தித்திக்கும் திருப்புகழ் நாயகன் 26: பழமுதிர்சோலை | சுட்ட பழம் தந்த சுப்ரமணியன்

தித்திக்கும் திருப்புகழ் நாயகன் 26: பழமுதிர்சோலை | சுட்ட பழம் தந்த சுப்ரமணியன்
Updated on
2 min read

கோடி மின்னல் அடைந்த சோதி மலை கதிர் தவழ்ந்த ஞான

குலகிரி மகிழ்ந்து மேவு பெருமானே.

- திருப்புகழ்

ஆறுமுகனே அனைத்துக்கும் முதன்மை யானவன். அவனே முத்தமிழுக்கும் முதல்வனாக இருக்கிறான். தமிழ் எழுத்துகளின் ஒலியாகப், பொருளாக, உயிராக இருப்பவனின் ஆறாவது படை வீடு பழமுதிர்சோலை. இத்தலத்தில் பதினாறு திருப்புகழ் பாடியுள்ளார் அருணகிரிநாதர்.

தமிழ்ப் புலமையோடு விளையாடிய தங்கமகன்: தன் தமிழுக்கு இணை இல்லை என்று அகங்காரத்தில் இருந்த ஔவை, ஒருமுறை இத்தலத்தின் வழியாகச் சென்றார். அப்போது அவரின் அகங்காரத்தை அடக்க எண்ணிய ஆறுமுகன், ஆடு மேய்க்கும் சிறுவனாக அங்கிருந்த நாவல் மரத்தில் ஏறி அமர்ந்தான். சோர்வுடன் மரத்தின் நிழலில் அமர்ந்த ஔவை பாட்டி, “குழந்தாய் எனக்குப் பசிக்கிறது. சிறிது நாவல் பழங்கள் பறித்துப் போடு” எனக் கேட்டார். குறும்பு குமரன், ``சுட்ட பழமா? சுடாத பழமா? பாட்டி” என்று வினவினான்.

புரியாத ஔவை “சுடாத பழமே போடப்பா” என்று கூற, குமரன் மரத்தை உலுக்குகிறான். கீழே விழுந்த பழத்தைப் பொறுக்கி, அதிலிருந்த மண்ணை நீக்க ஊதிய பாட்டியைப் பார்த்து “என்ன பாட்டி பழம் சுடுகிறதா?’’ என்று கேட்கிறான்.

தன் அகங்காரம் அழிந்த ஔவை வந்தது முருகனே என்று அறிகிறாள். அவள் தமிழுடன் முருகன் விளையாடிய இடமே பழமுதிர்ச்சோலை. அந்த நாவல் மரம் இன்றும் அங்கு இருக்கிறது.

தமிழ் எழுத்தாய் நின்ற தலைவன்: தமிழ் என்றாலே முருகன். முருகன் என்றாலே அழகு, இனிமை. உயிர்மெய் எழுத்துகளின் உருவமாகி இருப்பவன், அதன் இனிமையாக வருபவன் என்று அருணகிரியார் கூறுகிறார்.

"அகரமுமாகி, அதிபனுமாகி அதிகமுமாகி அகமாகி அயனெனவாகி

அரியெனவாகி அரனெனவாகி அவர் மேலாய் இகரமுமாகி,

அவைக்களுமாகி இனிமையுமாகை வருவோனே"

என்று படிக்கும்போது, அழகுத் தமிழ் கொஞ்சி விளையாடுவதை அறிய முடியும். முருகனுடைய வேலுக்குப் பெருமை தன்னால்தான் என்று அகந்தை கொண்ட பிரம்மன், முருகனின் சாபத்தால், இலங்கையில் பிறக்கிறார். பிப்பலாத முனிவரால் ஞானம் பெற்ற பிரம்மன், கிருத்திகை விரதம் இருந்து அருள் பெற்ற வரலாறை இத்திருப்புகழில் குறிப்பிடுகிறார்.

அவன் அன்பினால் ஆளப்பட்டவன். மனதில் நாம் விரும்பும் அனைத்துக்கும் மேலான வாழ்வு அருள்பவன் முருகன். அவனின் கருணையை,

"அன்பிநோடே மனோரத மிஞ்சமே லான வாழ்வருள்

அண்டர்கோ வே பராபர முதல்வோனே" என்கிற பாடலில் குறிப்பிடுகிறார். முருகன் சூரனை வதம் செய்ததைக் கூறும் அருணகிரியார்,

படையொடு சூரன் மாள முடுகிய சூரா தீர

பழமுதிர் சோலை மேவு பெருமானே!

என்று முருகனை அழைக்கிறார். சூரனை அழித்த உனக்கு என் வேதனைகளை அழிக்க முடியாதா? என்று கேட்கிறார். அவரின் வேதனை என்ன?

மாதர்களின் மீதான காமத்தை அழித்து, என்றும் அழியாத முக்தியை அருள வேண்டும் என்பதே அருணகிரிநாதரின் வேண்டுகோளாக இருக்கிறது. முன் வினையின் காரணமாகவே வந்து பிறக்கிறோம் என்று கூறும் அவர், இனிப் பிறக்காதபடி, காலன் என்னை நெருங்காதபடி நான் நற்கதியை அடையும்படி செய்ய வேண்டும் என்பவர், திருமாலும், பிரம்மாவும் காண முடியாத ஞான நடனத்தை ஆடி வருவாயே என்று அழைக்கிறார்.

காரணம தாக வந்து புவி மீதே காலனணு காதிசைந்து கதிகாண

நாரணனும் வேதன் முன்பு தெரியாத ஞான நடமே புரிந்து

வருவாயே

- எனும்போதே ஆனந்த நடனமாடி வரும் அழகு முருகனின் தோற்றம் நம் கண்களில் தெரிகிறது.

தன்னிகரில்லாத தலைவன்: முருகனுக்கு இணை என்று சொல்லக்கூடியவன் வேறு எவருமில்லை. அவனுக்கு இணையானவன் அவனே. அவனை எங்கு கண்டறிந்து எப்படி வழிபடுவது? வழி சொல்கிறார் நக்கீரர்.

"வேண்டுவர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட

ஆண்டாண்டு உறைதலும் அறிந்தவாறே

ஆண்டாண்டு ஆயினும் ஆக, காண்தக

முந்துநீ கண்டுழி முகன் அமர்ந்து ஏத்திக்

கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி"

- என்று நக்கீரர் முருகனை வழிபட வழிகாட்டுகிறார்.

எங்கு உன் முகம் மலர்ந்து, அகம் மகிழ்ந்து முருகனை வழிபட மனம் தூண்டப்படுகிறதோ அங்கு உடனே அவனை விழுந்து வணங்கு. உனக்குத் தெரிந்த நாமங்களைச் சொல்லிப் பாடு என்று ஆற்றுப்படுத்துகிறார் நக்கீரர். அப்படி நெஞ்சம் மலர நினைந்துருகும் இடமே பழமுதிர்சோலை.

(நிறைவடைந்தது)

- gaprabha1963@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in