தித்திக்கும் திருப்புகழ் நாயகன் 22: சிக்கல் | சிக்கல்களைத் தீர்க்கும் சிங்கார வேலவன்!

தித்திக்கும் திருப்புகழ் நாயகன் 22: சிக்கல் | சிக்கல்களைத் தீர்க்கும் சிங்கார வேலவன்!
Updated on
2 min read

செம் மனத்தர் மிகுத்த மாதவர் நன்மை பெற்ற உளத்திலே

மலர் செல்வ சிக்கல் நகர்க்குள் மேவிய பெருமாளே. - திருப்புகழ்

மூவுலகும் அடக்கம்: முத்தமிழின் தலைவன். என்பதைவிட, வாழ்வில் சிக்கல்களில் சிக்கி அல்லல்படும் அன்பர்களின் துயர் தீர்க்க அவனை நினைத்தாலே போதும். இருந்த இடத்திலிருந்தே எண்ணியதை அருள்வான் சிங்காரவேலவன் என்பதே அவன் சிறப்பு. தேவர்களின் துயர் தீர்க்க வந்தவன், தன்னையே நம்பும் அடியார்களின் துயர் தீர்க்கவும் குடிகொண்டுள்ள இடம் சிக்கல்.

சிக்கல் சிங்கார வேலவன்: ஏழாவது படை வீடாகக் கருதப்படும் சிறப்பு வாய்ந்த தலம். இங்குள்ள அன்னை வேல்நெடுங் கண்ணியிடமிருந்து வேல் வாங்கிக்கொண்டு முருகன் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாகக் கந்த புராணம் கூறுகிறது. ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழாவின்போது வேல் வாங்கும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. வேல் வாங்கும் நிகழ்வின்போது முருகனுக்கு வியர்ப்பது இன்றளவும் நடைபெறும் அற்புதம்.

சிக்கல் திருப்புகழ்: இங்கு முருகனை “புலவரை ரட்சிக்கும் தாருவே” என்று அழைக்கிறார் அருணகிரியார். “திக்கெட்டும் போயுலாவிய புகழாளா” என்று எட்டுத் திக்கிலும் புகழப்படும் பெருமையுடயவனே என்கிறார். தேவர்களின் துயர் நீக்கி, அவர்களுக்கு ஆனந்த வாழ்வு அளித்ததால் குமரனுக்கு இந்தப் புகழ் ஏற்பட்டது.

முருகன் தமிழ் இனிமை வாய்ந்தவன். முருகன்தான் தமிழ். அவன்தான் அதன் இனிமை. எனவே அவன் தமிழ்ப் புலவர்களை ஆதரிக்கிறான். அவர்களின் தமிழ்ப் புலமையை ரசிக்க அவனைவிடச் சிறந்தவர்கள் இல்லை என்று கூறும் அருணகிரியார், "பொருள் வேண்டி யாரிடமும் போய்க் கெஞ்ச மாட்டேன். நீயே எனக்கு அருள வேண்டும்" என்கிறார்.

“நல பொருள்கள் நிரைத்து செம்பாகமாகிய கவிபாடி

விலையில் தமிழ்ச் சொற்கு உன்போல் உதாரிகள் எவரென

மெத்தக் கொண்டாடி வாழ்வெனும் வெறி கொள்“ - என்று உலூபிகளிடம் போய் வருத்தத்துடன் முறையிடும் என் வறுமை நிலை தீர நீதான் கதி என்று உன் பாதமலர்களை பற்றியுள்ள பேதையாகிய என்மீது “விழியருள் வைத்து குன்றாத வாழ்வையும் அருள்வாயே” என்று விண்ணப்பம் செய்கிறார். இமவான் மகளாகிய பார்வதியின் மைந்தன், மலை நாட்டுப் பெண்ணாகிய வள்ளி மணவாளன், இந்திரன் மகளான தெய்வானையின் பரிசுத்த நாயகன் என்று போற்றும் அருணகிரியார்,

`அலர்தரு புட்பத்து உண்டாகும் வாசனை திசைதோறும்,

முப்பத்தொன்பது காதம் வீசிய' மலர்ந்த பூக்கள் நிறைந்த சிக்கலில் வீற்றிருக்கும் சிங்காரவேலவா என்று அவன் அழகைக் கொஞ்கிறார். “அசுரரை வெட்டிச் சங்கார மாடிய பெருமாளே” என்று அவனின் வீரத்தை உற்சாகத்துடன் புகழ்கிறார்.

முருகனைப் பற்றிச் சொல்லும்போதெல்லாம் அவருக்குள் ஓர் உற்சாகம் பிறந்து விடுகிறது. எல்லாரையும் உயர்வானவன் என்று ஒவ்வொரு இறைவனின் பெருமையைக் கூறி கடைசியில் அவர்கள் வந்து வணங்கும் பெருமை பெற்றவனே என்று முத்தாய்ப்பு வைத்து விடுகிறார். "இதைத்தான் கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே" என்று ஒரு பாடல் குறிக்கிறது.

`கன்னலொத்த' என்கிற திருப்புகழில்

“மகிழ் பிஞ்ஞகர்க்கு

உரை செப்பு நாயகா” என்றும்,

“வன்னி ஒத்த படைக் கலாதிய துன்னும் கைக்கொள்

அரக்கர் மா முடி மண்ணில் அற்று விழச் செய் மாதவன்

மருகோனே” என்றும் முருகனைப் புகழ்கிறார்.

ஓடி வருவான் முருகன்: அடியவர்களுக்கு ஒரு துன்பம் எனில் ஓடி வருவான் என்கிறார் அருணகிரியார் தன் பல பாடல்களில்.

“துதிக்கும் அடியவர்க்கொருவர் கெடுக்க இடர் நினைக்கின்

அவர் குலத்தை முதல் அறக்களையும் எனக்கோர் துணையாகும்" எனும் அவர்,

“சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை

அறுத்தெறிய உருக்கி எழு(ம்) மறத்தை நிலை காணும்” என்கிறார்.

திருப்பம் தரும் திருப்புகழ்: முருகனின் பாடல்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது திருப்புகழ். வாழ்வின் சிக்கல்களில் மாட்டி, மீண்டு வர முடியாமல் தவிக்கும் அனைவருக்கும் திருப்புகழ் ஒரு மாமருந்து.

“செவ்வேல் விநோதன் திருப்புகழ் சிந்தித்திருப்போர்க்கு எவ்வேலை வேண்டும் இனி” என்று திருப்புகழ் சிறப்பித்துக் கூறப்படுகிறது. சிக்கல் முருகனை நினைத்து சிங்கார வேலா என்றால் சிங்காரமான வாழ்வு அருள்வான் என்பதே பக்தர்களின் நம்பிக்கை.

(புகழ் ஓங்கும்)

- gaprabha1963@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in