

அன்றாடம் உனக்காக நான் கொய்து வரும் மல்லிகைப் பூக்களையும் சாமந்திப்பூக்களையும் துளசி இலைகளையும் வில்வ இலைகளையும் உனக்கு அர்ச்சனை செய்து உன்னுடைய நாமத்தின் பெருமைகளைப் பாடி உன் ஐந்தெழுத்து நாமத்தை உச்சரித்து உனக்குப் பூசை செய்வேன். இந்தப் பூவுலகையும் அதில் இருக்கும் உயிர்களையும் என்னையும் காப்பாய். உன்னுடைய சேய்களான இந்த உலகத்தின் உயிர்களை எல்லாம் காப்பாய் எந்தையே..
பிரபஞ்சத்தின் தந்தையே என்று பிரார்த்தனையை இறைவனின் செவிகளில் பாமாலையாகச் சூட்டும் பாடல் ‘சோஜுகடா சூஜு மல்லிகே மாதேவா’ என்னும் கன்னடப் பாடல். இதைப் பாடியிருப்பவர் அனன்யா பட். ‘விடுகதை’ படத்தில் `வழி நெடுக காட்டு மல்லி'யைப் பாடிய அதே அனன்யாதான்.
சோஜுகடா கன்னடப் பாடலில் மிதமான இசை, எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் அலங்காரமும் இல்லாத வார்த்தைகள். ஆனாலும் பளிச்சென்று பக்தியைப் பாய்ச்சும் குரல் வளம். ஓர் எளிய பக்தையின் வேண்டுதல் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட தொனியில் இந்தப் பாடலை அனன்யா பாடியிருப்பதுதான் சிறப்பு. ‘தி இன்ஜினீயர்ஸ் பிக்’ என்னும் யூடியூப் அலைவரிசையில் அனன்யா பாடியிருக்கும் இந்தப் பாடலின் உருக்கம், மகாதேஸ்வர மலையில் இருக்கும் மகாதேவரை உருக்குகிறதோ இல்லையோ, கேட்பவர்களை ஒரு கணம் மெய்மறக்கச் செய்யும். மக்களின் மனதை உருக்கினால் மகேசனின் மனதை உருக்கியது போல்தானே!
பாடலைக் காண: https://rb.gy/keij8