

உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள காசி விசுவநாதர் கோயிலில் பூஜைக்காக பயன்படுத்தப்படும் சந்தனம் தமிழகத்தில் இருந்துதான் பாரம்பரியமாக எடுத்துச்சென்று பயன்படுத்தப்படுகிறது. இதன் தொன்மை ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கும் முற்பட்டது. “பஞ்சாப் மெயில் தவறினாலும், நகரத்தார் சம்போ நேரப்படி தவறுவதில்லை” என்பது வாராணசி பழமொழி.
1813-ம் ஆண்டு முதல் தற்போது வரை ஒருநாள்கூட தவறாமல் பூஜை பொருள்கள் காசி விசுவநாதருக்கு எடுத்துச்செல்லப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
காசி விசுவநாதருக்கு தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார் சார்பில், கடந்த 1813-ஆம் ஆண்டு முதல் பூஜைகள், அபிஷேகங்கள் நடக்கின்றன. இதற்காக, நகரத்தார் சத்திரத்தில் இருந்து திருநீறு, சூடம், தேன், பஞ்சாமிர்தம், நெய், அரிசி, தயிர், பால், அருகம்புல், பூ மாலை, சர்க்கரை, சந்தனம் உள்ளிட்ட பூஜைக்கான பொருள்கள் மேள, தாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன.
ஆரம்பத்தில் நான்கு கால பூஜைக்கான பொருள்கள் நாட்டுக்கோட்டை நகரத்தாரால்எடுத்துச்செல்லப்பட்ட நிலையில் தற்போது மங்கள ஆரத்தி, உச்சிகால பூஜை, சிங்கார ஆரத்தி ஆகிய 3 பூஜைகளுக்குத் தேவையான பொருள்கள் எடுத்துச்செல்லப்படுகின்றன. அதிலும், இந்த பூஜைக்கு பயன்படுத்தப்படும் சந்தனத்துக்கு தனிச்சிறப்பு உண்டு.
இது குறித்து நாட்டுக்கோட்டை நகர சத்திர மேலாண்மை கமிட்டி தலைவர் லேனா நாராயணன் நம்மிடம் பேசினார்.
“காசி நாட்டுக்கோட்டை மேலாண்மை கழகம் 250 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. பர்மாவில் வாழ்ந்த நகரத்தார், `பர்மா நாட்டுக்கோட்டை பரிபாலன சபை' என்கிற ஓர் அமைப்பை ஏற்படுத்தி, காசி விசுவநாதருக்கும், விசாலாட்சிக்கும், அன்னபூரணி அம்மனுக்கும் கடந்த 250 ஆண்டுகளாக பூஜைகளை செய்து வந்துள்ளனர்.
காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி ஆகிய தெய்வங்களுக்கு நைவேத்திய பொருள்கள், பூஜை பொருள்கள் கடந்த 250 ஆண்டுகளுக்கும் மேலாக நாள்தோறும் 4 வேளைகள் சத்திரத்தில் இருந்து சென்றுகொண்டு இருந்தன. இப்போது 3 கால பூஜைகளுக்கு நைவேத்தியம், பூஜை பொருள்கள் மங்கள வாத்தியங்கள் வாசித்தபடி கொண்டு செல்லப் படுகின்றன.
பொதுவாக, பூஜைக்கு, அபிஷே கத்துக்கு கடையில் உள்ள சந்தன பொடியையோ, சந்தன வில்லையையோ வாங்கி அபிஷேகம் செய்வார்கள். நாங்கள் அவ்வாறு செய்வது இல்லை. பூஜைக்கான சந்தனத்தை, தமிழக வனத்துறையின் ஒப்புதலோடு சந்தனக் கட்டையாக (ஒரு கிலோ சுமார் ரூ.18,000) வாங்கி பாதுகாப்பாக காசிக்கு கொண்டு வருகிறோம்.
இந்தச் சந்தனக் கட்டையை பிரத்யேக இடத்தில் நாள்தோறும் 3 மணி நேரம் அரைத்து, நாள் ஒன்றுக்கு 400 கிராம் சந்தனம் எடுத்து, காசி விசுவநாதருக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த சந்தனத்தை பூஜைக்கு பயன்படுத்தும்போது, சுமார் 20 முதல் 30 அடி தூரத்துக்கு சந்தனத்தின் வாசனையை உணரமுடியும்” என்றார்.