

அருணாச்சல ரமணா - மாத்ருபூதேஸ்வர காண்டம் நாட்டிய நாடகத்தை ரமண மகரிஷி சென்டர் ஃபார் லேர்னிங், பெங்களூரு மற்றும் சென்னையைச் சேர்ந்த ரஸாவில் பயிலும் குழந்தைகள் அண்மையில் நாரத கான சபாவில் நடத்தினர்.
ரமண மகரிஷியின் வாழ்க்கையைச் சொல்லும் ஆறாவது பகுதி - மாத்ருபூதேஸ்வர காண்டம். ரமண மகரிஷியின் வாழ்க்கையை பரிபூரணமாக எழுதி, நாடகமாக்கி டாக்டர் அம்பிகா காமேஷ்வரும் (ரஸாவின் இயக்குநர், நடனக் கலைஞர்) டாக்டர் சாரதாவும் (தலைவர், ரமண மகரிஷி சென்டர் ஃபார் லேர்னிங்) தொடர்ச்சியாக வழங்கிவருகின்றனர்.
இந்த நாடகத்தில் ஏறக்குறைய 30க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கெடுத்தனர். இவர்களில் 5 வயது குழந்தைகளும் இருந்தனர். 65 வயதான குழந்தைகளும் இருந்தனர். இதற்கு முன்னதாக, பகவான் ரமணரின் வாழ்க்கைச் சரித்திரத்தை விளக்கும் பால காண்டம், ஞான காண்டம், யாத்திரை காண்டம், திருப்பெயர் காண்டம், அன்னை காண்டம் ஆகியவை நாடகமாக நடத்தப்பட்டன.
தற்போது ஆறாவதாக மாத்ருபூதேஸ்வர காண்டம் (ஈஸ்வரனே தாயாகப் பிறத்தல்) பகவானுடைய அன்னையின் பெருமையைப் பேசுகிறது. பகவான் ரமணரின் தாய் அழகம்மாளின் சமாதியில் பிரதிஷ்டை செய்யப்படும் லிங்கத்துக்கு மாத்ருபூதேஸ்வரர் என்னும் பெயரைச் சூட்டுபவர் வசிஷ்ட கணபதி முனி.
அழகம்மாளின் சமாதியை உருவாக்கும் காட்சியோடு நாடகம் தொடங்குகிறது. பகவானின் அன்னைக்கு இறுதி மரியாதை செய்யத் திரளான கூட்டம் கூடுகிறது. அழகம்மாள் என்பவரின் சரித்திரம் ஃபிளாஷ்பேக் உத்தியில் சொல்லப்படுகிறது. அழகம்மாளின் பிறப்பு, அவரின் இளமைக் காலம், பகவான் ரமணருக்கும் அழகம்மாளுக்கும் இடையே நடக்கும் ஆன்மிக வெளிச்சத்தைப் பரப்பும் உரையாடல்கள், வாழ்க்கையின் தத்துவத்தைச் சொல்லும் ரமணர் எழுதிய அப்பளப் பாட்டின் சாராம்சம் போன்றவை நம்முன் தெய்விகக் காட்சிகளாக விரிகின்றன.
இளவயது அழகம்மாள், சிவா, குஞ்சுசாமி, அலமேலு, லட்சுமி அம்மா, ராமநாத பிரம்மச்சாரி, இளவயது பகவான், வெங்கடு பாத்திரங்களில் முறையே வைஷ்ணவி பூர்ணா, உஜ்வால், வின்சென்ட், உமா, ரேவதி, அஸ்வினி, விராஜ், அத்வைத் ஆகிய குழந்தைகள் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினர். ஞானத்தைப் போதிக்கும் பகவானின் உரையாடல்கள், பாடல்கள், இசை, காட்சிகள் என அனைத்தும் நாடகம் என்னும் நிகழ்வைத் தாண்டி, ஒரு சத்சங்க உணர்வை பார்வையாளர்களிடம் உண்டாக்கின.