ரிங்கல்தௌபே மயிலாடிக்குப் பறந்துவந்த மணிப்புறா!

ரிங்கல்தௌபே மயிலாடிக்குப் பறந்துவந்த மணிப்புறா!
Updated on
2 min read

‘திருநெல்வேலி மிஷனின் தொடக்க வரலாறு’ என்னும் கால்டுவெல் நூலும் Ringeltaube the Rishi என்கிற தலைப்பில் அமைந்த வில்லியம் ராபின்சன் நூலும் Church History of Travancore என்கிற தலைப்பில் மயிலாடியைச் சேர்ந்த சி.எம்.ஆகூர் எழுதிய நூலும் ரிங்கல் தௌபேயைக் குறித்து சில செய்திகளைச் சில பக்கங்களில் தருகின்றன.

முழுமையான வரலாற்று நூல் தமிழில் எழுதப்படாமலே இருந்தது. இந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில், இம்மூன்று நூல்களையும் அடிப்படையாகக் கொண்டும் ரிங்கல்தௌபே எழுதியிருந்த ஏராளமான கடிதங்கள், நாள் குறிப்புகளைப் பயன் கொண்டும் ‘ஜெர்மானிய இறைத்தொண்டர் ரிங்கல்தௌபே’ எனும் நூலை விரிவாக எழுதி வெளியிட்டிருக்கிறார் யோ.ஞானசந்திர ஜாண்சன்.

இடையன்குடி என்றதும் கால்டுவெல்லும் தரங்கம்பாடி என்றதும் சீகன்பால்குவும் நினைவுக்கு வருவதுபோல் குமரி மாவட்ட மயிலாடி என்றதும் நம் நினைவுக்கு வர வேண்டியவர் ஜெர்மானிய இறைத்தொண்டர் ரிங்கல்தௌபே. வில்லியம் தொபியாஸ் ரிங்கல்தௌபே என்றால் ‘மணிப்புறா’ என்று பொருள். லண்டன் மிஷனரி சங்கத்தின் சார்பாக இறைப்பணியாற்ற ஜெர்மனியிலிருந்து பறந்து தரங்கம்பாடிக்கு வந்த மணிப்புறாதான் ரிங்கல்தௌபே.

1804ஆம் ஆண்டு ஜெர்மனியில் இருந்து தரங்கம்பாடிக்கு வந்து தமிழைக் கற்று இறைப்பணி யாற்றிக்கொண்டிருந்த ரிங்கல் தௌபேயைத் தென்திருவிதாங்கூரின் மயிலாடி என்னும் ஊரைச் சேர்ந்த மகராசன் வேதமாணிக்கம், தங்கள் ஊருக்கு வந்து இறைப் பணியாற்ற வேண்டும் என்றும் அறியாமை, கல்லாமை, சாதி ஒடுக்குமுறைகளிலிருந்து மக்களை மீட்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்று 1806ஆம் ஆண்டு மயிலாடிக்கு சென்றார் ரிங்கல்தௌபே. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இறைப்பணியோடு மருத்துவப்பணி, கல்விப்பணி போன்ற சமூகப் பணிகளை ஆற்றி தென்திருவிதாங்கூர் மக்கள் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேற காரணராகத் திகழ்ந்திருக்கிறார்.

மயிலாடி மண்ணில் இவர் தொடங்கிய ஆங்கிலப் பள்ளிக்கூடம்தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் முதன் முதலாக நிறுவப்பட்ட ஆங்கிலப் பள்ளிக்கூடம். இப்பள்ளிக்கூடத்தின் அடுத்தடுத்த வளர்ச்சி நிலையே இன்று நாகர்கோவிலில் சிறப்புடன் மிளிர்ந்துகொண்டிருக்கும் ‘ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரி’ என்று இந்நூல் தரும் செய்தி வாசிப்போருக்கு வியப்பைத் தரக்கூடும்.

இந்த நூலின் ஆசிரியர் யோ.ஞானசந்திர ஜாண்சன், சாகித்ய அகாடமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை, வேதநாயக சாஸ்திரியார் குறித்து நூல்கள் எழுதியவர். தொடர்ந்து அறியப்படாத கிறிஸ்துவ ஆளுமைகளைக் கண்டறிந்து எழுதியும் அறியப்படாத கிறிஸ்துவ நூல்களைத் தேடிப் பதிப்பித்தும் கிறிஸ்துவ இலக்கிய வரலாற்றுக்குக் கணிசமான பங்களிப்பைச் செய்துவரக்கூடியவர்.

ரிங்கல்தௌபே குறித்து அவர் எழுதியிருக்கும் இந்நூல் கிறிஸ்தவ சமயத்தவருக்கு மட்டுமல்ல, தமிழ்ச் சமூகத்துக்கும் புதிய வெளிச்சத்தைத் தரக்கூடியது. 2016இல் இந்நூலின் முதல் பதிப்பு வந்திருந்தபோதும், தொடர்ச்சியான தேடலின் பயனாக ரிங்கல்தௌபேயுடன் தொடர்புடைய பல்வேறு வரலாற்று ஆவணங் களையும் படங்களையும் கண்டெடுத்து ஒரு விரிவான பதிப்பை அண்மையில் இவர் வெளியிட்டிருக்கிறார்.

ரிங்கல்தௌபேயுடன் எப்போதும் இணைத்துப் பேசப்பட வேண்டியவர் வேதமாணிக்கம். மயிலாடி மண்ணைச் சேர்ந்தவர். இம்மண்ணைக் களமாகக் கொண்டு இறைப்பணியாற்றி வந்ததுடன், ரிங்கல்தௌபேவை இம்மண்ணுக்கு அழைத்து வந்தவரும் இவரே. இவர்கள் இருவரது பணியை நினைகூரும் வகையில் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் மயிலாடியில் ‘ரிங்கல்தௌபே - வேதமாணிக்கம் அருட்பணியர் அருங்காட்சியகம்’ திறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வேதமாணிக்கம் வரலாற்றை புலவர் நாஞ்சில் நாரண தொல்காப்பியன் என்பவர் காவியமாகப் படைத்துள்ளார். சீர்திருத்த கிறிஸ்துவத்தில் ஓர் இறைப்பணியாளர் குறித்து வெளிவந்த முதல் காவியம் என்கிற சிறப்பினைப் பெற்றது ‘விடிவெள்ளி மகராசன் வேதமாணிக்கம் காவியம்’.

ஞானசந்திர ஜாண்சனின் ‘ரிங்கல்தௌபே’ நூல், அவரின் வரலாற்றை மட்டுமல்லாமல், வேதமாணிக்கத்தின் அரும்பணிகள் குறித்தும் விரிவாகப் பதிவு செய்துள்ளது. குமரி மாவட்ட சமூக வரலாறு, தென் திருவிதாங்கூரில் சீர்திருத்த கிறிஸ்துவம் பரவி வளர்ந்த வரலாறு, லண்டன் மிஷனரி சங்க வரலாறு ஆகியவற்றையும் ரிங்கல்தௌபேக்குப் பிறகு மயிலாடிக்கு வந்த கிறிஸ்துவ மிஷனரிமார்கள் சார்லஸ் மீட், சார்லஸ் மால்ட் ஆகியோர் ஆற்றிய பணிகளையும் விரிவாகப் பேசுகிறது.

தேவவரம் முன்ஷியார், ஜான் பால்மர், அருள்திரு சி. மாசிலாமணி, சி.எம்.ஆகூர் போன்ற மயிலாடியின் எழுத்து வேந்தர்களையும் இந்நூல் அறிமுகப்படுத்துகிறது. ரிங்கலின் கடிதங்கள் அன்பு, மகிழ்ச்சி, மன உறுதி, இறைப்பற்று ஆகியவற்றை வெளிப்படுத்தும்.

அதே வேளையில், அவர் மனத்தில் நிலவிய விரக்தி, வேதனை, வறுமை, குழப்பம் ஆகியவற்றையும் அறியத்தரும் ஆவணங்களாக அமைந்துள்ளன. ரிங்கல் தௌபேவுக்கென்று இம்மண்ணில் கல்லறை இல்லாமல் இருக்கலாம். ஆனால் நம் மனங்களில் அவருக்கான ஓர் இடத்தை இந்நூல் உருவாக்கும்.

- கட்டுரையாளர், உதவிப் பேராசிரியர், சென்னைக் கிறித்துவக் கல்லூரி; sudaroviya@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in