

நபிகளாரின் முதல் போரான பத்ர் போரில் மக்காவின் நிராகரிப்பாளர்கள் தோல்வியடைந்தனர். அதனைத் தாங்கிக்கொள்ள முடியாத அவர்கள் நபிகளாரை பழிதீர்க்க அடுத்தக் கட்ட போருக்காக தங்களைத் தயார்படுத்திக்கொண்டிருந்த காலக்கட்டம் அது.
கஃபாவின் அருகே ஹிஜிரின் மீது அமர்ந்து உமைரும் ஸஃப்வானும் ஓர் இரவில் பத்ருபோரின் தோல்வி குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.
“ஸஃப்வானே! எனக்கு மட்டும் அதிக கடனும் குடும்பச் சுமையும் இல்லையென்றால் இப்போதே நான் மதீனா சென்று முஹம்மதை கொன்றுவிடுவேன்” என்று உமைர் கூறினார்.
போரில் ஸஃப்வானும் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ஸஃப்வான், “உமைரே! கவலைப் படாதீர்.. உம் குடும்பத்தை என் குடும்பத்தைப் போன்று இறுதிவரை நான் காப்பாற்றுவேன், உமது கடனையெல்லாம் நான் தீர்த்து விடுகிறேன். என்னிடம் சொன்னதை மட்டும் நீர் நிறைவேற்றும்” என்றார்.
இந்தக் காரியம் கச்சிதமாக முடியும்வரை இதனை யாரிடத்திலும் பேசக் கூடாது என்று இருவரும் சபதம் எடுத்துக்கொண்டனர். அடுத்த நாள் உமைர், இப்னு வஹ்ப் யுத்தக் கைதியாக உள்ள தனது மகனை மீட்டு வருவதாகக் கூறி விஷம் தோய்ந்த வாளுடன் மதீனா தோக்கிப் புறப்பட்டார்.
மதீனாவை அவர் சென்றடைந்த போது, நபிகளார் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தார்கள். உமைர் வந்திருப்பது நபிகளாருக்குத் தெரிவிக்கப்பட்டது. அவரை தன்னிடம் வரவிடுமாறு நபிகளார் கூறினார். உமைரை மிகுந்த பாதுகாப்போடு நபிகளாரிடம் அழைத்துச் சென்றார்கள்.
உமைரே உமது வருகைக்கான காரணம் என்ன? என்று நபிகளார் வினவினார்.
“கைதியாக உம்மிடம் பிடிபட்டுள்ள எனது மகனை மீட்டுச் செல்லவே இங்கு வந்தேன்” என்றார் உமைர்.
“அப்படியானால் உமது கையில் ஏன் நெடிய வாள்” என்றார் நபிகளார்.
“எங்களது வாளை இறைவன் சபிக்கட்டும். அதனால் எங்களுக்கு எந்த லாபமும் இல்லையே” என்றார் உமைர்.
“உண்மையைக் கூறும்” என்று நபிகளார் மீண்டும் அவரிடம் கேட்டபோது, உமைர் முன் சொன்ன அதே பதிலையே கூறினார்.
அப்போது நபிகளார் மக்காவின் ஹிஜ்ரின் மீது அமர்ந்து உமைரும் ஸஃப்வானும் பேசிக் கொண்ட உரையாடலை எவ்வித சொல்மாற்றமும் இன்றி அப்படியே மீட்டுக் கூறியதுடன், உமைரே நீர் என்னைக் கொல்லத்தானே இங்கு வந்துள்ளீர், உமைரே உமது கடனுக்கும் குடும்பத்திற்கும் ஸஃப்வான் பொறுப்பேற்றுக் கொண்டார் அல்லவா? என்றும் கேட்டார்.
“முகம்மதே உமக்கு இதனைக் கூறியது யார்? நாங்கள் இருவரும் ரகசியமாக பேசிக் கொண்டோம். அங்கு வேறு யாரும் இல்லையே” என்றார் ஆச்சரியத்துடன் உமைர்.
நபிகளார் இதமாக பதிலளித்தார்கள். இறைவன் உங்கள் இருவரின் பேச்சையும் ஜிப்ரீல் என்பவரைக் (வானவரைக்) கொண்டு எனக்குத் தெரிவித்தான் என்றார்.
“முகம்மதே உம்மைப் பற்றிய உண்மையினை இறைவன் எனக்கு விளங்கச் செய்துவிட்டான். அதற்காக அவனுக்கு நன்றி செலுத்துகிறேன்!”என்ற உமைர், நபிகளாரின் கரம்பற்றி இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டார்
வஞ்சக எண்ணத்தோடு வந்த உமைரின் உள்ளத்தை நபிகளாரின் கனிவான கருத்துகள் வென்றெடுத்தது என்பது நமக்கெல்லாம் ஒரு நற்பாடமாக இருக்கிறது.
- ervaimohdsalahudeen@gmail.com