காளியின் அருள் பெற்ற கால்கா

காளியின் அருள் பெற்ற கால்கா
Updated on
3 min read

பிரிட்டிஷ் அரசு தனது கோடைக்காலத் தலைநகரமாகக் கொண்டிருந்த சிம்லா ஒரு மலை வாசஸ்தலம். அந்த மலையின் மீது ஏறுவதற்கு முன் தங்கிச் செல்வதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் கால்கா. இந்தப் பகுதியை பாட்டியாலா சமஸ்தானத்திடமிருந்து விலை கொடுத்து வாங்கிய பிரிட்டிஷ் அரசு, அதை அம்பாலா மாவட்டத்துடன் இணைத்தது. இன்று ஹரியானா மாநிலத்தின் ஒரு பகுதி கால்கா. ‘காளி கா’ (காளியினுடைய) என்பதுதான் ‘கால்கா’ ஆனது என்கிறார்கள்.

இமயமலையின் அடிவாரத்தில் இருக்கிறது கால்கா. சிம்லாவில் இருந்து கால்காவுக்குச் செல்ல வேண்டுமானால், நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியது ஒரு குறுகிய பாதை கொண்ட ரயிலை. பேச்சுவழக்கில் ‘மீட்டர்கேஜ்’ என்று கூறினாலும், அதைவிடக் குறைவான அகலம் கொண்டது. 1903இல் இந்த ரயில் பாதையை பிரிட்டிஷ் அரசு தொடங்கி வைத்தது.

சந்தையின் நடுவில் சந்நிதி: கால்கா இயற்கை சூழ்ந்த பகுதி என்றாலும் அங்குள்ள பிரபல காளி மாதா ஆலயம் சந்தையின் நடுவே அமைந்துள்ளது. எனவே சந்தடிக்குக் குறைவில்லை. மிகத் தொன்மையான ஆலயம். கண்ணன் வாழ்ந்த துவாபர யுகத்தில் இருந்தே இருக்கிறதாம் இந்த ஆலயம். சொல்லப்போனால், அதற்கும் முந்தைய சத்ய யுகத்திலேயே கால்கா காளியின் அருள் இங்கு பரவியிருந்தது என்பவர்கள் உண்டு.

ஆலயம் உள்ள தெருமுனையில் உள்ளது ஒரு வளைவு. அதன் மேற்பகுதியில் நடுநாயகமாக விநாயகரும் அவருக்கு இட வலமாக பார்வதி தேவியும் லட்சுமி தேவியும் அருள்புரிகிறார்கள்.

ஆலயத்தின் வெளிப்புறம் ‘ஷோ-கேஸ்’ போல ஒரு மிகப் பெரிய கண்ணாடிக் கூண்டு காணப்படுகிறது. அதற்குள் பயங்கர ரூபத்தில் காட்சி அளிக்கிறார் காளி. அவர் கைகளில் அரிவாள், சூலம் இவற்றோடு அரக்கனின் வெட்டப்பட்ட தலை ஒன்றும் காணப்படுகிறது. துருத்திக் கொண்டிருக்கும் நாக்குடன் காளியின் உருவம் ரெளத்ரத்தை வெளிப்படுத்துகிறது.

மாகாளி அவதாரம்: ஆலயத்தின் வெளிப்புறத்தில் ஒரு பெரிய கல்வெட்டு காணப்படுகிறது. அதில் ‘தொன்மையான காளி மாதாஆலயம்’ என்கிற தலைப்பில் காளிமாதாவின் சிறப்பு செதுக்கப் பட்டிருக்கிறது. முந்தைய யுகத்தில் மகிஷாசுரன், சும்பன், நிசும்பன், சண்டன், முண்டன், ரக்தபீஜன் போன்ற அரக்கர்கள் பெரும் தீமைகளை விளைவித்தார்கள். நல்லவர்களை நாசம் செய்தார்கள். இதைக் கண்ட மக்கள் பயந்து போய் பார்வதி தேவியிடம் சரணடைந்தார்கள். ஜெகதாம்பாவின் புகழ் பாடினார்கள்.

இதற்குச் செவி சாய்த்த அன்னை அந்தக் கொடிய அரக்கர்களை எதிர்கொள்வதற்காக மிக பயங்கரமான ஓர் உருவத்தை எடுத்துக் கொண்டாள். அதுதான் மகாகாளி. ஆயிரம் கைகளும் ஆயிரம் கால்களும் கொண்டவராக விளங்கினார் மகா காளி. ஆதி சக்தியின் இந்த வடிவத்தைப் பார்த்து அனைத்துத் தேவர்களும் அச்சத்துடன் வணங்கினர். அவருக்குப் பல்வேறு தெய்வங்கள் தங்களின் தெய்வாஸ்திரங்களை அளித்தனர்.

பிரம்மன் கமண்டலத்தை அளித்தார். விஷ்ணு சக்கரத்தை அளித்தார். இந்திரன் வஜ்ராயுதத்தை அளித்தார். சிவன் திரிசூலத்தை அளித்தார். எமன் பாசக்கயிற்றை அளித்தார். எந்தத் தலத்திலிருந்து காளிதேவி அந்த அரக்கர்களைக் கொல்வதாக சபதம் எடுத்துக் கொண்டாரோ, அந்த இடம்தான் ‘கால்கா’ என்று அழைக்கப்படுகிறது.

சந்நிதியின் மேற்புரத்தில் ‘ஜெய் மகா காளி’ என்கிற வார்த்தைகள் காணப்படுகின்றன. கருவறையிலுள்ள காளியின் வடிவம் முழுமையானதாகக் காட்சி தரவில்லை. அவரது திருமுகம்மட்டுமே நிலத்துக்கு மேல் காணப் படுகிறது. நாங்கள் சென்றது வெள்ளிக் கிழமை என்பதாலோ என்னவோ, பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்தது.

வெள்ளி நகைகள் மற்றும் வெள்ளிக் கிரீடத்தோடு அன்னை காளியின் முகம் காட்சி அளிக்கிறது. சுற்றிலும் வட்ட வடிவங்களில் பூ அலங்காரம். கருவறை முழுவதும் சிவப்பு வண்ணம் அதிக அளவில் காணப்பட்டது. தீயவர்களை வதம் செய்யும் ரத்த தாகம் கொண்டவர் அல்லவா அவர்?

சிலைக்குப் பால்சொரிந்த பசு: துவாபர யுகத்தில் பகடை ஆட்டத்தில் ராஜ்ஜியத்தை இழந்த பாண்டவர்கள் 12 வருடங்கள் வனவாசமும் ஒரு வருடம் அஞ்ஞாதவாசமும் இருக்க நேரிட்டது. விராட மன்னனின் அரண்மனையில் அவர்கள் மாறுவேடத்தில் வெவ்வேறு பணிகளைச் செய்துவந்தனர். அரண்மனையில் பல பசுக்கள் இருந்தனஎன்றாலும் ‘ஷ்யாமா’ என்கிறபெயர் கொண்ட ஒரு பசுவின் மீது விராட மன்னனுக்கு மிகவும் விருப்பம். செளந்தர்யமாகக் காட்சி தந்த அந்தப் பசுவின் பாலைத்தான் தன் அரண்மனை ஆலய தெய்வங்களுக்கு மன்னன் அபிஷேகம் செய்து வந்தான்.

சில நாள்களாக அந்தப் பசுவிட மிருந்து போதிய பால் கறக்க முடியவில்லை. காரணத்தைக் கண்டறிய தன் அரண்மனையில் (மாறுவேடத்தில்) பணிபுரிந்த அர்ஜுனனிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். அந்தப் பசு, தினமும் காளி மாதாவின் சிலைக்கு தானாகவே பால் சொரிந்து அபிஷேகம் செய்ததைக் கண்டு, இந்த அரிய நிகழ்வை அர்ஜுனன், மன்னரிடம் கூறினான். அவர் நேரில் வந்து காளி மாதாவை தரிசித்தார். கால்கா காளி மாதாவின் புகழ் மேலும் மேலும் பரவியது.

உள்ளூர் மக்கள் தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே அந்த ஆலயத்தை நினைக்கின்றனர். அங்கே இருந்த சில நிமிடங்களிலேயே இதை புரிந்து கொண்டோம். அந்தக் கோயிலின் கல்வெட்டில் காணப்பட்ட ‘சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே சரண்யே த்ரயம்பிகே கௌரி நாராயணீ நமோஸ்துதே’ என்கிற ஸ்லோகத்தை மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருந்தது ஒரு பெண் குழந்தை. அதற்குப் பத்து வயதுதான் இருக்கும். அருகில் அந்தக் குழந்தையின் தாயார் கைகூப்பி நின்றுகொண்டிருந்தார். ‘தினமும் இந்த ஸ்லோகத்தை சொல்வியா?எத்தனை முறை சொல்வே?’ என்று குழந்தையிடம் கேட்டோம்.

“நிறைய தடவை சொல்வேன். ஒவ்வொரு முறை சொல்லும்போதும் காளிமாதா ஒவ்வொரு துஷ்டனைக் கொல்வாங்க” என்றது அந்தக் குழந்தை.

அசைக்க முடியாத நம்பிக்கை!

- aruncharanya@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in