சிவ ஆலயங்களில் ஆடப்படும் பிரதோஷத் தாண்டவம்!

சிவ ஆலயங்களில் ஆடப்படும் பிரதோஷத் தாண்டவம்!
Updated on
1 min read

திருவரங்கம், திருவில்லிப்புத்தூர் போன்ற சில ஆலயங்களில் மட்டுமே பாரம்பரியமாக அரையர் சேவை நடத்தப்படுவதுண்டு. திவ்வியப்பிரபந்தப் பாடல்களிலிருந்து சில பாடல்களைத் தேர்ந்தெடுத்து பக்தி ரசம் ததும்ப நடனமாடுவதே அரையர் சேவை.
எல்லா சிவ ஆலயங்களிலும் பிரதோஷ வழிபாடு மிகவும் விமரிசையாக நடக்கும். அந்த பிரதோஷ வழிபாட்டை ஒட்டி பிரதோஷ நடனத்தை பல ஆண்டுகளாக சிவ ஆலயங்களில் நிகழ்த்திவருகிறார் உடுமலை செந்தில்.

பிரதோஷ காலத்தில் நந்தியம் பெருமானுக்கும் சிவபெருமானுக்கும் அபிஷேகம் ஆராதனை நடந்த பிறகு, பிரதோஷ நாயகர் சிவபெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருக்கோயில் உள்பிராகாரத்தில் வலம் வருவார். சில கோயில்களில் மூன்று சுற்றுகள் இந்தத் திருவலம் நடக்கும். சில கோயில்களில் ஐந்து சுற்றுகள், இன்னும் சில கோயில்களில் ஒரேயொரு சுற்றுடன் திருவலம் முடிந்துவிடும். அப்படிச் சுற்றிவரும்போது அஷ்ட திக்கு பாலகர்களுக்கு சிவபெருமான் காட்சி தருவார். அவர்கள் சார்பாக வேதம், தேவாரம், நாகசுர இசை, நடனம் ஆகியவை நடைபெறும்.

"திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அவிநாசியப்பர் கோயிலில் பிரதோஷத்தின்போது சுவாமி ஆலயத்திற்குள் வலம் வரும்போது, நாகசுரக் கலைஞர்கள் வாசித்த மல்லாரிக்கு ஏற்றபடி தன்னியல்பில் சில அபிநயங்களை ஆடினேன். கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் பலரும் ஆடல் பக்திமயமாக இருந்ததை குறிப்பிட்டுப் பாராட்டினர்.

அதன் பிறகு, என்னுடைய ஆர்வத்தைப் பார்த்த கோவை, ஆனைகட்டி ஆசிரமம் தயானந்த சரஸ்வதி சுவாமிகள், முறையாக நடனம் கற்றுக்கொள்வதற்கு எனக்கு அனுக்கிரகம் செய்தார். அதன்பின், டாக்டர் கணபதி ஸ்தபதி திருக்கோயில்களில் உள்ள சிலைகளில் இருக்கும் சிவதாண்டவங்கள், மற்றும் இதர இறைவிகளின் சிற்பங்களில் வெளிப்படும் நடனம் சார்ந்த நுட்பங்களை விரிவாக அறிமுகப்படுத்தினார்.

அதன் பிறகுதான், பிரதோஷத் தாண்டவத்துக்கு மிகவும் பொருந்தும் வகையில் இருந்த `கடம்' கார்த்திக்கின் தாள இசையை நான் பயன்படுத்திக் கொள்ளட்டுமா என்று அவரிடம் கேட்டேன். அவரும் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளச் சொன்னார். அந்த இசைக்குத்தான் நான் பிரதோஷ நடனம் ஆடிவருகிறேன்.

பிரதோஷ காலத்தில் வில்வாஷ்டகம், வில்வ அர்ச்சனைகள் அபிநயமாக ஆடப்படும்" என்றார் செந்தில். திருவண்ணாமலை, சிதம்பரம் உள்பட தமிழகத்தின் பிரபலமான கோயில்கள் முதல் குக்கிராமத்தில் இருக்கும் பழைமையான கோயில்கள் வரை பிரதோஷ நடனத்தை ஆடியிருக்கிறார் செந்தில்.

அத்துடன், கர்நாடகத்தின் மஞ்சுநாத ஈஸ்வரன் கோயில், ஆந்திரத்தில் சுருட்டப்பள்ளி சிவன் கோயில், கேரளத்தின் ஸ்தலசயனத்தில் இருக்கும் சிவன் கோயில் ஆகியவற்றில் பிரதோஷத் தாண்டவம் நடனத்தை ஆடியிருக்கும் செந்தில் அண்மையில் பெங்களூரு  நவசக்தி விநாயகர் திருக்கோயிலில் 550ஆவது பிரதோஷத் தாண்டவம் நடன நிகழ்ச்சியை நடத்தினார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in