

யேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட பிறகு, தான் சொன்னபடியே மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து காட்சி அளித்தார். அநேகர் கிறிஸ்துவர்களாக மாறுவதை யூத மதத் தலைவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
யூத மதத் தலைவர்களில் சவுல் என்னும் பெயர் உள்ள ஒருவன் இருந்தான். ஒரு நாள் அவன் தமஸ்கு என்கிற ஊருக்குக் கிறிஸ்துவர்களைக் கைது செய்வதற்காகச் சென்றுகொண்டிருந்தான். திடீரென்று அவனைச் சுற்றிலும் மிகப்பெரிய வெளிச்சம் உண்டாயிற்று. மேலும் வானத்திலிருந்து, “சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?” என்று ஒரு சத்தத்தைக் கேட்டான்.
அதற்கு அவன், “ஆண்டவரே, நீர் யார்?” என்றான்.
அதற்கு யேசு, “நீ துன்பப்படுத்துகிற யேசு நானே; என் மக்களை துன்புறுத்துவது உனக்கு நல்லதல்ல” என்றார்.
உடனடியாக அவன், “ஆண்டவரே நான் என்ன செய்ய நீர் விரும்புகிறீர்?” என்று கேட்டான்.
"நீ எழுந்து நேர் தெரு என்கிற தெருவுக்குச் செல்; நீ செய்ய வேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும்" என்றார் யேசு.
கீழே விழுந்த சவுல், எழுந்தவுடன் அவனால் பார்க்க முடியவில்லை. ஆகவே சவுலுடன் வந்த மனிதன், அவனைக் கைப்பிடித்து நேர் தெருவுக்கு அழைத்துச் சென்றான்.
சவுல் தன்னுடைய சீடனாக மாறப் போவதை முன்னரே அறிந்திருந்த யேசு, ஏற்கெனவே கிறிஸ்துவராக இருந்த அனனியா என்பவரிடம் சவுலைப் பற்றிக் கூறியிருந்தார். சவுலைத் தன்னுடைய திருப்பணிக் கென்று தேர்ந்தெடுத்திருப் பதையும் அனனியாவிடம் யேசு சொன்னார்.
அனனியாவோ பயம் அடைந்தவனாய், “ஆண்டவரே, இந்த சவுல்தானே கிறிஸ்தவர்களான எங்களையெல்லாம் துன்பப்படுத்திக் கொலை செய்யத் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறான். இவனை எப்படி நாங்கள் ஏற்றுக் கொள்வது” என்று கேட்டான்.
யேசுவோ, “இவன் அநேகருக்கு என்னைப் பற்றி சொல்லி என்னுடைய திருப்பணியைச் செய்வதற்கென்று நான் தெரிந்துக்கொண்ட மனிதனாயிருக்கிறான்" என்றார். மேலும் தற்போது சவுல் இருக்கும் இடத்தை அனனியாவிற்கு தெரிவித்து, அவனுக்கு உதவி செய்ய அனனியாவுக்கு உத்தரவிட்டார்.
யேசு சொன்னபடியே அனனியா, சவுலிடம் சென்று, அவன் கண் குணமாகி பார்வை அடையும்படி அவனுக்காக வேண்டுதல் செய்தான். உடனடியாக சவுலின் கண்களில் இருந்து மீன் செதில்கள் போன்றவை கீழே விழுந்தன; முன்பு போல் தெளிவான பார்வையை சவுல் பெற்றான். தனக்கு நேரிட்ட இந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வின் மூலம் யேசுவே கடவுள் என்பதை சவுல் அறிந்துகொண்டான்.
உடனடியாக யேசுவை நம்பிய சவுல் தன்னுடைய பெயரை `பவுல்' என்று மாற்றிக் கொண்டார். ஒரு காலத்தில் தான் கடுமையாக எதிர்த்த யேசுவை நம்பி அவருடைய சீடனாகவே மாறினார் பவுல்! அதோடு, கிறிஸ்தவ திருமறையில் உள்ள 66 நூல்களில் கிட்டத்தட்ட 13 நூல்களை இந்த பவுலே எழுதியிருக்கிறார்.
தன்னை வெறுத்த மனிதனையும் நேசித்துத் தன்னுடைய சீடன் ஆக்கினார் யேசு! ‘ஒருவர் யேசுவை நம்பும்பொழுது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராக இருக்கிறார். பழைய தீய குணங்கள் கழிந்து புதிய நற்குணங்கள் புகுந்தன’ என்று திருமறை கூறுகிறது!
- merchikannan@gmail.com