பக்தி மணம் பரப்பும்: நெய் நந்தீஸ்வரர் கோயில்

பக்தி மணம் பரப்பும்: நெய் நந்தீஸ்வரர் கோயில்
Updated on
2 min read

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி எனும் ஊருக்குத் தெற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிற்றூர் வேந்தன்பட்டி. இவ்வூர் நகரத்தார் அதிகமாக வாழ்கிற ஊர். ‘செட்டிநாடு ஊர்’ என்றே சொல்லலாம். இவ்வூரில் ஆறு கோயில் நகரத்தார் வாழ்கின்றனர். இந்த ஊரின் சிறப்பம்சம் - ஸ்ரீ நெய் நந்தீஸ்வரர். இவ்வூரில் உள்ள சிவன் கோயிலில் நந்தி எம்பெருமான் நெய் நந்தீஸ்வரராக அருள்பாலிக்கின்றார்.

நந்தி எம்பெருமான் நெய் நந்தீஸ்வரராக அருள்பாலிப்பது இந்த ஊரில் மட்டுமே. இவ்வூரைச் சார்ந்த நகரத்தார் பெருமக்கள் பெருமுயற்சி செய்து இக்கோயிலைக் கட்டியுள்ளனர். இங்கே நந்தி எம்பெருமான் நெய் நந்தீஸ்வரராக வணங்கப்படுவது இக்கோயிலின் தனிச்சிறப்பு.

பழமை வாய்ந்த இக்கோயில் எட்டு முறை கும்பாபிஷேகம் கண்டுள்ளது. சிவபெருமானும் உமாதேவியும் மீனாட்சி, சொக்கலிங்கேஸ்வரர் என்னும் பெயரில் இக்கோயிலின் மூலஸ்தானக் கடவுளர்களாக அருள்பாலிக்கின்றனர். இவர்களைத் தவிர விநாயகர், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர், நவக்கிரகங்கள் போன்ற கடவுளர்களும் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர். நெய் நந்தீஸ்வரர் சிறப்பால், இக்கோயில் சிவன் கோயிலாக இருந்தபோதிலும் நந்திகோயில் என்றே இவ்வூர் மக்களால் அழைக்கப்படுகிறது.

ஊரின் நடுவே அழகுற அமைந்துள்ள இக்கோயிலின் உள்ளே நுழைந்ததும் நெய்மணம் கமகமக்கிறது. சிவனாரின் சந்நிதியை நோக்கிக் கம்பீரமாக வீற்றிருக்கிறார் நெய் நந்தீஸ்வரர். இவரின் மேனி முழுவதிலும் பசும் நெய் அப்படியே உறைந்து போயிருக்கிறது. எவ்வளவுதான் நெய் பூசினாலும் இவரது மேனியை ஈ, எறும்பு, பூச்சிகள் எதுவும் நெருங்குவதில்லை என்பது இன்னொரு சிறப்பு. கவியரசர் கண்ணதாசன் இந்த இறைவனைப் போற்றிப் பாடியுள்ளார்.

வேந்தன்பட்டியிலும் அதன் சுற்றுவட்டார கிராமங் களிலும் பசுமாடு வைத்திருப்பவர்கள், பால் கறந்து காய்ச்சி நெய் எடுத்து, இந்தக் கோயிலின் நந்தீஸ்வரருக்கு காணிக்கையாக செலுத்திய பிறகே பாலை விற்கவோ சொந்த உபயோகத் துக்கோ எடுத்துக்கொள்கின்றனர்.

தனப்ரியன்: நந்தி எம்பெருமானுக்கு தனப்பிரியன் என்கிற பெயரும் உண்டு. இவ்வூர் மக்கள் நெய் நந்தீஸ்வரரின் நெற்றியில் காசுகளைப் பொட்டுகளாக வைப்பதையும் பண நோட்டுகளைக் கயிற்றில் கட்டி நெய் நந்தீஸ்வரரின் கழுத்தில் மாலையாக போடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஆண்டுதோறும் தை மாதத்தில் மாட்டுப் பொங்கலன்று அதிகாலை 4 மணிக்கு நெய் நந்தீஸ்வரருக்கு, நந்தி விழாவினை இவ்வூர் மக்கள் நடத்திவருகிறார்கள். நந்தி விழா நாளன்று நெய் நந்தீஸ்வரருக்குச் சிறப்பு அபிஷேங்கள் செய்து 30 வகையான மாலைகளால் அலங்கரித்துத் தீப ஆராதனைகள் காட்டி வழிபடுகின்றனர். இந்த அதிசய விழா தமிழகத்து ஊர்களில் திருவண்ணாமலையிலும் வேந்தன்பட்டியிலும்தான் நடைபெறுகிறது. மற்ற ஊர்களில் நடைபெறுவதில்லை. தங்களின் வேண்டுதலை நிறைவேற்றும் நெய் நந்தீஸ்வரருக்கு வெங்கல மணியையும் பட்டுத்துண்டு ஒன்றையும் சார்த்துவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

பிரதோஷ விழா: நெய் நந்தீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் நந்தியைப் பசு நெய்யால் அபிஷேகம் செய்வர். அபிஷே கம் செய்த நெய் நந்தீஸ்வரரின் தோற்றம் முழுவதிலும் நிறைந்து தரையில் வழிந்து அப்படியே தேங்கி நிற்கின்றது.

மறுநாள், அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து நந்தவனத்தில் உள்ள நெய்க்கிணற்றில் கொட்டு கிறார்கள். நெய்க் கிணற்றின் உள்ளே பல ஆண்டுகளாக நெய் உறைந்து போயிருக்கிறது. இதன் உள்ளே உறைந்திருக்கும் நெய்யில்கூட ஈ, எறும்பு, பூச்சிகள் எதுவும் மொய்ப்பதில்லை.

- செந்தில் நாகப்பன், வேந்தன்பட்டி.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in