

‘ஒருவர் நல்ல உடல் ஆரோக்கி யத்துடன் இருக்கிறார் என்றால், அவர், உயர்ந்த மனநலத் துடன் இருக்கிறார் எனப் பொருள்’ என்றார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால். அவர், “கோபத்தைத் தவிர்க்கிற எவரும் நல்ல மனநலம் பெறமுடியும். அதேநேரம், கோபத்தையும் கண்டிப்பையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது.
உங்கள் மேலதிகாரியோ, பெற்றோரோ, நண்பர்களோ, உங்கள் சிக்கலான நடத்தையைக் கண்டிப்பது கோபம் அல்ல. உரிமை இருப்பவர்களை நீங்கள் கண்டிப்பதும் கோபத்தில் வராது. ஆனால், கண்டிப்பு, கோபமாக வெளிப்பட்டு விடவும் கூடாது. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் கண்டிப்பு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால், உங்கள் நடத்தை தூய்மையானதாக இருக்கிறதா என்பதைச் சீர்தூக்கிப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்கிறார்.
கோபம் குறித்து அவர் இவ்வளவு வலியுறுத்திச் சொல்வதற்கு காரணம் இருக்கிறது. ஏனென்றால், நம்மில் பலரும் கோபத்தை வெளிப்படுத்துவதில் தவிர்க்க முடியாத பலவீனர்களாக இருக்கிறோம். பெரும்பாலான வர்கள் சிறு விஷயங்களுக்குக்கூட சட்டென்று கோபப்பட்டு பெருங்குரலெடுத்துக் கத்திவிடுகிறார்கள். அவ்வாறான முன்கோபம், அவர்களிடமிருக்கும் நல்ல குணங்களையும் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது.
‘ஏன் கோபப்பட்டோம்?’ என்பதற்கு ஒவ்வொரு வரிடமும் நியாயமான காரணங்கள் இருக்கலாம். ஆனால், கோபத்தை அடக்காமல் விட்டுவிடுவது இழப்புகளுக்கு வழிவகுக்கிறது. கோபத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையாவது பேசிவிடுபவர்களும், யோசிக்காமல் எதையாவது செய்துவிடுகிறவர்களும் அதன்பிறகு, கோபப்பட்டதை நினைத்து வருத்தப்படுகிறார்கள்.
கோபம் எனும் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த கற்றுக்கொள்வது நமக்கு எவ்வளவு நன்மைகளைக் கொண்டுவருகிறது என்பதை புனித விவிலியத்தில் நீதிமொழிகள் புத்தகம் பல அத்தியாயங்களில் எடுத்துக்காட்டுகிறது.
அது கோபம் உங்களை அடக்குவதற்கு முன், கோபத்தை நீங்கள் அடக்குங்கள். கோபத்தில் பொங்கியெழுந்து சீறுவது வீரத்தின், ஆண்மையின் அடையாளம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், அது பலவீனத்தின் அடையாளம் என்கிறது விவிலியம்.
“கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத மனிதன், மதில் இடிந்த நகரம்போல் இருக்கிறான்” (நீதிமொழிகள் 25:28) என விவிலியம் சொல்கிறது. அப்படியானால், கோபத்தை அடக்க என்னதான் வழி? ‘விவேகம்’ என்கிறது விவிலியம்.
என்ன நடந்தது எனத் தெரிந்து கொள்ளாமல், படபடவென்று பொரிந்து தள்ளுவது விவேகம் அல்ல. “விவேகம் ஒருவனுடைய கோபத்தைத் தணிக் கும்” என்று நீதிமொழிகள் 19:11 வசனம் எடுத்துக் காட்டுகிறது. எந்தவொரு பிரச்சினையின்போதும் அது தொடர்பான அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போது நமக்கு சில உண்மைகள் தெரியவரும். அப்படித் தெரியவரும்போது நாம் கோப உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியும்.
அதைத்தான் “யோசிக்கும் திறன் உன்னைக் காக்கும், பகுத்தறிவு உன்னைப் பாதுகாக்கும்” என்று நீதிமொழிகள் 2:11 வசனம் எடுத்துக் காட்டுகிறது.
நம்மில் பலரும் செய்யும் தவறு, கோபத்தை வளர்க்கும் வாக்கு வாதத்தில் இறங்கிவிடுவது. நீதிமொழிகள் 17:14 வசனம்: “சண்டையைத் தொடங்குவது அணையைத் திறந்துவிடுவதுபோல் இருக்கிறது. வாக்குவாதம் வெடிப்பதற்கு முன் அந்த இடத்தைவிட்டுப் போய்விடு” எனக் கூறுகிறது. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, நீதிமொழிகள் 16: 32 வசனம் சொல்கிறது: “பலசாலியை விட சட்டெனக் கோபப்படாதவனே மேலானவன். நகரத்தைப் போரில் கைப்பற்றுகிறவனைவிட, கோபத்தைக் கட்டுப்படுத்துகிறவனே மேலானவன்”.
ஆக, கோபம் ஒரு கோடாரி; அதைத் தவிர்ப்பவனே வெற்றியின் பாதையில் வாழ்க்கையை செலுத்தத் தெரிந்த சூத்திரதாரி!