

மதியால் வித்தகனாகி மனதால் உத்தமனாகிப் பதிவாகிச்
சிவஞான பரயோகத் தருள்வாயே. - திருப்புகழ்
அருணகிரிநாதர் தரிசித்துப் பாடிய 105ஆவது தலம் கருவூர் என்கிற கரூர். இங்கே அருணகிரிநாதர் ஆறு பாடல்கள் பாடியுள்ளார். நம் மனத்தின் நுட்பமான உணர்வுகளைக் கிளறி முருகனின் மகிமையில் ஆழ்ந்துபோகச்செய்யும் பாடல்கள் இவை. நிலையாமை என்பதை உணர்ந்து கந்தனின் பெருமையில் மகிழ்வதே ஞானம் அடையும் வழி என்னும் கருத்தை வலியுறுத்துபவை இப்பாடல்கள்.
சேரர்களின் தலைநகராக வஞ்சி என்கிற பெயருடன் விளங்கியது. இவ்வூர் இறைவனை காமதேனு வழிபட்டதன் பலனாக பிரம்மாவின் படைப்புத் தொழிலை காமதேனு ஏற்றுக்கொண்ட தலம் கருவூர்.
கருவூர்க் கந்தன்: ‘மதியால் வித்தகனாகி மனத்தால் உத்தமனாகிப் பதிவாகிச்
சிவஞான பரயோகத் தருள்வாயே!
நிதியே நித்திலமே என் நினைவே நற்பொருளாயோய் கதியே
சொற்பரவேளே கருவூரிற் பெருமாளே’ - என்கிறார். அற்புதமான கருத்தை உள்ளடக்கிய பாடல். ஞானம் எப்போது வரும்? நம் மதி சிறந்தால் மட்டுமே வரும். மதி சிறக்க நம் மனம் தூய்மையாக வேண்டும். அந்தத் தூய்மையும் இறைவன் மீதான பக்தியின் மூலம்தான் வரும்.
இதையே வள்ளலார், ‘மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும்’ என்கிறார்.
‘வெற்றிப் புகழ்தரு கருவூரினிலே மேவிய பெருமாளே
நித்தம் பிணி கோடு மேவிய காயமிது’ என்கிற பாடலில் பஞ்ச பூதச் சேர்க்கையினால் உண்டான உடல் இது. இதில்தான் எவ்வளவு ஆசை என்று சொல்பவர்,
‘உலகளாவும் மாகர் இடத்தைக் கொளாவுமே நாடிடும், ஓடிடும்
நெட்டுப் பணிகலை பூண் இட்டு நான் எனும்
மட ஆண்மை எத்தித் திரியும்’ என்று நான் எனும் அகங்காரத்தையும் கர்வத்தையும் சாடுகிறார். இவை அனைத்தும் மாயை என்று உணர்த்தி, உனது அடியாரோடு சேர்ப்பித்து, ஞான அருள் தந்து உன் திருவடி அடையும் பேரைத் தருவாயே என்று வேண்டுகிறார்.
‘பிழையே பொறுத்து உன் இருதாளில் உற்ற
பெருவாழ்வு பற்ற அருள்வாயே’ என்றும்,
‘பஞ்சவர் கொடிய வினை நூற்றுவர் வென்றிட சகுனி
கவறாற் பொருள் பங்குடை யவனி பத்தி தோற்றிட அயலே போய்’ என்கிற பாடலில் மகாபாரதக் கதையையும் குறிப்பிடுகிறார்.
அழகன் முருகன்: தன் ஒவ்வொரு திருப்புகழிலும் முருகனின் அழகை ரசிக்கும் அருணகிரிநாதர் இங்கே,
‘நளினப் பதக் கழலும் ஒளிர் செச்சை பொன்புயம் என்
நயனத்தில் உற்று நடமிடும் வேலா’
என்று வீரக் கழல் அணிந்த திருவடிகளையும், வெட்சி மாலை அணிந்த அழகிய திருப்புயங்களும் என் கண்களில் இடம்பெற்று விளங்க நடனம் செய்கின்ற வேலனே என்று ரசிக்கிறார். அழகுக்கு முருகன் என்னும் ரசிப்பு அவர் பாடல் வரிகளில் ஜொலிக்கிறது.
‘வயல் இயல் வஞ்சியில் மேல் பயில் சொரூபமும் நெஞ்சில்
இராப்பகல் மறவேனே’ என்று கரூரை வஞ்சி என்றும் அங்கே குடிகொண்டிருக்கும் அழகன் முருகனை என்றும் மறவேன் என்கிறார். அவனே சகலமுமாகி ஷண்முகனாய் அறிவும் தெளிவும் வசீகரமும் நிறைந்த ஆறுமுகனாக விளங்குகிறான் என்று, ‘சரவண சம்பவ தீர்க்க ஷண்முகமாகி’ என்று குறிப்பிடுகிறார்.
ஓசையும் இசையும்: பக்தி இலக்கியத்தில் சந்தம் என்னும் ஓசை, இசையை இணைத்துத் தேனாறு பாயச் செய்தவர் அருணகிரிநாதர். அவர் அழைத்தபோதெல்லாம் முருகன் வந்து அவருக்குக் காட்சி அளிக்கிறான். எனவேதான், ‘நித்தம் பிணி கூடிய உடலோடு வாழும் வாழ்க்கை வேண்டாம். உன் அருள் ஒன்றே போதும்’ என்கிறார். அவன் கூட இருந்தால் எந்தத் துன்பம் வந்தால் என்ன என்கிற துணிவு வந்துவிடும். வேலும் மயிலும் இருக்க வேறென்ன வேண்டும்?
‘வஞ்சியில் அமரர் சிறை மீட்டு அருள் பெருமாளே’ என்று அவரே கந்தன், தேவர்களைச் சிறை மீட்ட நிகழ்ச்சியைக் கூறுகிறார். நம்மை உய்விக்க முருகனே வந்திருக்கிறான் என்றே கூறுகிறார் அருணகிரிநாதர்.
‘அருவமும் உருவமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
பிரம்மமாய் நின்ற ஜோதிப் பிழம்பதோர் மேனியாகி’
- என்று முருகனை வர்ணிக்கிறார். அவன் தீப்போல் ஜொலிப்பவன். அருவமும் உருவமும் இல்லாத பிரபஞ்சமாய் இருப்பவன். வேண்டுவன அனைத்தும் தரும் வேலேந்திய கரத்தினனாய் விளங்குபவன் முருகன். அவனை நினைத்தாலே அனைத்தும் அருளும் அன்பன் கந்தபெருமான்.
(புகழ் ஓங்கும்)
- gaprabha1963@gmail.com