

இரட்டைக் குதிரையில் சவாரி செய்யாதே என்பார்கள் பெரியவர்கள். இதற்கு அர்த்தம் இரண்டு துறைகளில் ஒருவர் தன் திறமையை வளர்த்துக்கொள்ளக் கூடாது என்பதல்ல, இரண்டிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்துவது சிரமம். ஆனால் அதுல்யா போன்ற சாமார்த்தியசாலிகளும் இருக்கிறார்கள். இவர்கள் இரண்டு குதிரையையும் ஒரே தேரில் பூட்டிப் பயணிக்கத் தெரிந்தவர்கள். அதுல்யாவிடம் பேச்சும் நடனமும் இரு கண்களாகச் சுடர்விடுகின்றன.
விசாகா ஹரியிடம் ‘ஹரிகதா’ பயிற்சியை எடுத்துக்கொண்டி ருக்கும் இவர், குருவின் ஆசீர் வாதத்துடன் பல தலைப்புகளில் ஆன்மிகச் சொற்பொழிவும் ஆற்றி வருகிறார். உதாரணத்துக்கு அவரின் சொற்பொழிவிலிருந்து ஒரு துளி:
“ஒரு புளிய மரப்பொந்தில் கிருஷ்ண தவத்தில் இருக்கும் நம்மாழ்வாரை நிஷ்டையில் இருந்து எழுப்புகிறார் மதுர கவி ஆழ்வார். அப்போது அவர் களுக்குள் நடக்கும் உரையாடல் இது.
செத்ததின் வயிற்றில்
சிறியது பிறந்தால்
எத்தைத் தின்று
எங்கே கிடக்கும்?
- இது மதுரகவி ஆழ்வாரின் கேள்வி.
அத்தைத் தின்று
அங்கே கிடக்கும்!
- இது நம்மாழ்வாரின் பதில்.
இந்த ஜடமான பிரபஞ்சத்திலே அணு போல் ஒரு ஜீவன் பிறந்தால், என்ன செய்து இந்த சம்சார சாகரத்தில் இருக்கும் என்று மதுரகவி கேட்டிருக்கிறார்.
“அதே விஷய சுகத்துக்கு ஆசைப்பட்டு அதே சம்சார சாகரத்தில் மூழ்கிடும்” என்று நம்மாழ்வார் சொன்னவுடன், மதுரகவி ஆழ்வாருக்கு புரிகிறது. இவர்தான் நம்முடைய ‘குரு’ என்று.
மடை திறந்த வெள்ளம் போல் திருவாய் மொழியைச் சொல்லத் தொடங்குகிறார் நம்மாழ்வார். அதை மதுரகவி ஆழ்வார் ஏடு (ஏட்டில் எழுதுவது) படுத்திக்கொண்டே வருகிறார். நமக்குத் திருவாய்மொழி இப்படித் தான் கிடைத்தது.
-அதுல்யாவின் நாவன்மைக்கு இது ஓர் உதாரணம்!
அண்மையில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சியில் அவரின் அபிநய வன்மை வெளிப்பட்டது. “நாட்டியத்தின் ஒவ்வோர் உருப்படியிலும் அவரிடமிருந்து வெளிப்பட்ட அடவுகளும், அபிநயங்களும், சாகித்யங்களின் பல்வேறு உணர்வுகளையும் அவரின் கண்களில் பிரதிபலித்த விதமும் அலாதியாக இருந்தன” என்றார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பேராசிரியர் ஏ. ஜனார்த்தனன்.
“பக்தி, ‘பாவம்’, அபிநயம், தாளஞானம் ஆகிய எல்லா திறன்களும் அதுல்யாவின் நடனத்தில் வெளிப்பட்டன. அதுல்யாவின் இந்தப் பெருமைக்கு முற்றிலும் காரணமானவர் அவரின் குரு சசிரேகா” என்றார் ஹரிகதா விற்பன்னர் விசாகா ஹரி.
இசை மேதை லால்குடி ஜெயராமன் ஷண்முகப்ரியா ராகத்தில் அமைத்த ‘தேவர் முனிவர்’ வர்ணமும், ரேவதி ராகத்தில் அமைத்த தில்லானாவும் அன்றைய நிகழ்ச்சியில் அதுல்யாவின் நாட்டியத்துக்கு முத்தாய்ப்பாக அமைந்தன.