

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராம்கர் ஜில்லாவில் சின்ன மஸ்தாவுக்கு கோயில் உள்ளது. மகா வித்யாக்கள் என்கிற பார்வதியின் 10 அம்சங்களில் சின்ன மஸ்தாவும் ஒருவர். காளி, தாரா, திரிபுரசுந்தரி, புவனேஸ்வரி, பைரவி, சின்ன மஸ்தா, தூமாவதி, பகளாமுகி, மாதங்கி, கமலாத்மிகா என மொத்தம் 10 வித்யாக்கள். இதில் 6ஆவது வித்யா சின்ன மஸ்தா. இவரைப் பற்றி நன்கு அறிந்துகொள்ளுமுன், இவருக்கு கோயில்கள் மிக மிக குறைவு என்பதை நினைவில் கொள்வோம்.
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிந்தாபூரணியில் சின்ன மஸ்தாவுக்கு கோயில் உள்ளது. காசிக்கு அருகில் ராம் நகரில் மற்றொரு கோயில் உள்ளது. மேற்கு வங்காளத்தின் விஷ்ணுபூரில் கோயில் உள்ளது. நேபாளத்தின் காத்மாண்டு பள்ளத்தாக்கில் சின்ன மஸ்தாவுக்கு கோயில் உள்ளது.
சின்ன மஸ்தாவை போர் வீரர்கள் வணங்க வேண்டும் எனக் கூறுவர். ஏன்?
அவர்கள் இரண்டை வெல்லணும். ஒன்றை ஏற்கணும். வெல்ல வேண்டியவை: காமத்தை, மரண பயத்தை. ஏற்க வேண்டியது: தியாகத்தை.
- இந்த மூன்றின் உருவம் சின்ன மஸ்தா!
இனி சின்ன மஸ்தா கதைக்குப் போவோம்.
தேவர் - அசுரர் போரில் அசுரரை அழித்த சக்திக்கு அவளின் ரௌத்ரம் அடங்கவில்லை. இதனால் தன் தலையை வெட்டி தன் இடது கையில் பிடித்திருக்க, ரத்தம் பீறிட்டு மூன்று பிரிவுகளாகத் தெறிக்கிறது. ஒன்றை சக்தியின் வாயே ஏற்கிறது. மற்ற இரண்டை, அவளுடைய தோழியர் இடாகினியும் வாருணியும் ஏற்கின்றனர்.
செம்பருத்திப் பூ நிறத்துடனும் விரித்த கூந்தலுடனும் பிறந்த மேனியுமாய்க் காட்சி தருபவள். நாகத்தைப் பூணூலாக அணிந்திருக்கிறாள். வலது கையில் வெட்டுவாளை உயரத் தூக்கிப் பிடித்துள்ளாள். இதுதான் அவளுடைய அடிப்படை உருவம். அகோரம் அவளுடைய காட்சி.
இனி கோயிலுக்குச் செல்வோம். ராம்கர் மாவட்டத்தில் உள்ள ராஜ்ரப்பா என்கிற இடத்தில் அமைந்துள்ளது சின்ன மஸ்தா கோயில். இந்தக் கோயிலுக்கு நம்மைப் போன்றே வருகை தரும் ஏராளமானோரைக் காணலாம். இந்தக் கோயிலை தாந்திரீக கோயில் என அழைக்கின்றனர். அப்படியென்றால்?
இங்கு பக்தர்கள் விரும்பும் நல்ல எண்ணங்கள் நிறைவேறும் என்கிற நம்பிக்கை. ராஜ்ரப்பா நகரிலிருந்து 28 கி.மீ. தொலைவில் இந்தக் கோயில் உள்ளது.
தாமோதர் மற்றும் பைரவி என்னும் நதிகள் சங்கமிக்கும் இடத்தில் ஒரு சிறு குன்றின்மீது இருப்பதால், கூடுதல் ஆர்வத்துடன் பயணிக்கலாம். இந்த இடத்தை அடைந்தவுடன், நேராகக் கொஞ்சம் படியேறி கர்ப்பகிரகத்தில் அம்மனை்த் தரிசிக்கலாம்.
இங்கு சின்ன மஸ்தா, தலை இல்லாமல், தாமரைப் படுக்கையில், மன்மதன், ரதியை மிதித்தபடி நிற்கிறாள். முன்பு நாம் வர்ணித்தபடியே இடது கையில், சீவப்பட்ட தலை, வலது புற கையில் வாள், வெட்டப்பட்ட பகுதியிலிருந்து மூன்று தனித்தனி வீச்சாக ரத்தம் பீரிட்டு அடிக்கிறது. அதில் ஒன்றை சின்ன மஸ்தாவின் வாய் ஏற்கிறது. மற்ற இரண்டை அவளது தோழியர் அருகில் நின்றபடி ஏற்கின்றனர். பின்புறத்தை சுடுகாடாக கற்பனை செய்துகொள்ள வேண்டும். இங்கு காலடியில் மன்மதன், ரதி கிடக்கின்றனர். கழுத்தில் மண்டைஓடு மாலை. சில சின்ன மஸ்தா கோயில்களில் சிவனே காலடியில் கிடப்பார்!
இதில் மன்மதன், ரதி தாத்பர்யம் என்னவென்றால், காமத்தை வெல்ல வேண்டும். அதாவது காமத்தை காலில் போட்டு மிதித்து நசுக்கு. ஒதுக்கு எனப் பொருள். இந்த அம்மனை வணங்கினால் காம இச்சையைக் கட்டுப்படுத்த உதவுவாள் எனப் பொருள்.
மண்டை ஓடு மாலை மாட்டியிருப்பதன் தாத்பர்யம், எதற்கும் பயப்படாதவள். குறிப்பாக, மரணத்துக்குப் பயப்படாதவள். இந்த அம்மனை வேண்டினால் மரண பயத்தைப் போக்கிவிடுவாள் என்பது அர்த்தம்.
தன் தலையை தானே வெட்டிக் கொள்வதன் பொருள், அவசியமானால் தலையைக் கொடுக்கும் அளவுக்குக்கூட தியாகம் செய்யக் காத்திருக்க வேண்டும் என்பதே. ஆக, இவற்றின் பொது பொருள், சின்ன மஸ்தா பக்தர்களை ஒருபோதும் கைவிடமாட்டாள்!
பக்தர்களின் மனக்குறைகளை நீக்கி, மகிழ்ச்சியாக வாழ வைப்பதுதான் அவளின் நோக்கம். சின்ன மஸ்தாவுக்கு மாலைகளால் அலங்காரம், நகைகள் அணிவிக்கப்பட்டுள்ளன.
சிந்தாபூரணி சின்ன மஸ்தா: இந்தக் கோயிலுக்கும் இமாச்சலில் உள்ள சிந்தா பூரணி சின்ன மஸ்தாவுக்கும் சிறு வித்தியாசம் உண்டு. இமாச்சல் சிந்தாபூரணியில் அம்மன் (ஒரு பின்டி - ஒரு கல்) ஒரு கல்தான். அதற்குத்தான் அலங்காரம் செய்து வைத்திருப்பர். ஆனால் கூறப்படும் கதை, சின்ன மஸ்தா கதைதான். சிந்தாபூரணியில் தாயாரின் பெயர் மாசின்னமஸ்தா அல்லது சின்னமஸ்டிகா! இதன் பொருள், தன் தலையைத் தானே துண்டித்துக் கொண்டவள் என்பதுதான். இந்த ஆலயத்திற்கு வெளியே வந்தால் ஏராளமான சந்நிதிகள் உள்ளன. சூரியன், அனுமன், சிவன், மற்ற வித்யாக்களுக்கும் சிறு சிறு சந்நிதிகள் உள்ளன. இந்தத் தாய்க்கு சண்டிகா எனவும் பெயருண்டு.
சங்கமிக்கும் அமைதியும் ஆக்ரோஷமும்: இரு நதி சந்திக்கிற இடத்தில் உள்ள கோயில் சார்ந்து ஒரு தகவல். பைரவி - பெண் நதி. தாமோதர் - ஆண் நதி. இரண்டும் இணைவது ரம்யமான காட்சி. இதில் பைரவி ஆக்ரோஷமாக ஓடும் நதி. தாமோதர் அமைதியாகத் தவழும் நதி.
பழைய கோயில் சேதமடைந்ததால், புதிய கோயில் கட்டப்பட்டு, பழைய சிலையே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கு முதலில் விலங்கு பலி இருந்தது. இப்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இந்த ஆலயத்தில் செவ்வாய், சனி விசேஷம். ஆண்டு முழுவதும் பக்தர்கள் வருகின்றனர். அமாவாசை, பௌர்ணமிக்கு தவறாமல் பக்தர்கள் வருகின்றனர். தாமோதர் நதியில் இறந்தவர்களின் சாம்பலைக் கரைக்கின்றனர். ஜனவரியில் மகர சங்கராந்தியின்போது, கண்காட்சி நடக்கிறது.மக்கள் திரளாகக் கூடுகின்றனர். விஜயதசமியும் இங்கு விசேஷம்.
அமைவிடம்
அக்டோபர் முதல் மார்ச் வரை பயணத்துக்கு உகந்த காலம். ராஞ்சியிலிருந்து இரண்டு மணி நேரப் பயணத்தில் இந்தக் கோயிலை அடையலாம். சென்னையிலிருந்து ராஞ்சி சென்று அங்கிருந்து 79 கி.மீ. தொலைவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.
- radha_krishnan36@yahoo.com