

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு எந்த அளவுக்குச் சிறப்பு மிக்கதோ அதுபோலவே அதன் துணை நதிகளும் சிறப்புப் பெற்றவை. சித்தாறும் கடனா நதியும் பச்சையாறும் பெருமை பல பெற்றவை. இவற்றுள் பச்சையாற்றை ‘சியமளா நதி’ என்று போற்றிப் புகழ்கிறார்கள். கங்கையே ‘சியமளா’ நதியாக ஓடிக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து களக்காடு செல்லும் சாலையில் உள்ளது தேவநல்லூர். பக்தர்களின் திருமணத் தடையை நீக்கி அருள் பாலிக்கும் பழமையான ஸ்ரீ கோமதி அம்பாள் சமேத ஸ்ரீ சோமநாத சுவாமி திருக்கோயில் இவ்வூரின் பச்சையாற்றங்கரையில் அமைந் துள்ளது.
தல வரலாறு: 800 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை ஆண்ட மன்னர் வீரமார்த்தாண்டன் வேட்டைக்காகக் காட்டுக்குச் சென்றார்.அவர் சற்று இளைப்பாறிக் கொண்டிருந்த போது, தொலைவில் ஓர் அற்புதமான காட்சியைக்கண்டார். வேட்டை நாய் ஒன்று முயலைத் துரத்திக் கொண்டிருந்தது. முன்னால் ஓடிக்கொண்டிருந்த முயல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள இலந்தை மரத்தின் அருகே வந்ததும் திடீரெனத் திரும்பி நாயை எதிர்த்து நிற்க, நாய் பயந்து ஓடியது!
மறுநாளும் இதேபோல வேட்டை நாய் ஒரு முயலை விரட்ட அதே இலந்தை மரத்தின் அருகே வந்ததும் முயல் எதிர்க்கத் தொடங்கியது. இதைப் பார்த்த மன்னர், மரத்தின் அருகே குழிதோண்டிப் பார்க்கக் காவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது அங்கே சிவலிங்கம் கிடைத்தது. இறைவனின் பெருமையை எண்ணி பச்சை ஆற்றின் கரையில் சோமநாதருக்குக் கோயிலைக் கட்டினார் மன்னர்.
பெருங்கருணை நாயகி கோமதி: இத்தலத்து இறைவியின் திருவுருவம் மிகவும் கலை நுணுக்கத் தோடு வடிக்கப் பட்டுள்ளது. பெருங் கருணை நாயகியான கோமதி, மந்தகாசப் புன்னகையுடனும் பேசும் பொற்சித்திரமாகவும் இறைவனின் உள்ளத்திலே எழுதி வைத்திருக்கும் உயிர் ஓவியமாகவும் அருள்பாலிக்கிறாள். பக்தர்களின் வேண்டுதல்களை நிறை வேற்றுவதில் அம்பிகைக்குத் தனிச்சிறப்பு உண்டு.
பஞ்சலிங்க தலங்கள்: தேவநல்லூர் ஸ்ரீ சோமநாதர் திருக் கோயில், களக்காடு ஸ்ரீ சத்ய வாகீஸ்வரர் திருக்கோயில், சிங்கிகுளம் ஸ்ரீ கைலாச நாதர் திருக்கோயில், பத்தை ஸ்ரீ குலசேகரநாதர் திருக்கோயில் மற்றும் பத்மனேரி ஸ்ரீ நெல்லையப்பர் திருக்கோயில் ஆகிய ஐந்து தலங்களும் ராமர் வழிபட்டுப் பேறுபெற்ற பஞ்சலிங்கத் திருத்தலங் களாகப் போற்றப்படுகின்றன.
திருமணம் கைகூட: களத்திர தோஷம் நீங்க பக்தர்கள் இங்கே வந்து கிழக்கு நோக்கி அருள் பாலிக்கும் ஸ்ரீ சோமநாதரையும் தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் ஸ்ரீ கோமதி அம்பாளையும் ஒருசேர, ஒரே நேரத்தில் தரிசனம் செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடி வரும் என்று நம்பப்படுகிறது. பஞ்சலிங்க தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் இத்திருத்தலத்தில் ஜூலை 15ஆம் தேதி மஹா பிரதோஷ வழிபாடு நடைபெறவுள்ளது.