புராணங்களில் தந்தை கதாபாத்திரங்கள்

புராணங்களில் தந்தை கதாபாத்திரங்கள்
Updated on
3 min read

பிரணவத்தின் பொருளை தந்தைக்கே உபதேசித்ததால் தகப்பன்சாமி என்னும் புகழைப் பெற்றார் முருகன். ஆதியும் அந்தமும் இல்லாத சிவனுக்கு ஓம்காரத்தின் அர்த்தம் தெரியாமலா இருக்கும்? மகன் சொல்லி கற்றுக்கொண்டதன் மூலம், மகனை சான்றோனாக்கிப் பார்க்கத் துடிக்கும் தாயுமானவனாக நம் மனதில் உயர்கிறார் சிவன்.

அந்த வகையில், சிவனை ஒரு முன்னுதாரண தகப்பனாகச் சொல்லலாம். அதேவேளை, புராணத்தில் சில தகப்பன்கள் அவர்களின் சுகத்தையே பெரிதாக நினைத்துச் செயல்பட்டிருக்கின்றனர். தங்களின் பொறுப்பை உணராத அப்படிப்பட்ட சில புராண தகப்பன்களைப் பற்றிய பதிவு இது.

தசரதர்: ராமனின் தந்தை. கோசல நாட்டின் மன்னன். தன்னுடைய மூத்த மகனுக்கு பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்கிறார். அவரின் மூன்றாவது மனைவி கைகேயி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். தசரதன், கைகேயிக்கு ஏற்கெனவே ஒரு வரம் தருவதாக வாக்களித்திருந்தார். அந்த வரத்தை இப்போது கேட்டாள் கைகேயி. அவள் கேட்ட வரம்: என் மகன் பரதனுக்கு உடனே பட்டாபிஷேகம் நடக்க வேண்டும்.

அதேவேளை, ராமன் 14 ஆண்டுகள் வனவாசத்தில் இருக்க வேண்டும். அன்பு மனைவிக்கு முன் ராமன் இரண்டாம்பட்சமாக தசரதனுக்கு ஆனார். தந்தையின் சொல்லுக்கு மறுப்பு சொல்லாத ராமன், காட்டுக்குச் சென்றார். மனைவிக்குக் கொடுத்த வரத்தைக் காப்பாற்ற, மகனை காட்டிற்கு அனுப்பிய தசரதர் எந்த ரகம்?

யயாதி: அஸ்தினாபுரத்தின் மன்னன். சந்திரகுல அரசன். யயாதியின் மனைவி தேவயானி. அசுரகுல குரு சுக்ராச்சாரியாரின் மகள். யயாதி - தேவயானிக்கு யது, துர்வசு என இரண்டு குழந்தைகள். தேவயானியின் நெருங்கிய தோழி சர்மிஷ்டை. அசுர மன்னன் விருஷபர்வனின் மகள். இவளை யயாதி ரகசியத் திருமணம் செய்துகொண்டான்.

இவர்களுக்கு துரு, அனு, புரு என மூன்று ஆண் குழந்தைகள். இதனிடையே யயாதி - சர்மிஷ்டை உறவை சுக்ராச்சாரியாரின் கவனத்துக்குக் கொண்டுவருகிறார் தேவயானி. கடும் கோபம் அடைந்த சுக்ராச்சாரியார், யயாதியை "கிழட்டுத் தன்மை அடைவாய்" எனச் சபிக்கிறார்.

நடுங்கிப் போன யயாதி, "தன்னுடைய சாபம் விலகுவதற்கான பரிகாரத்தை சொல்லுங்கள்" என்று சுக்ராச்சாரியாரை பணிவோடு வணங்கினான். சுக்ராச்சாரியார், "உன்னுடைய மகன்களில் யார் உன் கிழட்டுத்தன்மையை வாங்கிக்கொண்டு, தன் இளமையை உனக்குத் தருகிறார்களோ அப்போது நீ பழையபடி மாறலாம்" என்கிறார்.

கிழட்டுத்தன்மையோடு வருந்திய யயாதி முதலில் தனக்கும் தேவயானிக்கும் பிறந்த இரண்டு பிள்ளைகளிடம் என்னுடைய முதுமையைப் பெற்றுக்கொண்டு உங்களின் இளமையை எனக்குத் தாருங்கள் என்கிறார். அவர்கள் தர மறுக்கின்றனர்.
இரண்டாவது மனைவியின் முதல் இரு மகன்களும் தர மறுக்கின்றனர். ஆனால் மூன்றாவது மகன் புரு, யயாதியின் முதுமையைப் பெற்றுக் கொண்டு தன்னுடைய இளமையை தந்தைக்குத் தருகிறார். பழையபடி இன்ப லீலைகளைத் தொடர்கிறான் யயாதி. எத்தனை சுயநலமான தந்தை பார்த்தீர்களா?

ஹிரண்யகசிபு: சத் யுகத்தில் காசியப முனிவருக்கும் திதிக்கும் பிறந்தவன் ஹிரண்யகசிபு. அவனுடைய சகோதரன் இரணியாட்சன். வராக அவதாரத்தில் இந்த இரணியாட்சன் விஷ்ணுவால் கொல்லப்பட்டான். இதனால் கோபம் அடைந்த ஹிரண்யன், விஷ்ணுவை அழிக்கத் தன் தவத்தைப் பெருக்கினான். பிரம்மனால், மனிதர்களாலும் மிருகங்களாலும் பறவைகளாலும் இரவிலோ, பகலிலோ, வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ, எந்தவித ஆயுதத்தாலும் அஸ்திரங்களாலும் தனக்கு மரணம் சம்பவிக்கக் கூடாது என்னும் வரத்தினைப் பெற்றான்.

தானே கடவுள். தன்னையே எல்லாரும் வணங்க வேண்டும் என்று மூவுலகுக்கும் ஆணையிட்டான். இதனால் விஷ்ணு, தன் பக்தன் பிரகலாதனை ஹிரண்யனுக்கு மகனாகப் பிறக்கவைத்து, பிரகலாதன் வாயால் நாராயண நாமத்தை ஜபிக்கவைத்தார். அதைச் சகித்துக்கொள்ளாத ஹிரண்யகசிபு மகனையே கொல்லத் துணிந்தான். பக்தன் பிரகலாதனைக் காக்க, நரசிம்மம் வடிவில் ஹிரண்யகசிபுவின் சம்ஹாரம் நடக்கிறது.

சாந்தனு: சாந்தனு மகாராஜாவுக்கும் கங்கைக்கும் பிறந்தவர் பீஷ்மர். சில காலம் பிரம்மச்சர்ய விரதத்தில் இருக்கிறார். அதன்பின் யமுனைக் கரையில் பயணிக்கும்போது, அங்கு ஒரு மீனவப் பெண்ணைப் பார்க்கிறார். அந்தப் பெண்ணின் பெயர் சத்யவதி. மீனவர் தலைவரின் மகள். மீனவர் தலைவரிடம் சத்யவதியை தனக்கு மணமுடித்துக் கொடுக்கக் கேட்கிறார் சாந்தனு.

மீனவர் தலைவர் ஒரு நிபந்தனை விதிக்கிறார். "என் மகளுக்கும் உங்களுக்கும் பிறக்கும் மகன்தான் உங்களுக்குப் பிறகு நாட்டை ஆளவேண்டும்" என்பதே அந்த நிபந்தனை. அதற்கு சாந்தனு சம்மதிக்கிறார். சத்யவதிக்கும் - சாந்தனுவுக்கும் திருமணம் நடக்கிறது.

மகன் பீஷ்மரிடமும் தான் கொடுத்திருக்கும் வாக்குறுதியைப் பற்றிக் கூறுகிறார் சாந்தனு. அதைக் கேட்ட பீஷ்மர், "கவலையேபடாதீர்கள் அப்பா உங்கள் வாக்குறுதியைக் காப்பாற்றும் வகையில் நான் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை" என்று தந்தைக்கு உறுதி கூறினார். எப்படிப்பட்ட தந்தைக்கு எப்படிப்பட்ட மகன்!

- radha_krishnan36@yahoo.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in