

எல்லாம்வல்ல சித்தரான சிவபெருமானைச் சித்தத்தில் கண்டவர்கள் சித்தர் அடியார்கள். சித்தர் அடியாருக்குச் சித்த நாதனாக விளங்குபவர் முருகப் பெருமான். முருகப் பெருமானின் அடியார்கள் தமிழகத்தில் ஏராளம்.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர், சித்தர் அடியார் முத்தணைந்த பெருமாள். இவர் திருச்செந்தூருக்குத் தெற்கே எட்டு மைல் தொலைவில் குலசேகரன்பட்டினம் என்கிற சிற்றூரில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மன்னரிடம் தலைமை அமைச்சராகப் பணியாற்றினார்.
திருச்செந்தூர் முருகப் பெருமான் மீது சிறந்த பக்தி கொண்டவர். முருகப் பெருமான் அருளால் ஞான நூல்களை ஓதியும், ஓதுவித்தும் வந்தார். இவருக்கு முருகப் பெருமான் அருள் கிடைக்கப்பெற்றதும் சித்துகள் கைகூடின. இவர் தினசரி அர்த்தசாம வழிபாட்டுக்கு திருச்செந்தூர் முருகப் பெருமான் ஆலயம் செல்வது வழக்கம். இவரை ஞானியார் என்று யாவரும் அழைப்பர்.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி என்கிற ஊரில் பொல்லாப்பிள்ளை ஆசான் என்கிற மந்திரவாதி இருந்தார். அவருக்கும் ஞானியாருக்கும் ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. மந்திரவாதி பொல்லாப்பிள்ளை ஆசான் தான் வணங்கும் வைரவமூர்த்தியை ஞானியார் மீது ஏவினார்.
வைரவமூர்த்தி, ஞானியாரைக் கண்டதும், இவர் முருகப்பெருமானின் அடியார் எனத் தெரிந்ததும் அவரின் ஆவேசம் குறைந்தது. ஞானியார், வைரவரைத் தன்னுடனே இருக்கும்படி வேண்டிக்கொண்டார். வைரவரும் அவரது வீட்டிலேயே தங்கினார். ஞானியார் வைரவருக்குத் தனி பீடம் அமைத்தார்.
போன வைரவர் வராததால் மந்திரவாதி கலக்கம் கொண்டார். தானே நேரில் சென்று, ஞானியாரைக் கண்டு அடிபணிந்தார். பொல்லாப்பிள்ளை ஆசானுக்கு ஞானியார் நல்ல அறிவுரை கூறி, அவருக்குத் தனது வீட்டின் ஓர் அறையின் கதவைத் திறந்து காண்பித்தார். அந்த அறையில் மந்திரவாதியின் மனைவி, தங்கை, தாய், தந்தை ஆகியோர் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பூதப்பாண்டியில் உள்ள தன் குடும்பமே இங்கே பிணைக்கைதியாக இருப்பதைக் கண்டு, ஞானியாரின் பாதத்தில் சரணாகதி அடைந்தார். ஞானியார் அவரை மன்னித்து, “உனது மந்திர ஆற்றலை இழிதொழிலுக்குப் பயன்படுத்த வேண்டாம்” என அறிவுரை கூறி அருளாசி வழங்கி திருப்பி அனுப்பினார். ஞானியாரின் புகழ் எங்கும் பரவியது.
இப்படிப்பட்ட மகிமையும் மகத்துவமும் உடைய ஞானியார் அடிகள் தினமும் அர்த்தசாம பூஜைக்கு குலசேகரன்பட்டினத்தில் இருந்து திருச்செந்தூருக்கு நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்பி வருவது வழக்கம். இது அவரது வயது முதிர்வு காலம் வரை வழக்கமாக நடந்தது.
ஒரு நாள் அர்த்தசாம வழிபாட்டுக்குக் கடற்கரை வழியாகச் சென்றபோது, மழையும் இடியும் பயங்கரமாக இருந்தன. அவர் வழிதவறி திசை தெரியாது சென்றார். வழிகாட்டவும் யாருமில்லை. திடீரென ஓர் உருவம் கையில் சிறு விளக்கைப் பிடித்துக்கொண்டு சேகண்டியும் தட்டிக்கொண்டு பண்டாரக் கோலத்தில் தன் முன்னே போவதுபோல் ஞானியார் கண்ணுக்குப் புலப்பட்டது.
அந்த உருவத்தைப் பின்தொடர்ந்தார். திருச்செந்தூர் முருகப்பெருமான் ஆலயத்தில் உள்ள சண்முக விலாசம் வந்ததும், அந்த உருவம் திடீரென மறைந்தது. செந்திலாண்டவனே தனக்குத் துணையாக வந்தார் என்பதைத் தன் ஞானத்தால் அறிந்தார் ஞானியார்.
அன்றிரவு குலசேகரன்பட்டினம் திரும்பியதும் முருகப் பெருமான் அவரது கனவில் தோன்றி, “உமக்கு வயது முதிர்ந்துவிட்டது. உடலும் தளர்ச்சியடைந்துவிட்டது. அதனால், அர்த்தசாம வழிபாட்டுக்கு திருச்செந்தூருக்கு வர வேண்டாம். நாமே நாள்தோறும் திருச்செந்தூரில் அர்த்தசாம பூஜை முடிந்ததும், உன் வீட்டின் படுக்கைக்கு வருகிறோம்” என்று கூறி மறைந்தார்.
அன்று முதல் இரவு முருகப் பெருமான் அர்த்தசாம பூஜை முடிந்து, ஞானியார் வீட்டுக்கு வந்தமர்ந்தார். ஞானியார் அடிகள் திருச்செந்தூரில் உச்சிகால பூஜை நடைபெறும் சமயம் மூலஸ்தானத்துக்குள் நுழைந்தார்.
மூலஸ்தானத்துக்குள் நூதனமாக ஞானியார் செல்வதைக் கண்டு அங்கிருந்த அனைவரும் திகைத்தனர். கர்ப்பகிரகத்தில் பூஜை செய்துகொண்டிருந்த போத்திமார்கள், “எல்லாம் அறிந்த ஞானியார் நீங்களே இப்படி உள்ளே வரலாமா?” என்று கேட்டனர்.
ஞானியார் புன்னகையோடு மறுமொழிஎதுவும் கூறாமல் திடீரென கர்ப்பகிரகத்துக்குள் மறைந்துவிட்டார். இச்சம்பவம் நடந்த அதே நேரத்தில் குலசேகரன்பட்டினத்தில் ஞானியார் உடலில் இருந்து உயிர் பிரிந்தது. அன்று முதல் ஞானியார் அடிகள் வாழ்ந்த இல்லம் ‘படுக்கை வீட்டு சுவாமி கோயில்’ என்று அழைக்கப்படுகிறது.
திருச்செந்தூர் கோயில் போத்திமார்கள் முருகப் பெருமான் திருவருள்படி இந்தப் படுக்கை வீட்டுக் கோயிலுக்கு ஒரு குத்துவிளக்கை உபயமாக வழங்கினர். ஞானியாரின் பூத உடல் குலசேகரன்பட்டினத்தில் ஜீவசமாதி வைக்கப்பட்டு பூஜை நடைபெற்றுவருகிறது. ஞானியார் அடியார் ஜீவசமாதியான கார்த்திகை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று குருபூஜை நடைபெறுகிறது.
திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனைத் தரிசித்துவிட்டு, ‘படுக்கை வீட்டு கோயி’லுக்குச் சென்று ஞானியார் அடிகளாரை வணங்கினால் துர்சக்திகளின் தொல்லைகள் விலகி நல்வழிகிட்டும் என்பது நம்பிக்கை.
- gomathivinayagam.s@hindutamil.co.in