

வானமாய் இருந்தால் புரியவில்லை, அது
வார்த்தையில் நுழைந்தால் போதவில்லை!
வடிவமாய் வந்தாலோ ஏற்பதில்லை, அது
வாரா திருந்தாலோ அமைதியில்லை
ஏனடா மானுடா பிடிவாதம்!
எப்போதும் நிழலிலே ஒருமோகம்!
இருப்பதை இருந்துதான் அறியவேண்டும்
இதுமட்டும் தானடா தெரியவேண்டும்!!
கண்ணன், ‘மாதங்களில் நான் மார்கழி’ என்று சொல்லும்போது, அழகாக இருப்ப தெல்லாம் தான் என்கிறான் என்று நினைத்துக்கொள்கிறோம். ‘சேனாதிபதிகளி லேயே நான் ஸ்கந்தன்’ எனும்போது, சிறப்பானவையெல்லாம் தான் என்கிறான் போலும் என்று நினைத்துக்கொள்கிறோம்.
‘சூதாட்டத்தில் நான் பகடைக்காய்’ என்று சொல்லிச் சிரிக்கும்போதோ குழம்புகிறோம். இதில் அழகேது, சிறப்பேது? ‘எதிலும் எது இன்றியமையாததோ அதுதான் நான்’ என்பதைத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறான் அந்தப் புன்னகை மன்னன். உடலில் உயிர், உயிரில் உணர்வு, உணர்வில் அறிவு, அறிவில் தெளிவு, தெளிவில் பணிவு, பணிவில் கனிவு, கனிவில் காதல், காதலில் கவிதை, கவிதையில் கடவுள்!
பறிகொடுக்கப்படும் கடவுள்: உடல்தான் நாம் என்கிற மயக்கத்தில் நாம் இருப்பதால், நமக்கு வரம்புகள் நேர்கின்றன. நம் சிறகுகள் நமக்கு மறந்துபோய், நமக்குக் கால்கள் நீண்டு கனக்கின்றன. இந்த வரம்புகள், எதையும் அதுவாக அறிய முடியாமல் செய்துவிடுகின்றன. ஒரு மரத்தை மரமாகப் பார்க்கக்கூட நாம் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. ஒரு மனிதனை ஆண், பெண் என்னும் பாகுபாடில்லாமல் பார்க்கிற பார்வை நமக்கு இன்னும் வாய்க்கவில்லை.
அசைந்தும், அசைவே இன்றியும் நம்மைச் சுற்றி எப்போதும் பல்கிப் பெருகிக்கொண்டிருக்கும் இயக்கத்தின் உன்னதத்தை உயிரின் நில்லாத எக்களிப்பு என்று ஒருபோதும் நம்மால் நினைத்துப்பார்க்க முடியவில்லை. அண்டத்தைக்கூட நாம் ஒரு பண்டமாகவே கருதுவதால், அதை விண்டு விண்டுதான் சுவைக்க விரும்புகிறோம்.
எந்த ஒன்றுக்கும் பெயர் வைக்கவில்லை என்றால் நாம் பெயர்ந்தே போய்விடுகிறோம். கழுத்தில் ஒரு பொன்கயிறில் தொங்கிக் கொண்டிருக்கும் மூக்குக் கண்ணாடியை மேசை, அலமாரி, சமையலறை, பக்கத்து வீடு, வெளியூர் என்று எங்கெங்கெல்லாமோ தேடுகிறோம். அதே போல, உடம்பே நாம் என்னும் மயக்கத்தால் நமக்குப் பகுத்தல் என்கிற ஒரு பாவனை தோன்றியிருக்கிறது. அந்தப் பாவனையில் நாம் பறிகொடுத்ததுதான் பரம் என்னும் கடவுள்.
உண்மை எனும் பாவனை: ஒரு பாவனையை, இன்னொரு பாவனையின் மூலம்தான் கடக்க முடிகிறது. அறியாமை ஒரு பாவனைதான். அறிவை பாவித்துத்தான் அதைக் கடக்க முடிகிறது. பொய் என்னும் மிகக் கடுமையான பாவனையைத் தகர்க்க வேண்டுமென்றால், அதற்கு மெய் என்னும் அதிமென்மையான பாவனை தேவைப்படத்தான் செய்கிறது! எனில், பகுத்தலே இயல்பாகிப்போன பாமரன், பரம்பொருளை எப்படித்தான் அறிவது? பாவனையால்!
“காவி உடுத்தவேண்டா கற்றைச் சடைவேண்டா
பாவித்தல் பொதும் பரமநிலை எய்துதற்கே!" (பாரதி)
உடம்பே நான் என்பதும், அதனால் விளைந்த துன்பங்களும் பாவனையின் விளைவுகள்தான் என்பதை உணர்ந்தால், அவற்றைப் பொய்யென்று பாவித்து ஏன் அவற்றைக் கடக்க முடியாது? என்னுடைய குருநாதர் ஒருமுறை என்னிடம் சொன்னார், “உண்மை என்பது, அதைப் பாவிப்பதன் மூலமே உணரப்படுகிறது. ஏனெனில், அது உண்மை என்பதால்!” என்று முடித்தார். அந்த நாற்காலி நான், இந்த ஜாங்கிரி நான் என்று கோடிமுறை சொல்லிக்கொண்டிருந்தாலும் நாம் நாற்காலியாகவோ, ஜாங்கிரியாகவோ ஆக மாட்டோம். ஏனென்றால் அது உண்மையில்லை. மேலும், ஆவதல்ல ஆன்மிகம். அறிவதே ஆகும். இன்னும் சொல்லப்போனால், உணர்வதேயாகும்.
மாறாக, ஆயிரம் பாதச் சதங்கைகளாகக் கொஞ்சும் கடலின் முன்போ, சித்தத்தை விரித்ததுபோல் சிரித்துக்கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் மண்டிக்கிடக்கும் வானத்தைப் பார்த்துக்கொண்டோ, படியே சிகரமாகப் பட்ட பாவனை மாறிப்போய், சிகரமே படியாய்த் தோன்றும் ஒரு சிலிர்ப்புமிக்க மலைமுகட்டில் நின்றுகொண்டோ, கைகளை விரித்து, பாரதியைப் போல் இப்படிப் பாடிப் பார்த்தால் என்ன?
அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்;
கண்டநற் சக்திக் கணமெலாம் நான்,
காரண மாகிக் கதித்துளோன் நான்
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்;
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்கு முதற் சோதிநான்!
இதே பாடலில், வெட்ட வெளியின் விரிவு, பாடுகிற பெண்களின் சங்கீதம், கடலில் இருக்கிற உயிர், களையுடன் விளங்குகிற நகரம், கோபுரம், கம்பனின் கவிதை, இவையெல்லாம் நானே என்பவன், எல்லா இன்பங்களும் நான்தான் என்று சொல்லி நிறுத்தாமல், துன்பங்களின் தொடர்களும் நானே என்கிறானே! மனிதர்களில் கீழானவர்கள் யார்? பொய்சொல்பவர்கள்.
அந்த மனிதர்களில், அந்தப் பொய்களெல்லாம் நானே என்கிறான். எப்படி? அந்தப் பொய் இல்லை என்றால் அவர்களுக்கு வாழ்க்கையே இல்லை! எந்த அடிப்படையில், எதை அறிவுறுத்த இப்படிச் சொல்கிறான்?
“இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்”
எந்தவொன்று இல்லாமல் எந்தவொன்றும் இருக்க முடியாதோ, அதுதான் நான் என்று கண்ணன் கீதையில் சொன்னானே, அதுதான் நான் என்று தருக்கும் களிப்பும் தழுவிய லஹிரியில் சொல்கிறான் தமிழ்க் கவிஞன். அதோ உங்கள் வீதி முனையில் உங்கள் நண்பர் வந்துகொண்டிருக்கிறார். இயற்கையென்றும், இறைவனென்றும் ஏதோ நாம் பெயர்வைத்திருக்கிற ஓர் இருப்பால் அனுப்பப்பட்டவர் என்று கருதுங்கள்.
அது தொடக்கம். அவர் அருகில் நெருங்க நெருங்க, அவர் இறைவனே என்று பார்க்கப் பழகுங்கள் அது தொடர்ச்சி. பிறகு, அந்தச் சாரப் பலகையில் இறைவனும் இறைவனுமாக அமர்ந்து உரக்கச் சிரியுங்கள் தேநீர் அருந்தியபடி. அதுதான் கொண்டாட்டம். அந்தக் கடைக்காரக் கடவுளும் அதில் கலந்துகொள்ளட்டுமே!
கூடவே ஒரு மசால்வடையை இருவருமாய்ப் பகிர்ந்துகொண்டால், அந்தக் கடவுளைத் தேடும் முயற்சியும், சாடும் மூர்க்கமும் தவிர்த்துப் போன மகிழ்ச்சியில் உதிர்வுகளைப் பற்றிக்கொண்டு விரையும் எறும்புகள், சற்று நன்றியுடனே!
(தரிசனம் நிகழும்)
- tavenkateswaran@gmail.com