கண்முன் தெரிவதே கடவுள் 08: கடவுள் என்பது தப்பிக்கும் வழி அல்ல!

கண்முன் தெரிவதே கடவுள் 08: கடவுள் என்பது தப்பிக்கும் வழி அல்ல!
Updated on
2 min read

உங்களால் ஆத்ம ஞானத்தை அப்படியே எனக்குத் தர முடியுமா?

உன்னால் வாங்கிக்கொள்ள முடியுமா? ஏன், ராமகிருஷ்ணர், விவேகானந்தருக்கு வழங்கவில்லையா?

நீ விவேகானந்தரா?

- இப்படி ஓர் உரையாடல் ரமண முனிவருக்கும் இன்னொருவருக்கும் இடையில் நடந்ததாகச் சொல்வதுண்டு. இன்னும் வேறு இருவரிடையே நடந்ததாகவும் சொல்வார்கள். அவரால் தரமுடியும், என்னால் வாங்கிக்கொள்ள முடியாது என்றால் அது என்ன? அது ஏன் அப்படி? அதைக் கொடுப்பது ஒரு திறமை என்றால், அதை நான் வாங்கிக் கொள்வதற்கு என்ன தகுதி தேவைப்படுகிறது? ஆன்மா என்பது நானே என்றால், அதெப்படி நான் என்னை அறியாதிருக்கிறேன்? இந்த ரீதியில் பலவிதமான கேள்விகள் முளைக்கின்றன.

கடவுள், ஆன்மா, சத்தியம் என்று என்ன பெயர் வைத்து அழைத்தாலும், இரண்டு விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, அதைப் பற்றி நம்முடைய எண்ணம் அல்லது அறிவு என்ன? இன்னொன்று, அதை நாம் எந்த அளவு விரும்புகிறோம்? மேலும் ஒன்று, நாம் ஆசைப்படுவதை அடைய நாம் எந்த அளவு முயற்சி செய்கிறோம்? ஆக, ஒன்றை நாம் அடையவேண்டுமென்றால், அதைப் பற்றிய அறிவு தெளிவாக இருக்கவேண்டும். அதன்மீது தீவிரமான ஆசை இருக்க வேண்டும். அதை அடைய இடைவிடாமல் முயற்சி செய்ய வேண்டும்.

இரு சட்டைப்பைகள் கடவுள் யாராகவோ அல்லது எதுவாகவோ இருக்கிறது என்னும் கருத்தும், அது இப்படித்தான் இருக்கவேண்டும் என்னும் எண்ணமும்தான் நம்முடைய அறிவு தெளிவில்லாமல் இருக்கக் காரணம். வாழ்க்கைப் பயணத்தில் நாம் வருந்தி நடக்கையில், ஒவ்வொரு முறையும் நம்முடைய இரண்டு சட்டைப் பைகளைத் தொட்டுப் பார்த்துக் கொள்கிறோம். ஒரு பையில் எப்போதும் ஒரு பட்டியல் இருக்கிறது.

இன்னொரு பையில் எப்போதும் காசு குறைவாகவே இருக்கிறது. ஏனென்றால், பட்டியல் நீண்டுகொண்டேதான் போகிறது; எதை, எத்தனை முறை வாங்கினாலும் நமக்கு நிறைவு வரவில்லை. நீண்டுகொண்டே போகும் அந்தப் பட்டியலில், வாங்கவேண்டிய பொருள்களில் கடவுளும் அவ்வப்போது தென்படுகிறார்! கவிஞர் வாலி ஒரு பாடலில் அழகாகச் சொல்வார்:

ஆண்டவன் ஒருநாள் கடைவிரித்தான், அதில்
ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
அவரவர் நிலைமைக்கு விலையைச் சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்
எதையும் வாங்கிட மனிதர் வந்தார், விலை
என்னவென் றாலும் அவர் தந்தார்
இதயம் என்பதை விலையாய்த் தந்து
அன்பை வாங்கிட எவருமில்லை!

நிச்சயமாக, கடவுள் எந்தக் கடைவீதியிலும் விலைபொருளாக இல்லை. நம்முடைய பலசரக்குப் பட்டியலில் அவர் இடம்பெறும் வரையில், அவர் கிடைக்கத்தான் மாட்டார்! இதைப் புரிந்துகொண்டால், ஒரு பையிலிருக்கும் பட்டியலையும், மறுபையில் இருக்கும் காசையும் எறிந்துவிட்டு, அதோ அந்த மரத்தின் நிழலில் நாம் அமரமாட்டோமா? நம்மில் அமிழ மாட்டோமா என்ன?

வேண்டுவது எதை? - ரவீந்திரநாத் தாகூர் ஒரு பாடலில் சொல்வார், ‘நீ வேண்டும், எனக்கு நீதான் வேண்டும்,’ என்று. அம்மா, குழந்தையை அழைத்துக்கொண்டு பொருட்காட்சி சாலைக்குச் செல்கிறாள். அப்பளத்திலிருந்து, ராட்டினம், ஊதல், பஞ்சுமிட்டாயென்று அத்தனை பொருளுக்கும் குழந்தை ஆசைப்படுகிறது. அம்மாவும் வாங்கித் தருகிறாள்.

கூட்டத்தில் அந்தக் குழந்தை தொலைந்து போகிறது. காவலர் அதைச் சமாதானம் செய்யப் பெரும்பாடு படுகிறார். அப்பளம், பஞ்சுமிட்டாய், ஊதல், ராட்டினம் என்று எதைக் காட்டினாலும் அதை ஏற்காமல் அரற்றி அழுதுகொண்டே ‘அம்மா வேண்டும் அம்மாதான் வேண்டும்' என்று கூவுகிறது அந்தக் குழந்தை.

கும்பலில் தொலைந்த குழந்தையைப் போல்
குமைந்து குமைந்து தேடுகிறேன்,’ என்று இதை அழகாய்ச் சொல்வார்
கவிமாமணி பா.வீரராகவன். அப்படி,
நீ வேண்டும்! எனக்கு
நீதான் வேண்டும்! வேறு
நிலை விரும்பாத நினைவறியாத
மனம் முழுதாக மலர்ந்திருக்கும், அந்த
நீ வேண்டும்! எனக்கு
நீதான் வேண்டும்!

- என்று நாம் ஆசைப்பட்டால், அதன் பின்னர் பாதையாவது, பயணமாவது, பயிற்சிகளாவது! அந்தத் தீவிரத்தில் நாம் திளைக்கும் வரை, நமக்கு திசைகள், அலைச்சல், திணறல்கள் எல்லாம் உண்டு. அன்றாட வாழ்வில் நமக்குச் சலிப்பும், கடுப்பும் ஏற்படும் போதெல்லாம் ஆண்டவனை நாடுவது ஆத்ம தாகமாகாது. கடவுள் என்பது கேளிக்கையோ, வேடிக்கையோ அல்ல. அது ஒரு தப்பிக்கும் வழி அல்லவே அல்ல!

நலம் நாடும் ஒன்று: தண்ணீரைத் தவிர வேறெதுவாலும் தாகத்தைத் தணிக்க முடியுமா? அதே போல, உண்மையை அறியும்வரை, வேறெந்த நோக்கமோ, ஆசையோ, விழைவோ இல்லாது தகிப்பதே ஆத்ம தாகமாகும். தேகமும் மனமும் உயிரும் திரியாய்த் திரண்டு திரிந்துதாக மாக மாறும் போது

தண்ணீர் தானே கிடைக்காதோ!
தாகம் தன்னால் தணியாதோ!

கடைவிரித்த எல்லா ஆசைகளும் குடைகின்ற கேள்விகளாகி, கற்றை விரித்த எல்லாக் கேள்விகளும் ஒற்றைக் கேள்வியாய் உருமாறி, அந்த ஒரே கேள்வி உயிராகி, அந்தக் கேள்வி மனத்தில் ஒடுங்கி, மனம் நம்மில் ஒடுங்குவதே ஆன்ம நிலையை அறிதலாகும். அதுதான் ஆண்டவனை அறிவதாகும்.

அப்போதுதான் கண்முன் தெரிவார் கடவுள். அன்றைக்குத்தான் கண்முன் தெரிவதெல்லாம் கடவுளாகவே தெரியும். காட்சிப் பிழைகள் இல்லாமல், காணும் சுமையும் இல்லாமல், காண்பதற்குக் குறிப்பிட்ட பொருள் ஒன்றுமில்லாமல், படைப்பில் உயிரின் இயக்கத்துக்கு சாட்சியாய் ஒன்று இருப்பது தெரியவரும்.

ஆசையின் தீவிரத்தைப் பொறுத்துத்தான் ஆண்டவனின் தரிசனமும் அமைகிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆசை என்பதை ஆண்டவன் படைத்திருப்பது அதை அவன்மேல் வைப்பதற்காகவே என்பதை உணர்வோம். என்றும் மாறாத, என்றும் நம்மோடு இருக்கின்ற, நம்முடைய நலமொன்றே நாடுகின்ற ஒன்றே ஒன்று கடவுள்தான்.

அவனுக்கே ஆசைப்படுவோம்!

(தரிசனம் நிகழும்)

- tavenkateswaran@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in