விவிலிய ஒளி 04: ‘பொழுதுபோக்கு’ கடவுளின் வரம்!

விவிலிய ஒளி 04: ‘பொழுதுபோக்கு’ கடவுளின் வரம்!
Updated on
1 min read

‘பொழுதுபோக்கு’ என்கிற சொல் தற்கால வாழ்வில் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. மது அருந்துவது, சூதாடுவது, தீயவற்றில் நாட்டம்கொள்வது ஆகியன பொழுதுபோக்கு அல்ல. ஏனென்றால், பொழுதுபோக்கு என்பது, மனிதன் தனது வாழ்க்கையை அனுபவித்து மகிழ வேண்டும் என்பதற்காக இறைவன் செய்த ஏற்பாடு என புனித விவிலியம் எடுத்துக்காட்டுகிறது.

திருப்பாடல் எண் 104இல் 15 மற்றும் 16ஆவது வரிகளைக் கவனியுங்கள்: “நிலத்திலிருந்து அவர் உணவை விளையச் செய்கிறார். ஆடு மாடுகளுக்காகப் புல்லையும், மனிதர்களுக்காகச் செடி கொடிகளையும் முளைக்க வைக்கிறார். மனிதனுடைய இதயத்தை வலுப்படுத்தத் திராட்சை ரசத்தையும் முகத்தைப் பளபளப்பாக்க எண்ணெய்யையும் உடலுக்குத் தெம்பளிக்க அவர் உணவையும் தருகிறார்” என்று பாடுகிறது.

அதேபோல், பிரசங்கி புத்தகம் 3:12இல் “மனிதர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்து, நல்ல காரியங்களைச் செய்து, நல்லதைச் சாப்பிட்டு, நல்லதைக் குடித்து, தங்கள் கடின உழைப்பால் கிடைக்கிற சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும். இதைவிட மேலான பொழுதுபோக்கு என்று வேறு எதுவுமே இல்லை என்று புரிந்துகொண்டேன். இது கடவுள் தரும் பரிசு” என்று சொல்கிறது.

ஆக, மனிதர்கள் ஓடி ஓடி உழைப்பதும் சேர்ப்பதும் தங்களது அடிப்படையான தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவே. அவற்றில் முதன்மையானது உணவும் உறைவிடமும். நல்லதை உண்டும் குடித்தும் வாழ்வதில் அதன் மேன்மை அடங்கியிருக்கிறது என எடுத்துக்காட்டும் இந்த வசனம், தற்காலத்தில் முற்றிலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.

தீயவற்றை உண்பதை ஒரு பெரும் கொண்டாட்ட மாகவும் பொழுதுபோக்காகவும் கடைபிடிக்கும் வாழ்க்கை முறை உருவாகிவிட்டது. எண்ணெய்யில் பொரித்து உண்ணும் ‘ஃபாஸ்ட் ஃபுட்’ கலாச்சாரம் வெகு வேகமாக நோய்களை நோக்கி நம்மைத் தள்ளிவிடுகிறது.

இன்னொரு பக்கம், மதுவுக்கு அடிமையாகி, அதுவே வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டு வரும் என்கிற ‘மாயை’யை நம்புகிறவர்கள் அதிகமாகிவிட்டார்கள். உணவையும்மதுவையும் மையப்படுத்தியே இன்றைய பொழுதுபோக்குச் சந்தையில் தொழில் நடப்பதைப் புரிந்துகொண்டாலே இந்த விஷயத்தில் நாம் விழிப்படைய முடியும்.

குளிர் நாடுகளின் உணவு ஒருபோதும் வெப்ப நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு ஏற்றவை அல்ல. குளிர்நாடுகளின் உணவு வகைகள் வெப்ப நாடுகளின் உணவுச் சந்தையை ஆக்கிரமித்திருப்பதுடன், அவற்றை உண்பதைப் பொழுதுபோக்கின் ஒரு பகுதியாகவும் மாற்றியிருக்கின்றன.

கெட்டுப்போன உணவை ஒருபோதும் நாம் உண்ண விரும்பவே மாட்டோம். பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுப்பதும் அப்படித்தான் இருக்க வேண்டும். நமது ஒழுக்கம், ஆரோக்கியம் ஆகியவற்றைக் கெடுத்து விடாது என்று உறுதியாக நம்புகிற எப்படிப்பட்ட பொழுதுபோக்கையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in