

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தொடங்கி திருப்பாற்கடல் வரை 108 ஆலயங்களைப் பற்றிய தெளிவான உரைச் சித்திரத்தை இந்நூல் வழங்குகிறது.
நமக்கு நன்கு அறிமுகமாகி பல முறை நாம் சென்று தரிசித்த கோயிலிலும் நமக்குத் தெரியாத சங்கதியை நூலாசிரியர் இந்த நூலில் நமக்கு அளிக்கிறார். அந்தச் சங்கதிக்கு உரிய தாத்பர்யமும் இந்த நூலில் விளக்கப்பட்டிருக்கிறது. திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதியாக அருள்பாலிப்பவரின் வலக்கையில் சக்கராயுதத்திற்குப் பதில் சங்கு இருக்கிறது. இதன் தாத்பர்யம் பாரதப் போரில் கௌரவர்களுக்கு எதிராக கிருஷ்ணர் ஆயுதம் ஏந்திப் போரிடவில்லை என்பதுதான்.
துளசி, பெருமாளுக்கு உகந்ததாக மாறியது எப்படி, பெருமாளுக்கு கள்ளபிரான் என்னும் பெயர் வந்ததன் பின்னணி என்ன என்பதை எல்லாம் சுருக்கமாகவும் நேர்த்தியாகவும் திருத்தலத்தின் பெருமைகளாக நம் மனத்தில்பதிவேற்றுகிறது இந்நூல்.
நேரடியாக ஆலயங்களில் தரிசித்துத் தெரிந்துகொண்ட தகவல்கள், ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பக்தர்களின் கூற்றாகத் தெரிந்துகொண்ட தகவல்கள், வைணவப் பெரியோரின் சரித்திரங்களையும் பாடல் களையும் ஊன்றிப் படித்ததன் பயனாக விளங்கிக்கொண்டவை எனப் பலவற்றின் சாரத்தை இந்த நூலில் இடம்பிடித்திருக்கும் கட்டுரைகள் கொண்டுள்ளன. வெறுமனே திருத்தலங்களைப் பற்றிய கட்டுரைகளாகமட்டுமில்லாமல், திருத்தலத்தை அணுகு வதற்கு மிகச் சிறந்த வழிகாட்டியாகவும் நூல் திகழ்கிறது.
108 வைஷ்ணவ திருத்தல மகிமை
எஸ்.எஸ்.மாத்ருபூதேஸ்வரன்
நர்மதா பதிப்பகம், சென்னை.
தொலைபேசி: 044-24334397.