

சிகரத்தின் உச்சியை நோக்கிப் பயணிப்பவராக இருந்தாலும், கடலின் ஆழத்தில் முத்துக்குளிப்பவராக இருந்தாலும், இறை எனும் பரவச அனுபவத்துக்காக உள்ளொளியை நோக்கித் தவமிருப்பவராக இருந்தாலும் இவர்கள் எல்லாரிடமும் இருக்கும் பொதுவான அம்சம் உறுதி!
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி செய்வதால் முடியும் என்கிறார் திருவள்ளுவர். இலக்கை அடையும்வரை தொடர்ந்து போராடு என்கிறார் சுவாமி விவேகானந்தர். அப்படிப்பட்ட உறுதியை கருப்பொருளாகக் கொண்டு உருவான பாடலை, புகழ்பெற்ற கர்னாடக இசைப் பாடகர் சஞ்சய் சுப்ரமணியத்தையும் புகழ் பெற்ற சூஃபி இசைப் பாடகர் அரிஃபுல்லா ஷா ரஃபியையும் பாடவைத்து யூடியூபில் வெளியிட்டுள்ளது கோக் தமிழ் ஸ்டுடியோ.
அரிதான தாளக்கட்டில் இந்தப் பாடலின் இசையை ஜனரஞ்சகமாக அமைத்துள்ளார் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். கம்பீரமான வீணையின் (புண்யா ஸ்ரீநிவாஸ்) நாதத்தில் தொடங்கும் பாடல், கிதார், கீபோர்ட், பாஸ், வயலின், செல்லோ, டிரம்ஸ் என மேற்கத்திய ஃபியூஷனாகப் படிப்படியாக வேகம் எடுக்கிறது.
“நீயன்றி வேறேது உறுதி
யாதுமாகி என் யாவுமாகி
யாவுமாற என் யாகமாகி
இகமாகி என் ஏகமானதுவே”
- என உறுதியை தன் காத்திரமான குரலில் காட்சிப்படுத்துகிறார் சஞ்சய். தொடர்ந்து அபாரமான ஓர் ஆலாபனையோடு இணையும் அரிஃபுல்லா, உறுதியின் இன்னொரு பரிமாணத்தைத் தம் குரலின் வழியாக தரிசனப்படுத்துகிறார்.
“இப்படியொரு பாடலை எழுதுவதற்கு உங்களுக்கு உந்து சக்தியாக அமைந்த விஷயங்களைப் பற்றிச் சொல்லுங்கள்” என்று பாடலாசிரியர் கிருத்திகா நெல்சனிடம் கேட்டோம்.
“நம்முடைய வாழ்க்கையை முன்னேற்றுவதற்கான உந்துசக்தி யாகத் திகழ்வது நம்பிக்கைதான். அதை மையப்படுத்திதான் இந்தப் பாடல் உருவாக வேண்டும் என்று நினைத்தோம். பாடலின் இந்தக் கருத்துக்கான தாக்கம் பல இடங்களிலிருந்து எனக்குக் கிடைத்தது. மகாகவி பாரதியாரின் `மனதில் உறுதி வேண்டும்', வள்ளலாரின் `ஆணை உன் மேல் ஆணை' போன்ற பல பாடல்களின் கருத்துகளும் எனக்கு இந்தப் பாடலின் உருவாக்கத்துக்கு உதவின.
இவை தவிர, அரிஃபுல்லா ஷா பல சூஃபி பாடல்களைப் பாடிக் காட்டுவார். அதன் அர்த்தங்களையும் விளக்கிக் கூறுவார். `ஒரு கணமும் உனைப் பிரிந்தே இருக்கமாட்டேன்' என்னும் ஒரு வரி, ஒரு முழு சூஃபிப் பாடலின் சாராம்சம் இருக்கும். `கடவுள் வேறு நான் வேறு என்று பார்ப்பதுதானே முட்டாள்தனம்' என்னும் சூஃபி பாடல் வரியை அடியொற்றியே, `உனை எனை வேறு என்று இனி பிரிக்க மாட்டேன்' என்று எழுதினேன். இப்படிப் பலரிடம் உரையாடும்போது வெளிப்படும் அனுபவங்களின் மொத்தத் தொகுப்புதான் இந்தப் பாடல்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் பேச்சில் நிறைய ஆன்மிகக் கருத்துகள் வெளிப்படும். அந்தக் கருத்துகளும் இந்தப் பாடலின் உருவாக்கத்துக்கு உதவியிருக்கின்றன. இந்தப் பாடலுக்காகப் பங்கெடுத்திருக்கும் கலைஞர்கள் எல்லாருடைய நம்பிக்கையின் மொத்த வடிவம்தான் இந்த உறுதி” என்றார்.