

உடைகளைந்து நிற்பதுவா நிர்வாணம்? இந்த உடல்கடந்து நிலைப்பதன்றோ! உடலில், வெளியே சிலவும் உள்ளே பலப் பலவுமாகப் பல அங்கங்கள் இருப்பதை நாமறிவோம். ஆனால், நம் உடலென்பதே ஒரு மாபெரும் உடம்பின அங்கம்தான். ஆம், இயற்கை என்பது ஒரு மகத்தான தேகம். எல்லா உருவங்களும் வடிவங்களும் அதன் கணக்கற்ற அங்கங்களே!
எந்த ஒன்றின் அங்கமாக இருக்கிறதோ, அந்த ஒன்றின் இயல்புதான் அந்த அங்கத்துக்கும் இருக்கும். தத்துவமாகக் குழப்பாமல் தகவலாகவே சொல்லிப் பார்ப்போம். இயற்கையின் இயல்பு என்பது என்ன? தோன்றி மறைவது. அவ்வளவுதான்! எனவே, அந்த இயற்கையில் தோன்றும் எதுவும் மறைந்துதான் போகும். மறைதல் என்பது அழிதல் அல்ல. அல்லவே அல்ல. மீண்டும் தோன்றும் என்பதை உறுதிசெய்வதற்கே ‘மறை’ என்னும் அற்புதச் சொல் தோன்றியிருக்கிறது.
இரவும் பகலும், வெயிலும் மழையும், விதைப்பும் அறுப்பும், உறவும் பிரிவும் என்று எல்லாமும் மாறாமல் சுழன்றுகொண்டே இருக்கும் நம் உலகில் மாறி மாறி வருபவை தானே. இவ்வளவு ஆட்டங்களும் பாட்டங்களும் அசையாத ஒற்றை வானத்தில்தானே. “நான் கடவுளைக் கண்டேன்” என்று ஒருவன் பரபரப்பாகத் தன் குருவிடம் சொல்கிறான்.
“நல்லது. சரி, அவர் இப்போது எங்கே?” என்று குரு கேட்கிறார். சீடன் விழிக்கிறான். விழிப்பால் ஒருவன் கடவுளைக் காண்பது புரிகிறது. ஒருவன், கடவுளைக் கண்டபின் விழித்து நிற்கலாமா. கடவுள் என்பதை ஒரு தோற்றமாக நாம் கருதுகிற வரையில், அது தோன்றும், மறையும், மீண்டும் தோன்றும். இந்த உடம்பை ஒரு தோற்றமாக நாம் உணராதவரை நம்முடைய உழல்வும் உளைச்சலும் தொடரத்தான் செய்யும். இதைத்தான்,
‘முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே..’
என்று கச்சிதமாகச் சொல்லிச் சென்றார் கவியரசர் கண்ணதாசன்.
விளையாட்டின் விளைவு: ஆக, உடம்பு என்பது தோன்றி மறைகிற எண்ணற்ற வடிவங்கள், உருவங்களில் ஒன்று. கடவுள் என்பதோ தோன்றியதைப் போல் ஆனால் தோன்றாமல், தோன்றாததைப்போல் ஆனால் தோன்றியதைப் போலும் இருக்கும் பெரும் சுவாரசியம். அது தோன்றாத ஒன்று என்றாலும் எல்லாத் தோற்றங்களிலும் அதுதான் இருக்கிறது. அது தோற்றம் என்பது நமக்குத் தோன்றினாலும், அது ஒன்றுதான் மறையாத தோற்றம். எப்போதும் இருந்து வந்திருக்கின்ற ஒன்று, எல்லாமுமாக விளங்குகின்ற ஒன்று, எங்கே, எப்படி மறையக்கூடும்?
ஆயிரமாயிரம் அலைகளும், அந்த அலைகளில் பூத்தெழும் நுரைகளும், அந்த நுரைகளில் சிரிக்கும் குமிழிகளும், ஒரே கடலில் இருந்துதான் எழுகின்றன. அதே கடலில்தான் அடங்குகின்றன. மீண்டும் எழுகின்றன. இங்கே இடைவிடாமல் நடந்துகொண்டிருப்பது இந்த எழுவதும், சற்றே இருப்பதும், விழுவதும், அடங்குவது மான விளையாட்டுதான். நம் உடம்பும் அப்படித்தான். அது ஒரு விளையாட்டின் விளைவு. விளையாடுவதற்கான ஏற்பாடு.
சில உயிரினங்கள் இருபது நொடிகளே வாழ்கின்றனவாம். ஆனால், அதற்குள் அவை வளர்ந்து, காதலித்து, கலவி புரிந்து, பேட்டைத் தகராறு செய்து, நோயுமுற்று இறந்து போகின்றன. இப்படித்தான் இருக்கிறது நம் வாழ்க்கையும் என்பதை உணர்ந்தால் இந்தக் தகவலில் வியப்பென்ன இருக்க முடியும்? காலத்தின் கரை காண முடியாத பரப்பில் கணத்துக்கும் யுகத்துக்கும் ஒரே மரியாதைதானே!
உயிரென்னும் பெருங்கடலில் உடம்பென்னும் குமிழிகளின்
உல்லாசம் ஓயாத வேடிக்கை தயிர்த்துமிபோல் குமிழியெல்லாம் தம்மைத்தாம் தனியென்று
தாண்டவங்கள் ஆடுவதோர் வேடிக்கை கடைகின்ற கரங்களொரு கணநேரம் நின்றாலும் காட்சியெலாம் நிற்பதுதான் வாடிக்கை, இதில் உடைகின்ற தயிர்நிலையா?
உதிர்ந்ததுளித் துமிநிலையா?உள்ளமின்றிக் கடைகிறதே ஜோடிக்கை!
தோன்றி மறைகிற கணக்கற்ற தோற்றங்களில் ஒன்றுதான் நம் தேகமும். என்றாலும், இந்த உடம்பில் உள்ளம் என்னும் ஓர் அதிசயமான, தூலமாய் இல்லாத கருவியை நிறுவியிருக்கிறது, உடம்பைப் போலவே தோன்றி மறையும் இயற்கை. நம்மை நாம் உடம்பு என்று கருதிக்கொண்டால், இந்த உள்ளம் இருளான பள்ளம். எந்த இயற்கையை எது இயக்குகிறதோ அதுதான் நாம் என்று எண்ணிப் பார்த்தால், இந்த எண்ணக் களேபரமே ஞான வெள்ளமாக மாறிப் பாய்கிறது.
உடம்பில் இருக்கும்போதும் உயிரென்ற ஒன்று கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால், உடம்பு இயங்குவதால் உயிர் இருக்கிறது என்று புரிந்து கொள்கிறோம் அல்லவா? மரணம் என்னும் நிகழ்வில், உயிரா போய்விடுகிறது? உடம்புதான் அடங்கிவிடுகிறது. இருப்பது உயிர்தான். தோன்றி மறைவது உடம்புதான்.
கடவுள் எனும் அனுபவம்! -
பானைக்குள்ளே தவிக்கும் காத்தும்
வானத்துலே சிரிக்கும் காத்தும்
ஞானத்துலே கலக்கும்போது நிம்மதி! இந்த
ஞாபகந்தான் ஆண்டவனின் சந்நிதி!
நீங்கள் இரண்டு விரல்களால் ஏந்தியிருக்கும் ஒரு கோப்பை. அதில் சூடான தேநீர். அதிலிருந்து எழும் ஆவி, ஒரு தேவதை வடிவமெடுத்து மயக்குகிறது. வெம்மை, நாசியைச் சற்றே நனைக்கிறது. இளஞ்சூடு உதட்டைத் தொடாமல் தொட்டு, நாவைத் துளி சுட்டு, தொண்டை எங்கே இருக்கிறது என்று தொட்டுக்காட்டி, நெஞ்சில் இறங்கும்போது பரவுகிறதே ஒரு ஆசுவாசம்!
இப்படி, ஒவ்வொன்றையும் கணம் கணமாக அனுபவித்துக் கடப்பதே வாழ்தலாகும். இல்லையென்றால் இந்த இருப்பு என்பது வெற்று வாழ்க்கையாகும்.
கவனமே தவம். அந்த கவனத்தில் எதிர்பார்ப்பு, கலக்கம், கருத்து போன்ற எதுவும் நல்ல சங்கீதத்தின் நடுவில் நாற்காலியை இழுக்கும் நாராசம். இவ்விதம் வாழப் பழகிக்கொண்டால்தான், இந்த உடம்புக்குத் தமிழென்னும் வாழ்நெறி ‘மெய்' என்றவொரு பெயரை ஏன் வைத்தது என்பது புரியவரும். அந்தப் புரிதல் தொடர்ந்து இருக்கும். அவ்விதம் தொடர்ந்து இருந்து நாம் தொய்யாமல் நம்மைத் தூக்கி நிறுத்துவதுதான் அனுபவம். அந்த அனுபவத்தின் நில்லாத தொடர்நிகழ்வுதான் கடவுள். அவனை எங்கேயென்று காண்பது? அதை, எப்படிக் காணாமல்தான் இருப்பது?
(தரிசனம் நிகழும்)
- tavenkateswaran@gmail.com