தித்திக்கும் திருப்புகழ் நாயகன் 23: திருவிடைக்கழி | சுகம் தரும் சுப்ரமணியர்
“சிலை மொழுக்கென முறிபட மிதிலையிர் சனக மனருள்
திருவினைப் புணரரி திருமுருகோனே- திரள் வருக்கைகள்
கழுகுகள் சொரிமதுக்கத லிகல்வளர் திருவிடைக்கழி மருவிய பெருமாளே.” - திருப்புகழ்
உலக வாழ்வு மாயை என்றாலும் அந்த மாயையில் சிக்கத்தான் மனம் விரும்புகிறது. எல்லையற்ற ஆசைகளை மனதில் நிறுத்தி, அது நிறைவேற வேண்டும் என்றுதான் மனிதன் விரும்புகிறான். கோயில் கோயிலாக அலைகிறான். அவனின் பிறவிப் பிணி தீர்த்து, ஆசைகளை நிறைவேற்றி தன்னிடம் ஈர்க்கும் ஆற்றலாக பல தெய்வங்கள் இருந்தாலும் கூப்பிட்டதும் ஓடி வருபவன் குமரன் என்கிறார் அருணகிரிநாதர்.
முருகனின் திருவருளில் ஆழ்ந்த அவர் கனிந்து அமுது ஊறிய பல பாடல்களை திருவிடைக்கழி முருகன் மேல் பாடியுள்ளார். அவன் அருளால் அவர் பெற்ற நலன்களை பெருமையோடு கூறுவதே திருப்புகழின் சிறப்பு.
ராமாயணம், திருமந்திரம், மகாபாரதம் போன்ற பல புராண, இதிகாசங்களைத் தன் பாடலில் தொடர்புபடுத்திக் கூறும் அருண கிரியார் தரிசித்த இருபத்தி ஒன்பதாவது தலம் திருவிடைக்கழி. பல தலங்களில் அருணகிரியார் முருகனால் விசேஷ அனுக்கிரகம் பெற்றார். அதில் திருவிடைக்கழியும் ஒன்று. இங்கு அவர் எட்டு திருப்புகழ் பாடல்களைப் பாடியுள்ளார்.
தலச் சிறப்பு: முருகனை மணம் புரிய விரும்பி தெய்வானை தவம் புரிந்த தலம் இது. இங்கு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. கந்தன் திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த பிறகு, அவனுடைய இரண்டாவது மகன் இரண்யாசுரன் சுறாமீனாக மாறி பூம்புகார் பகுதியில் உள்ள கீழ்ச்சமுத்திரத்தில் பதுங்கி அனைத்து உயிர்களையும் துன்புறுத்தி வந்தான்.
அவனை முருகன் வைகாசி மாதம், சதய நட்சத்திரத்தன்று சம்ஹாரம் செய்தார். சிவபக்தனான இரண்யாசுரனை வதம் செய்த பாவம் நீங்க முருகன் இங்கு வந்து குரா மரத்தின் அடியில், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, பூஜை செய்து வழிபட்டார். மலைகளில் மட்டும் வளரும் குரா மரம் இத்தலத்தில் சம தளமான மண்ணில் வளர்ந்து தல விருட்சமாக உள்ளது. குரா மரத்தின் அடியில் முருகன் யோக நிலையில் அமர்ந்திருப்பது மிகவும் பிரசித்தம்.
பாடிப் பணிந்தேத்தும் திருப்புகழ்: எப்போதும், மகளிரின் பின் அலையாமல் குமரனையே நினைந்துருகும் வரமே முருகனிடம் அருணகிரியார் கேட்பது. இங்கு அவர்
“கொடுமைக் கடுமைக் குவளைக் கடையிற் குலை பட்டலையக்
கடவேனோ”
- என்று உலக அலைச்சலை வேண்டாம் என்றும் பிறவிக்கடலைக் கடக்க உன் திருவடியைத் தரவேண்டும் என்று,
“இப்பவக் கடலைக் கடக்க இனிக் குறித்திரு பொற்
கழற் புணையைத் தருவாயே” என்று கேட்கிறார்.
ஒவ்வொரு பாடலிலும், அவர் தனக்கு முக்திநிலை தந்தருள வேண்டும் என்றுதான் கேட்கிறார். இங்கும் ஒரு பாடலில்
"புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப் பொலியும் அற்புதப் பெருவாழ்வும் - - - புலன கற்றிடப் பலவி தத்தினைப் புகழ்
பலத்தினைத் தரவேணும்”
- என்று கேட்கிறார். பல பாடல்களில் அவர் இதையே விண்ணப்பமாகச் செய்கிறார். மேலும் திருவிடைக்கழி முக்தி தரும் தலம். எனவே ஞானம் சிறிதும் இல்லாத என்னை உன் அடியார் கூட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று மற்றொரு பாடலில் கேட்கிறார்.
புராணச் சிறப்பைக் கூறும் திருப்புகழ்: பல அற்புதமான புராண விஷயங்களை ஒரு திருப்புகழில் கூறுகிறார் அருணகிரியார்.
“சமணர்கள் குலம் அணிகழுப்பெற நடவிய மயில்வீரா”
என்று சமணர்களைக் கழுவிலேற்றியதை,
“சிலை முளுக்கென முறிபட மிதிலையிற் சனக மனருள் திருவினைப் புணரரி திரு மருகோனே”
- என்று வில் ஒடித்து சீதையை ராமர் மணந்த கதையைக் கூறுகிறார்.
சம்பந்தர் சமணர்களைக் கழுவிலேற்றி யதை முருகன் செயலாகவே கூறுகிறார். அவரின் பல திருப்புகழ் பாடல்களில் திருஞானசம்பந்தரை முருகனின் அவதாரமாகவே கருதுகிறார். மேலும் சிவன், ஹரி, பிரம்மாவுக்கு உபதேசம் செய்ததை,
"அரனரிப் பிரமர்கள் முதல் வழிபடப் பிரியமும் வர
அவரவர்க்கொரு பொருள்புகல் பெரியோனே“
என்று குறிப்பவர் வேடிச்சி காவலன் வகுப்பிலும் இதையே,
"அரி பிரமருக்கு முதல் அறிய பரமற்குயரும்
அருமறை முடிப்பை உபதேசித்த தேசிகனே” என்று குறிப்பிடுகிறார்.
திருப்புகழ் தமிழ்ப் பஞ்சாமிர்தம். அதை அருந்த அருந்தத் திகட்டாது. முருகனின் அருளை முழுவதுமாகப் பெற்றுத் தருவது திருப்புகழ். திருவிடைக்கழி திருப்புகழ் தெவிட்டாத பஞ்சாமிர்தமாக இருக்கிறது.
புகழ் ஓங்கும்
- gaprabha1963@gmail.com
