திருவிவிலிய கதை: கவலைப்படாதீர்கள்!

திருவிவிலிய கதை: கவலைப்படாதீர்கள்!
Updated on
1 min read

யேசு போகும் இடங்களில் வாழ்ந்த மக்கள் பெரும்பாலும் அன்றாடம் காய்ச்சிகளாகவும், ஏழைகளாகவும் இருந்தார்கள். தங்கள் வாழ்க்கையின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய கடினமாய் உழைத்தாலும் அவர்களது வாழ்க்கையின் தேவையை குறித்த ஒரு கவலை அவர்களுக்கு இருந்துகொண்டே இருந்தது. வாழ்க்கையின் தேவைகளுடன் தன்னைத் தேடி வந்த மக்களிடம் இப்படியாக யேசு சொன்னார்:

“உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, எந்த உடையை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவைவிட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? வானத்தில் பறக்கும் பறவைகளைப் பாருங்கள்.

அவை விதைப்பதுமில்லை: அறுப்பதுமில்லை: உணவைக் களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா! கவலைப்படுவதால் உங்களில் எவர் உங்களின் உயரத்தோடு ஒரு முழத்தைக் கூட்ட முடியும்?

உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன என்பதைக் கவனியுங்கள். அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை. ஆனால் புகழ்பெற்ற ஓர் அரசன்கூட அவற்றில் ஒன்றைப் போலவும் உடை அணிந்திருந்ததில்லை.

நம்பிக்கை குறைந்தவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் தூக்கி எறியப்படும் காட்டில் உள்ள புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால், உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்யமாட்டாரா? ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்’ எனக் கவலை கொள்ளாதீர்கள். ஏனெனில் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவரே இவற்றையெல்லாம் தேடி அலைவர்.

உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும். அனைத்திற்கும் மேலாக கடவுளுடைய ஆட்சியையும் கடவுளுக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது பூமியில் உள்ள உங்கள் வாழ்க்கைக்கு தேவையானவை யாவும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளைய கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்" என்று இயேசு சொன்னார்.

`ஒருவர் கடந்துவிட்ட நாள்களில் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த துயரம் மிகுந்த நிகழ்வுகளுக்காகவோ அல்லது எதிர்காலத்தை எப்படிச் சந்திக்கப் போகிறோம்?' என்ற கவலையோ கொள்ளாமல், "தங்கள் நம்பிக்கையை விண்ணகத் தந்தையின் மீதும் யேசுவின் மீதும் வைக்கும்பொழுது உலகம் தரக்கூடாத ஒரு சமாதானம் அவரின் உள்ளத்தை நிரப்பும்" என்று திருமறை கூறுகிறது.

- merchikannan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in