதர்கள், எதையும் படிக்காமலும், கேட்காமலும்தான் எல்லாம் அறிந்தார்கள். பிறகு, அவர்கள் முன்னிலையில் நூல்கள் வாசிக்கப்பட்டபோது, அதில் சில பகுதிகள், தங்களுடைய அனுபவத்துக்குச் சான்றாக அமைவதை அறிந்தார்கள்.
சமரசமற்ற நாட்டம்: ‘நாட்டமென்றே இரு!’ என்றார் பட்டினத்தடிகள். உண்மையை அறியவேண்டும், கடவுளைக் காணவேண்டும், தன்னை உணரவேண்டும் என்பது சமரசம் செய்துகொள்ளாத ஒரு நாட்டமாக இருக்கவேண்டும். ‘நாட்டமென்றே’ என்று எப்படி அழுத்திச் சொல்கிறார் பாருங்கள்.
இன்னொன்று, அந்த நாட்டத்துக்கு முடிவாக, விடையாக எதையும் ஏற்கவே கூடாது. அதனால்தான் அதிலேயே ‘இரு’ என்றார். எத்தனையோ பேர் உண்மையை உணர்ந்திருக்கலாம். அதைப் புத்தகங்களில் பதிவு செய்திருக்கலாம். கூட்டத்தில் பேசியிருக்கலாம். அவை, நாமறிந்ததாக ஆகுமோ? நமக்கென்ன தெரியுமோ அவ்வளவுதானே நமது நிலை?
‘உடம்பெல்லாம் நெய்தடவி ஊரெல்லாம் புரண்டாலும்
தடம்பதியும் மட்டேதான் மண்சாரும்’ அல்லவா? நாமாக அறியும் வரை, தத்துவங்களும் தகவல்களே. நாம் உள்ளே அறிந்துவிட்டால் தகவல்களும் தரிசனங்களே.
ஆனால், எல்லாருக்கும் ஒரு விசைப்பு (trigger) தேவைப்படத்தான் செய்கிறது. ‘நீ இந்த உடம்பில்லை’ என்னும் ஒரு சொற்றொடர்தான் ஒரு பெட்டிக்கடை வியாபாரியை, நிஸர்கதத்த மஹராஜாக மாற்றியது. தான் நேசித்த சகோதரன் மகளும், தான் மோகித்த பாலியல் தொழிலாளியும் ஒரே நேரத்தில் விலகியும், விலக்கியும் கொடுத்த அதிர்ச்சிதான், ஒரு காமுகனை ‘வேமண்ணா’ என்னும் யோகியாக்கியது. ‘அருணாசலம்’ என்னும் ஒற்றைச் சொல்தான் வேங்கடரமணனை, பகவான் ரமண மகரிஷியாக்கியது.
அதைத் தவிர வேறேதையும் சிந்திக்கவே விடாத இம்சைதான் பட்டினத்தார் சொன்ன நாட்டம். உலகமும் வாழ்க்கையின் சூழ்நிலைகளும் எங்கே நம்மை வைத்திருந்தாலும், இந்த நாட்டமே ஒரு தம்புரா சுருதியாக, அந்த சுருதியே ஒற்றைக் கீதமாக இருப்பதுதான் கடவுளைக் காணும் வழி. தத்துவ ஞானி ஜேகே சொல்வதுபோல், அந்தத் தீவிர விழைவு இன்று, இப்போது வரவேண்டும்.
‘ஆர்வமில்லாத மனதுதான் நாளையில் வாழும். இப்போது நீ மாறவில்லையென்றால் நீ எப்போதும் மாற மாட்டாய். ஏனெனில், நாளை நிகழக்கூடியதென்பது ஒரு திருத்தமே தவிர, மாற்றமன்று. மாற்றம் என்பது உடனே நிகழ்வது. புரட்சி என்பது இந்தக் கணநிகழ்வு. ஒருபோதும் நாளையல்ல’ என்கிறார் அவர்.
பெரியது எது? - ஆ! அது மட்டும் வாய்த்துவிட்டால், நம்மைத் தீர்த்துக் கட்டாமல் அது ஓயாது! ‘பெரிதினும் பெரிது கேள்!’ என்றானே பாரதி. அதுதான் பெரிது, அதுதான் அரிது, அதுதான் புதிது என்கிற நிலைப்பாட்டில் நாமிருந்தால், அதுதான் எளிது என்பதும் தெரியவரும். அந்தரங்கத்தில் அப்போது பரவும் நாணம்தான், ஞானத்துக்கு முகமனாகும்.
நம்முடைய சிந்தனைகள், உணர்வுகள், அபிப்பிராயங்கள், தீர்மானங்கள் - இவை எப்படிப் பட்டவையாக இருந்தாலும், இவை உயர்வானவை என்று நாம் கருதிக் கொண்டாலும், அவற்றுக்கெல்லாம் ஒரு பெயர் வைத்திருக்கிறார் ரமண முனி – மனோ வியாபாரம். இந்த வியாபாரத்தை நிறுத்தாமல் நம்மால் இறைவனைக் காண முடியாது.
ஒரு கடையாக இருந்து, அது நம் கடையாகவும் இருந்தால் அதை மூடிவிடலாம். இது சந்தைக்கடை! சந்தடியே இதன் உயிர்! இதையாவது நிறுத்துவதாவது. ஆனால், ஒன்று நம்மால் முடியும். அதை நாம் செய்தே தீரவேண்டும். என்ன அது? இந்த சந்தையை விட்டு விலகுவதே அது.
ஏன் மிரண்டு போகிறீர்கள்? ஓயாத இரைச்சலே இயல்பான இந்த மனது என்பது நாமல்ல. இந்த உண்மையைத்தான் எத்தனையோ மகான்கள் ஓயாமல் சொல்லிவருகிறார்கள். ஒருமுறை, ஒரே ஒரு முறை, அதை வலுவாக நம்பினால் போதும். மனம் வேறு, நாம் வேறு என்பது புரிந்துவிடும். அதுவரை நாம் காண்பது, கேட்பது, கருதுவது எல்லாம் இந்த மனம் என்னும் இரைச்சலின் பகுதியாகிவிடும். மனம் வேறு, நாம் வேறு என்பது புரிந்துவிட்டால்?
காண்பதற்குக் கடவுளென்று ஒன்று தனியே மிஞ்சாது!
(தரிசனம் நிகழும்)
- tavenkateswaran@gmail.com