ருத்ரப் பிரயாகை கார்த்திக் சுவாமி கோயில்

படங்கள்: ஜார்ஜ் பிரவீன்
படங்கள்: ஜார்ஜ் பிரவீன்
Updated on
3 min read

தேவ பூமி என்று அழைக்கப்படும் உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பல கோயில்களில் ருத்ரப் பிரயாகை கார்த்திக் சுவாமி கோயிலும் ஒன்று. இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ள முருகப் பெருமான் தலங்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக இக்கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,050 மீட்டர் உயரத்தில் இக்கோயில் அமையப் பெற்றுள்ளது தனிச்சிறப்பு.

நந்தப் பிரயாகை, தேவப் பிரயாகை, ருத்ரப் பிரயாகை, கர்ணப் பிரயாகை, விஷ்ணுப் பிரயாகை ஆகிய ஐந்து இடங்கள் பஞ்சப் பிரயாகை என்று அழைக்கப்படுகின்றன. அலக்நந்தா நதியும் மந்தாகினி நதியும் சங்கமமாகும் இடம் ருத்ரப் பிரயாகை என்று அழைக்கப்படுகிறது.

பஸ்மாசுரனுக்கு வரம் அளித்து விட்டு அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக, சிவபெருமான் வந்து ஒளிந்துகொண்டது ருத்ரப் பிரயாகையில்தான். நாரத முனிவருக்கு சிவபெருமான், மகதி என்கிற வீணையைப் பரிசாக அளித்து, அதை மீட்டவும் உபதேசம் செய்தது ருத்ரப் பிரயாகையில்தான்.

கார்த்திக் சுவாமி கோயில் வரலாறு: கைலாய மலையில் ஒரு சமயம் சிவபெருமானும் பார்வதிதேவியும் தங்கள் மகன்களான விநாயகப் பெருமானுக்கும் முருகப் பெருமானுக்கும் போட்டி வைக்கின்றனர். யார் முதலில் உலகை ஏழு முறை வலம் வருகிறார்களோ அவருக்குச் சிறப்பு வெகுமதி என்று அறிவிக்கப்படுகிறது. உடனே முருகப் பெருமான் தனது பயணத்தைத் தொடங்குகிறார்.

விநாயகப் பெருமான் தனக்குத் தாய் தந்தையரே உலகம் என்று கூறி சிவபெருமான் - பார்வதியை வலம் வருகிறார். விநாயகரின் செயலால் மகிழ்ந்த சிவபெருமான், அவருக்கே அனைத்து பூஜைகளிலும் முதல் மரியாதை கிடைக்க வேண்டும் என்று அறிவிக்கிறார். அதனாலேயே எந்த வழிபாடு செய்தாலும் விநாயகருக்கே முதல் மரியாதை கிடைக்கிறது.

பிறகு வந்த முருகப் பெருமான், நடந்தவற்றை அறிந்து கோபம் கொள்கிறார். சிவபெருமானுக்காகத் தனது உடலையும் எலும்புகளையும் காணிக்கையாக்குகிறார். வெண்ணிற எலும்புகள் எல்லாம் ஒன்றாகி சுயம்பு வடிவ கார்த்திக் சுவாமியாகத் தேவர்களுக்குக் காட்சி அருளினார்.

சிவபெருமானும் முருகப் பெருமானின் திருவிளையாடலைப் புரிந்துகொண்டு, அவரை அவ்விடத்திலேயே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரியுமாறு பணித்தார். அதன்படி அருகில் உள்ள கிரௌஞ்ச மலையில் சௌகம்பா சிகரத்தின் பின்னணியில் வெண்நிறச் சுயம்புத் திருமேனியுடன் (வெண்பளிங்குக் கல்) அருள்பாலிக்கிறார் கார்த்திக் சுவாமி.

இந்தச் சம்பவங்கள் அனைத்தும் இந்த இடத்தில் நடைபெற்றதாக நம்பப்படுவதால், கார்த்திக் சுவாமி கோயில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. அவரே ஸ்கந்தன், கார்த்திகேயன், கந்தன், கடம்பன், கதிர்வேலன், முத்துக்குமரன், சுவாமிநாதன், வேலன், சரவணன், சுப்பிரமணியன் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

பனிமலைகள் சூழ்ந்த சிகரத்தில் இருந்து சூரிய உதயத்தையும் சூரிய அஸ்தமனத்தையும் காணலாம். குளிர்காலத்தில் இக்கோயில் பனியால் மூடப்பட்டிருக்கும். மழை பொழியும்போது பார்த்தால், மேகங்களில் இருந்து கோயில் எழுவதுபோல் இருக்கும்.

சந்தியா கால ஆரத்தி: இக்கோயிலில் ஆயிரக்கணக்கான மணிகள் கட்டப்பட்டிருக்கும். கார்த்திகை பூர்ணிமா தினத்தில் இங்கு வந்து இந்த மணியைக் கட்டி சுவாமி தரிசனம் செய்தால், பக்தர்களின் அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறும் என்பது ஐதீகம். தினமும் மாலை நேரத்தில் இந்த மணிகளின் ஓசையுடன் சந்தியா கால ஆரத்தி நடைபெறுவது தனிச்சிறப்பு.

பயணத் திட்டம்: அக்டோபர் முதல் ஜூன் வரையிலான காலகட்டமே இத்தலத்தைத் தரிசிக்க சிறந்த காலமாகும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் வரும் பௌர்ணமி தினங்கள் குறிப்பாக கார்த்திகை பூர்ணிமா தினத்திலும், ஜூன் மாதம் 11 நாட்கள் நடைபெறும் கலச யாத்திரை நிகழ்ச்சியிலும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். கோயில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

108 வலம்புரிச் சங்கு பூஜை: அண்மையில் உத்தராகண்ட் மாநில சுற்றுலாத் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக 108 வலம்புரிச் சங்கு பூஜை, வேள்வி, கலச ஸ்தாபனம் ஆகியவை நடைபெற்றன. சங்குகளில் இருந்த நீரால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகள் தென்னிந்திய முறையில் ஆகம விதிகளின்படி நடைபெற்றன. திருப்பரங்குன்றம் மற்றும் சுவாமிமலை முருகப் பெருமானுக்கு சாற்றிய வஸ்திரங்கள், கார்த்திக் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில் 20க்கும் மேற்பட்ட ஆதீனங்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

எப்படிச் செல்லலாம்? - டேராடூன் ரயில் நிலையத்தில் இருந்து 220 கி.மீ., தொலைவில் உள்ள ருத்ரப் பிரயாக் நகரம் சென்று, அங்கிருந்து கனக் சௌரி கிராமம் வரை (சுமார் 40 கி.மீ. தூரம்) சாலை மார்க்கமாக வாகனத்தில் பயணம் செய்ய வேண்டும். அங்கிருக்கும் ஒரு நுழைவாயிலை அடைந்ததும், அங்கிருந்து 3.5 கிமீ தூரம் மலைப் பாதையில் மேலே நடந்து செல்ல வேண்டும்.

சுமார் 3 கி.மீ., தொலைவை அடைந்ததும், அங்கிருந்து அரை கிமீ தூரத்துக்கு சுமார் 400 செங்குத்தான படிக்கட்டுகளில் நடந்து சென்றால் கார்த்திக் சுவாமி கோயிலை அடையலாம். மலைப் பாதையில் இடையிடையே இளைப்பாறுவதற்குச் சில நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மலையேற்றப் பாதையில் இயற்கைக் காட்சிகளை ரசித்த வண்ணம் செல்வதால், மலை ஏறுவதில் எந்தச் சிரமமும் தெரிவதில்லை. ஆங்காங்கே புதுப் புது பறவை இனங்களும் காணப்படுகின்றன. மலைப் பாதையில் செல்லடோலி அல்லது குதிரையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ருத்ரப் பிரயாகை கார்த்திக் சுவாமி கோயில் காணொலி: http://surl.li/jjvus3m-Smig

- sundararaman.k@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in