

தமிழ்த் திரையுலகிலும் கர்னாடக சங்கீத உலகிலும் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிய இசை அறிஞர் மறைந்த பாபநாசம் சிவனின் இளைய மகள், ருக்மிணி ரமணி. இவர் தன்னுடைய தந்தை போலவே சிறந்த இசைக் கலைஞராக, வாக்கேயக்காரராகத் திகழ்ந்துவருபவர்.
‘கபாலீஸ்வரர் பஞ்சரத்னம்’, ‘திருவாரூர் பஞ்சரத்னம்’, ‘108 திவ்யதேச கிருதிகள்’, ‘51 சக்திபீட கிருதிகள்’, ‘துவாதச ஜோதிர்லிங்க கிருதிகள்’, ‘அஷ்டவீரட்டான கிருதிகள்’, ‘பஞ்சபூத ஸ்தல கிருதிகள்’, ‘சப்தவிடங்க ஸ்தல கிருதிகள்’ என்று பல்வேறு தொகுப்புகளாகக் கர்னாடக இசை உலகுக்கு ஏராளமான பாடல்களை இவர் வழங்கியுள்ளார். இவரது சமீபத்திய படைப்பு, 72 மேளகர்த்தா ராகங்களையும் கொண்டு பல்வேறு கடவுள்களைத் துதித்து எழுதியுள்ள ‘ஸகலதேவதாப்ரிய 72 மேள ராக கிருதிகள்’ என்கிற நூல்.
விநாயகனைத் தொழும் கடவுள் வாழ்த்து, மஹா பெரியவரைத் துதிக்கும் குரு வந்தனத்தைத் தொடர்ந்து, 72 மேளகர்த்தா ராக கிருதிகள் அணிவகுக்கின்றன. முதலாவதாக, ‘கனகாங்கி’ ராகத்தில் தேவியைப் போற்றும் ‘கணமேனும் மறவேனே கற்பகமே’ என்கிற பாடலுடன் தொடங்கி, 72ஆவது பாடலாக ‘ரசிகப்ரியா’ ராகத்தில் ‘ஏகவீரை ஜகதாம்பிகே’ என தேவி கிருதியோடு நிறைவு செய்கிறார். விநாயகர், சிவன், பார்வதி, முருகன், ராமர், கிருஷ்ணர் மட்டுமன்றி, அரிதாகத் துதித்து எழுதப்படும் பிரத்யங்கரா தேவி, நந்திகேஸ்வரர், காலபைரவர், கங்காதேவி உள்ளிட்ட தெய்வங்களையும் துதித்து எழுதியுள்ளார்.
’சேனாவதி’ ராகத்தில் முருகன், ‘ராமப்ரியா’ ராகத்தில் ராமன், ‘ரிஷபப்ரியா’ ராகத்தில் நந்திகேஸ்வரர் என ராகப் பெயரோடு பொருந்தும் வகையில் இறைவனைத் தேர்ந்தெடுத்துப் பாடியுள்ளது சிறப்பு.
ஆதி, ரூபகம், சாப்பு என்று நின்றுவிடாமல், சதுஸ்ரஜாதி துருவ தாளம் திஸ்ர நடை, கண்டஜாதி அட தாளம், திஸ்ரஜாதி ரூபகம் என விதவிதமான தாளங்களைப் பயன்படுத்தியுள்ளார்.
தந்தை போலவே, ராகத்தின் பெயரைப் பாடல் வரியில் கொண்டுவரும் ‘ராக முத்திரை’யைப் பெரும்பாலும் பயன்படுத்துபவர் ருக்மிணி ரமணி. இந்தத் தொகுப்பிலும் அப்படியே. இசை அறிவோடு மொழித் திறனும் கொண்டிருப்பதால், வெகு எளிதாக அந்த ராகப் பெயரை பாமாலைக்குள் கோத்துவிடும் சாமர்த்தியம், பல கிருதிகளில் பளிச்சிடுகிறது.
அதேநேரம், சொற்கள் மிக எளிமையாகவும், பாடுவதற்கு வெகு எளிதாகவும் இருக்கின்றன. தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டும் கலந்த மணிப்பிரவாள நடையில் பாடல்கள் உள்ளன. சபாக்களில் ரசிகர்களை ’சபாஷ்’ போடவைக்கும் வகையில், மத்தியம காலம், சிட்டஸ்வரம், ஸ்வராட்சரம் ஆகியவற்றையும் தேவைக்கேற்ப இணைத்துள்ளார்.
பிரபல இசை மேதைகளின் வாழ்த்துரையுடன் நூல் தொடங்குகிறது. பின்னர், இசைக் குறிப்புகளுடன் கிருதிகளும், அடுத்து கிருதிகள் மட்டும் இடம்பெறுகின்றன. நிறைவாக, 72 மேள கர்த்தா ராகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. கோட்டீஸ்வர அய்யர் உள்ளிட்ட வெகுசிலரே 72 மேளகர்த்தா ராகங்களிலும் கீர்த்தனைகளை இயற்றியுள்ளனர். அந்த வரிசையில், இசை அறிஞர் ருக்மிணி ரமணியும் இணைந்திருக்கிறார்.
ஸகலதேவதாப்ரிய 72 மேள ராக கிருதிகள்
கலைமாமணி ருக்மிணி ரமணி
விலை: ரூ.500
கிடைக்கும் இடம்: 1301, டவர் ஆஃப் அடையாறு, 107-109 எல்.பி.சாலை, அடையாறு, சென்னை - 600020.
பதிப்பு: ருக்மிணி ரமணி.
தொடர்புக்கு: 9840348638