தித்திக்கும் திருப்புகழ் நாயகன் 25: திருவேங்கடம் | மாலவன் மருகோன் மயில்வாகனன்

தித்திக்கும் திருப்புகழ் நாயகன் 25: திருவேங்கடம் | மாலவன் மருகோன் மயில்வாகனன்
Updated on
2 min read

அதல விதல முதல் கிடுகிடு கிடுவென வருமயிலினிதொளிர்

ஷடுமையில் நடுவுற அழகினுடன் அமரும் அரகர சிவசிவப் பெருமாளே!

- திருப்புகழ்

மாலோன் மருகன் என்று சொல்வதற்கு ஏற்ப அவன் அனைவரின் செல்லக் குழந்தை. எனவே, அடிக்கடி செல்லக் கோபம் கொள்வதும், மலையில் ஏறி நிற்பதும் அவன் வாடிக்கை. மாமா என்பது தாய்க்கு அடுத்து அனுசரணையான உறவு. தாயிடம் கோபித்தால் அவர்கள் அடுத்து மாமனிடம்தான் ஓடி வருவார்கள். அப்படி திருவேங்கடம் வந்த முருகனைச் சிறப்பித்து திருப்புகழ் பாடுகிறார் அருணகிரியார்.

வேங்கடம் நின்ற வேலவன்: திருவேங்கடத்தில் ஆறு திருப்புகழ் பாடியுள்ளார் அருணகிரியார். பல இடங்களில் முருகனை “வேங்கட மாமலையில் உறைவோனே” என்றுதான் குறிப்பிடுகிறார். ஒரு சமயம் கந்தன் தன் தாயான உமையாளிடம் கோபித்துக் கொண்டு, பாதாள உலகத்தில் சிறிது காலம் ஒருவரும் அறியாமல் வாழ்ந்திருக்கிறான்.

அதன் பின் வேங்கடமலையில் உள்ள ஒரு குகை வழியே வெளிப்பட்டு, மலை உச்சியில் ஏறி, அங்கு நின்றருளிய பின்னர் கயிலைக்கு எழுந்தருளுகிறான். இச்செய்தி கந்தபுராணம் வாயிலாகத் தெரிகிறது. இந்தப் புராணக் கதையை அருணகிரிநாதர், “குகை வழி வந்த மலைச் சிகர வடமலை நின்ற பெருமாளே” என்று குறிப்பிடுகிறார்.

வழித்துணை வேலவன்: இங்கு பாடிய திருப்புகழில் வயது முதிர்ந்து உடல் தளர்ந்து போவதையும், கன்னங்கள் சதை வற்றி, கண்கள் குழி விழுந்து முதுகு கூனி, தடி ஊன்றி, நடை தடுமாறி உடல் முதுமைப் பருவத்தை அடையும் முன் முருகனின் அடியவர்களுக்குத் தொண்டு புரிய வேண்டும் என்கிறார்.

"கருத்த தலை வெளிறு மிகுந்து மதர்த்த இணை விழிகள் குழிந்து

கதுப்பிளுறு தசைகள் வறண்டு செவிதொலாய்க்...

உனக்கு அடிமை படும் அவர் தொண்டு புரிவேனோ?" என்றுதான் சொல்கிறார்.

இறைவனைவிட அவனின் அடியார்க்குத் தொண்டு புரிந்தாலே இறைவன் மகிழ்வான் என்கின்றன நம் புராணங்கள். அருணகிரியார் வழக்கம்போல் தான் பாடும் திருப்புகழில் மற்ற தெய்வங்களின் பெருமைகளைக் கூறுகிறார். முப்புரம் எரித்த சிவனின் மகன், நரகாசுரனை வதைத்த திருமால் என்றும், வடமலையில் உலாவிய மருகோனே என்றும் குறிப்பிடுகிறார்.

சரவண பவநிதி, அறுமுருக குருபரனே என்று ஓதுவோரின் பிறப்பு, இறப்பு என்ற வினைகளை அழித்து, நோய்களை நீக்கி, உயிர் இன்பமுறவும் அருள்பவன் குமரன் என்கிறார்.

"சரவண பவநிதி அறுமுக குருபர, சரவண பவநிதி அறுமுக குருபர

சரவண பவநிதி அறுமுக குருபர என ஓதி"

என்னும் பாடலின் மூலம் அவன் நாமத்தை ஓதினாலே அவனே ஓடி வருவான் என்கிறார் அருணகிரிநாதர்.

முருகன் உலாவும் இடங்கள்: முப்புரங்களையும் எரித்த ஈசனின் செல்வமகன் திருப்போரூரிலும் திருத்தணிகை, மிக உயர்ந்த சிவகிரி எனும் மலையிலும் திருவேங்கட மலையிலும் உலவுகின்றவன் என்பதை,

"திரிபுர மெரிசெயு மிறையவரருளிய குமரச மரபுரி தணிகையு

மிகுமுயர் சிவகிரி யிலும் வட மலையிலு முலவிய வடிவேலா"

என்னும் பாடலில் குறிப்பிடுகிறார். என்னு டையது, தன்னுடையது என்ற பாசம் அற்றுப் போகவும், மும்மலங்களால் உண்டாகும் மன விகாரங்கள் அகலவும் உன்னுடைய தாள்களை அருள்வாய் என்று வேங்கட மலையில் அருணகிரியார் வேண்டுகிறார்.

"எனதாந் தனதானவை போயற மலமாங் காடு

மோகவிகாரமு மிவை நீங்கிடவே இருதாளினை அருள்வாயே"

என்று முருகனிடம் ஒரு விண்ணப்பம் வைக்கிறார் அருணகிரியார். இங்கும் பாண்டவர், கௌரவர்கள் போரில் அர்ச்சுன னுக்குச் சாரதியாய் சென்ற கிருஷ்ண பரமாத்மாவின் புகழைக் கூறுகிறார்.

ஒப்புமை இல்லா ஒருவன், அழகன், முருகன். மலை மேல் அமரும் முருகனே நமக்கு உற்றார், உறவினர். அவனைத் தவிர வேறு கதி இல்லை என்பதை,

"உற்றார் எனக்கு ஒரு பேருமிலை.உமையாள் தனக்கு மகனே என்று அழைத்து,

முருகேசன் என்றனரசே வித்தாரமாக மயில் மீதேறி

வரவேணும் என்றன் அருகே"

என்று வேண்டுகிறது ஒரு பாடல். தமிழின் தலைவன் முருகனின் உருவம் மட்டும் அழகு இல்லை. அவனின் மனமும் அழகு. எனவேதான் அழகான மயில் மீதமர்ந்து வருவாய் என்றே திருப்புகழின் பாடல்கள் அவனை அழைக்கின்றன. மயிலின் தோகையாய்ப் பறந்து, விரிந்து காட்சி அளிக்கிறது அவனின் கருணை. கந்தா என்றால் காற்றைவிட வேகமாக வருவான் கதிர்வேலன்.

(புகழ் ஓங்கும்)

- gaprabha1963@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in