

சத்தியம், தர்மம், நீதி ஆகியவை நம் மண்ணில் காலம் காலமாக நின்று நிலைத்திடும் வண்ணம் சக்தி சொரூபமாக அருளாட்சி நடத்திவருபவள் அம்பிகை. இமயம் முதல் குமரி வரை இந்தச் சக்தி அம்சமாக எழுந்தருளியிருப்பவளை ஊருக்கு ஒரு பெயரிட்டு அழைத்து மகிழ்கிறோம். அந்த வகையில் சோழவந்தான் திருத்தலத்தில் உள்ள தாயை, ஜெனகை மாரியம்மன் எனப் பரவசத்தோடு அழைக்கின்றனர்.
வைகை நதி பாய்ந்து செழிப்பை அள்ளித் தரும் இத்தலத்திற்கு சோழாந்தக சதுர்வேதி மங்கலம், ஜனநாத சதுர்வேதி மங்கலம் எனப் பல்வேறு பெயர்கள் உள்ளன. மாரியம்மனுக்கு ஜனக மாரியம்மன் என்கிற பெயரும் அதுவே சற்று மருவி, இந்நாளில் ஜெனகை மாரியம்மன் என்றும் அழைக்கப்படுகிறது.
இக்கோயில் கருவறையில் இரு தேவியர் நாடி வரும் பக்தர்களைக் காத்துவருகின்றனர். ஒருவர் சந்தனமாரி என்கிற பெயரில் சுதை விக்கிரகமாகக் காட்சி அருள்கிறார். இன்னொருவர் ஜெனகை மாரி, கல்திருமேனியில் அமர்ந்த நிலையில் வீர ஆசனக் கோலத்தில் காட்சி அருள்கிறார். இத்தகைய அபூர்வ அமைப்பு சக்தி பீடங்களில் இங்கு மட்டுமே உள்ளது.
சந்தனமாரி மூலிகைக் கலவையினால் ஆன சுதை விக்கிரகம். பல ஆண்டுகளாக சந்தனமாரியே மூலவராக அருள்பாலித்து வந்துள்ளார். சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு ஜெனகை மாரி கல் திருமேனியானது இப்போது கோயில் இருக்கும் அதே இடத்தில் பூமியில் புதைந்த நிலையில் கிடைத்தது. அரிதினும் அரிதான புதையலாகக் கிடைத்த ஜெனகை மாரியின் கல் திருமேனியை நின்ற திருக்கோலத்தில் இருந்த சந்தனமாரியின் சுதை விக்கிரகத்துக்கு முன் பிரதிஷ்டை செய்து வணங்கத் தொடங்கினர்.
நீதியின் வடிவம்: சந்தனமாரி துடியான தெய்வம். மிகுந்த உக்கிரம் கொண்டவள். எளியோரை ஓடிவந்து அரவணைத்துக் காக்கும் இவளே, தவறு செய்தவர்களை நிற்க வைத்துத் தட்டிக்கேட்டு நீதியை நிலைநிறுத்துபவளாக விளங்குகிறாள். அதனால்தான் காலம் காலமாக இந்த மாரி, தர்மத்தைக் காத்து அதர்மத்தை ஒடுக்கும் சக்தியாக விளங்குகிறாள். சந்தனமாரிக்கு வருடத்திற்கு ஒருமுறைதைலக்காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது.
நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ள சந்தன மாரியின் வலது மேல் கையில் அரவம் சுற்றிய உடுக்கையும், வலது கீழ் கையில் வாளும் உள்ளன. இடது மேல் கையில் முத்தலை திரிசூலமும், இடது கீழ் கையில் குங்குமத்தையும் ஏந்தி நிற்கிறாள். உக்கிரமாக நின்றிருந்த காலத்தில் சூட்டப்பட்ட பெயர் சூலப்பிடாரி. அதுவே, உக்கிரம் தணிந்த கருணாம்பிகையாக மாறிய நிலையில் சந்தனமாரி என்கிற பெயரும் வந்தது.
பரிகாரத் தலம்: ஜெனகை மாரியின் சிற்ப அழகு சோழர் கலைப் பாணியில் அமைந்துள்ளது. இக்கோயில் கருவறை வெளிப்பிரகாரத்தில் சிம்ம விளக்கு நிறுவப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் விளக்கேற்றி ஜெனகை மாரியின் பின்புறம் அமர்ந்து தங்கள் கோரிக்கைகளைத் தெரிவித்து நிம்மதியோடு திரும்புகின்றனர்.
மாரியின் இந்தக் கருணைக்கு நன்றி செலுத்தும் விதமாக நேர்த்திக் கடனாக மண் பொம்மையை வாங்கி, கருவறையை மூன்று முறை வலம் வந்து பொம்மையை அங்கே செலுத்திவிட்டுச் செல்கின்றனர். இதன் தொடர்ச்சியாக, அம்மன் சந்நிதி முன்பு மாவிளக்கு ஏற்றி வழிபடுகின்றனர்.
அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பாதிப்பு நீங்குவதற்கு இத்தலத்தில் மாரியின் திருமஞ்சனத் தீர்த்தத்தை வாங்கிச் செல்கின்றனர். அதில் மஞ்சள், வேம்பு கலந்து தரப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் இதை மூன்று நாள்கள் பருகிவர, விரைவில் அம்மை இறங்கிப் பரிபூரண குணமடைவதாகப் பக்தர்கள் கூறுகின்றனர்.
இதுபோன்ற பரிகாரங் களுக்காக வெளியூர் பக்தர்கள் நம்பிக்கையோடு இங்கு நாடி வருவதால், செவ்வாய், வெள்ளி ஆகிய இரண்டு நாள்களில் மட்டும் காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பதரை மணி வரை சந்நிதியைத் திறந்தே வைத்திருக்கிறார்கள்.
பௌர்ணமி தோறும் இங்கே 108 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடந்துவருகிறது. கருவறையில் ஜெனகை மாரி வலது காலை ஊன்றியபடியும், இடது காலை மடக்கியபடியும் வீர ஆசனத்தில் எழுந்தருளியி ருக்கிறாள். தன் திருமேனியில் சர்ப்பங்களுடன் திகழும்மகாசக்தியாக அருள் பாலிக்கிறாள் எனவே, புராதனப்பெருமை மிக்க இத்தலம் நாகதோஷம் நீக்கும் பரிகாரத்தலமாகவும், குழந்தைப்பேறு கிட்டும் அற்புதத் தலமாகவும்விளங்குகிறது. இந்தக் கோரிக்கைக்காக நூற்றுக் கணக்கானோர் மரத்தொட்டிலை இங்கே கட்டி வைத்துச் செல்கின்றனர்.
தல விருட்சங்கள் அரசு, வேம்பு. மேற்குச் சுற்றில் அரச மரத்தடியில் நாகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதை வலம் வந்து வழிபடுவதன் மூலம் கால சர்ப்பதோஷம் நீங்கி, புத்திர பாக்கியம் பெறுவதோடு திருமண யோகம் கூடி வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வைகாசிப் பெருவிழா: ஆண்டுதோறும் வைகாசிப் பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்தப் பிரம்மோற்சவம் 17 நாள்கள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஒன்பதாம் திருநாளில் பால் குடம், அக்கினிச்சட்டி நிகழ்ச்சியும் வைகையில் பூப்பல்லக்கு வைபவமும் பத்தாம் திருநாளில் பூக்குழி நிகழ்வும் பதினாறாம் திருநாளில் தேரோட்டமும் பதினேழாம் நாளில் வைகை ஆற்றில் தீர்த்தவாரியும் சிறப்பாக நடைபெறுகின்றன.
இந்தப் பிரம்மோற்சவ நாள்களில் கோயில் காலை ஆறு மணி முதல் நள்ளிரவு வரை பக்தர்கள் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும். சுற்றுவட்டார கிராமத்தினரின் வருகைக்காகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். நேர்த்திக்கடன் செலுத்துபவர் பலரும் துலாபாரம் மூலமாகவும் தங்கள் வேண்டுதலைப் பக்திபூர்வமாக நிறைவேற்றுகின்றனர். பிரம்மோற்சவம் விழாவுக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெறும்.
- vganesanapk2023@ச gmail.com