

அப்பா - அம்மா எதைச் சொன்னாலும் அதற்கு மறுப்புத் தெரிவித்துப் பேசுவது இன்றைய தலைமுறைப் பிள்ளைகளின் வழக்கமாக மாறியிருக்கிறது. பெற்றோர் நவீன உலகத்துக்கு ஏற்பத் தங்களை நடத்துவதில்லை என்று பிள்ளைகள் நினைக்கிறார்கள். பெற்றோர் கூறும் அறிவுரையானது, அவர்களது பட்டறிவின் பிரதிபலிப்பாக இருப்பதைப் பிள்ளைகள் புரிந்துகொண்டால், எடுத்த எடுப்பிலேயே மறுக்கமாட்டார்கள்.
பெற்றோர், பிள்ளைகளைப் பொத்திப் பொத்தி வைக்காமல், வீட்டு வேலைகளில் பங்கெடுக்க வைப்பது, கடைகளுக்குச் செல்வது, வீட்டிலுள்ள முதியோருக்கு உதவுவது என அவர்களுக்குச் சிறிய அளவில் பொறுப்புகளைக் கொடுக்க வேண்டும். அப்போது, அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அவர்களுக்குப் பட்டறிவு கிடைக்கத் தொடங்கும்.
உங்கள் சொல்லுக்குக் கீழ்ப்படியாத பிள்ளையெனில் அவர்களிடம் கடிந்துகொள்வதில், கண்டிப்பதில் தவறில்லை என்கிறது விவிலியம். நீதிமொழிகள் புத்தகம் அதிகாரம் 23இன் 13 மற்றும் 14ஆவது வசனங்கள் “கீழ்ப்படியாத பிள்ளையைத் தண்டிக்காமல் இருக்காதே.. நீ பிரம்பால் அடித்தால் அவன் ஒன்றும் செத்துவிட மாட்டான். நீ அவனைக் கண்டித்தால்தான் கல்லறைக்குப் போகாதபடி அவனைக் காப்பாற்ற முடியும்” என்று சொல்கிறது.
இந்த வசனம், இக்காலத்துக்கு ஏற்றதில்லை என்றாலும் இதன் ஆதாரமான கருத்து, பிள்ளைகளைக் கண்டிக்கத் தயங்கும் பெற்றோராக நீங்கள் இருக்கக் கூடாது என்பதே. நீங்கள் கண்டிப்பதை உங்கள் பிள்ளைகள் ஏற்று நடக்க வேண்டும் என்றால், நீங்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
உங்கள் தொழிலைப் பற்றி அவர்கள் அறிந்திருக்கும்படி செய்யுங்கள். அதில் உங்களது நேர்மை குறித்து அவர்கள் கர்வம் கொள்ளும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அப்போது அவர்கள், யேசு சிறு வயதில் தனது பெற்றோரைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு கீழ்ப்படிந்தது போலவே உங்களுக்கும் கீழ்ப்படிவார்கள்.
விவிலியத்தின் பழைய ஏற்பாட்டுப் புத்தகத்தில், யாத்திராகமம் 20:12 வசனம்; “உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள். அப்போதுதான், உங்கள் கடவுளாகிய வானுலகத் தந்தை கொடுக்கிற தேசத்தில் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள்.” என்று சொல்கிறது. பெற்றோருக்கு கீழ்ப்படிதல் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதுடன், பிள்ளைகள் மனதளவில் வளர்ச்சி அடையவும் வழிவகுக்கிறது. இதற்கு யேசுவின் இளமைக் கால வாழ்க்கையையே எடுத்துக்காட்டாகப் பார்க்கலாம்.
யேசு 12 வயது சிறுவனாக இருந்தபோது அவர் தனது தந்தையான யோசேப்பிடம் தச்சு வேலையை ஆர்வமுடன் கற்றுக்கொண்டார். பிறகு யேசு பதின்ம வயதைக் கடந்தபோது யோசேப்பு மறைந்தார். அந்த நேரத்தில், அப்பாவிடம் கற்றுக்கொண்ட தச்சுத் தொழில் மூலம் யேசு தனது தாய்க்கு உதவினார். தாயின் வார்த்தைகளை ஒருபோதும் தட்டாதவராக யேசு இருந்தார். அதனால்தான் ’மரியாளின் மகன்’ என்று அழைக்கப்பட்டார். யேசுவுக்கு அப்போது 28 வயது.
மரியாளையும் இயேசுவையும் கலிலேயாவில் இருந்த கானா என்கிற ஊரில் நடந்த ஒரு திருமணத்துக்கு அழைத்திருந்தனர். அப்போது திருமண விருந்தில் திராட்சை ரசம் தீர்ந்துபோய்விட்டதால், திருமண வீட்டார் சங்கடப்பட்டனர். அதை அறிந்த மரியாள், யேசுவை அழைத்து “மகனே.. பரிமாறுவதற்கு அவர்களிடம் திராட்சை ரசம் இல்லை” என்று சொன்னார்.
அம்மா என்ன எதிர்பார்க்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட யேசு, “அம்மா.. அதற்கு நாம் என்ன செய்வது? என்னுடைய நேரம் இன்னும் வரவில்லையே” என்றார். ஆனால், அடுத்த கணமே, தன் தாய் கேட்டுக்கொண்டபடி ஆறு ஜாடிகள் நிறைய தண்ணீரை நிரப்பச் சொல்லி அவற்றை திராட்சை ரசமாக மாற்றி தனது முதல் அற்புதத்தை நிகழ்த்தினார்.