

துவாபர யுகம் அது. காஞ்சிப் பெருநகரத்தின் பாலாற்றங்கரையின் ஓரத்தில் இருந்த அற்புதமான காடு. அந்தக் காட்டின் நடுவே அதன் அடர்ந்த பகுதியில் ஒரு சிவலிங்கம் பொலிந்து விளங்கியபடி இருந்தது. அந்த அற்புதச் சிவலிங்கத்தைப் புலிக்கால் முனிவர் தனது துணைவியுடன் பூஜித்துவந்தார்.
முனிவர் தனக்குப் புலிக்கால்கள் தான் வேண்டும் என்று ஈசனிடம் கேட்டு வாங்கிக்கொண்டார். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. பூஜைக்கு மலர் பறிக்க விடிந்த பின் சென்றால், தேனீக்கள் அதில் இருக்கும் தேனைப் பருகிவிடும். விடிவதற்கு முன்பே மலர்களைப் பறிக்கலாம் என்றால், ஒளி இருக்காது.
அதுவும் சில மலர்கள் மரத்தின் உச்சியில்தான் இருக்கும். இறைவன் கொடுத்த இந்தக் கால், கைகளை வைத்துக்கொண்டு நம்மால் மரம் ஏற முடியாது என யோசித்தார் முனிவர். ஆகவே, சிவ பூஜைக்குத் தேவையான மலர்களை மரம் ஏறி, சூரிய உதயத்துக்கு முன்பே பறிப்பதற்குத் தோதாகப் புலிக்கால்களை ஈசனிடம் கேட்டு வாங்கிக்கொண்டார். புலியின் கால்களை இறைவனிடம் கேட்டு வாங்கிக் கொண்டதால், அவருக்குப் புலிக்கால் முனிவர் (வியாக்ர பாதர்) என்கிற பெயர் வந்தது.
பக்தியில் சிறந்த முனிவர், ஈசனை அழகாக பூஜிப்பதில் ஆச்சரியம் இல்லைதான். ஆனாலும், அவர் இங்கு ஈசனைப் பூஜிப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. தனது வம்சம் விளங்கப் பிறக்கப் போகும் மகன், ஈசனின் அருளால் பிறந்த தெய்விகக் குழந்தையாக இருக்க வேண்டும் என்று முனிவர் விரும்பினார். ஆகவே, பிள்ளை வரம் வேண்டிப் பிறைசூடியைப் பல நாள்களாகப் பூஜித்து வந்தார்.
இருவரும் ஒருவரே: முனிவரின் ஒப்பற்ற தவத்தால் ஈசனின் மனம் கனிந்தது. சிதம்பரத்தில் இதே வியாக்ர பாதருக்கு நடராஜனாக அற்புதக் கோலம் காட்டிய ஈசன், மீண்டும் அவருக்கு ஓர் அதிசய கோலத்தைக் காட்ட எண்ணினார். ஆகவே, ‘சிம்ம தட்சிணாமூர்த்தி’யாக அற்புதக் காட்சி தந்தார்.
அம்பிகைக்கு உரிய தோடை ஒரு காதில் அணிந்து மற்றொரு செவியில் தனக்கே உரிய குண்டலத்தை அணிந்தபடி அதிசய கோலம் காட்டினார் இறைவன். அதே போல அம்பிகைக்கு உரிய இடது பாதத்தை அம்பிகையின் வாகனமான சிங்கத்தின் மீது வைத்திருந்தார். தனக்கே உரிய வலது பாதத்தை முயலகன் மீது பொருத்தி இருந்தார். வலக்கையால் ஞான முத்திரை காட்டி, இடக்கையை ஒய்யாரமாக இடது தொடையின் மீது தொங்கப் போட்டபடி காட்சி தந்தார் ஈசன்.
சனகாதி முனிகளும் அந்த இறைவனைச் சுற்றி நின்று அவரைத் தரிசித்துக் கொண்டும், அவர் மௌனமாக செய்யும் உபதேசத்தை உணர்ந்து கொண்டும் இருந்தார்கள்.
இந்தக் கோலத்துக்கு ‘அர்த்த நாரீஸ்வர தட்சிணாமூர்த்தி’ திருக் கோலம் என்று பெயர். அம்பிகையும் தானும் வெவ்வேறாகக் காட்சி தருவதற்குப் பதிலாக, இருவரும் இணைந்து ஒரே ரூபமாக முனிவருக்குக் காட்சி தந்தார். ஈசன் இப்படி அற்புதக் கோலம் காட்டிய பின், முனிவரின் விருப்பம் நிறைவேறாது போகுமா என்ன?
புலிக்கால் முனிவருக்கு உபமன்யு மகனாகப் பிறந்தார். நாயன்மார்களின் கதையை இந்த உபமன்யு முனிவர் சொல்வதாகத்தான் சேக்கிழார் பெரிய புராணத்தையே அமைத்திருக்கிறார். உலகுக்கே கீதோபதேசம் செய்த கண்ணனுக்கே ‘சிவ தீட்சை’ வழங்கிய தபோதனர் உபமன்யு முனிவர் என்று சைவர்கள் அவரைக் கொண்டாடுகின்றனர். புலிக்கால் முனிவர் வழிபட்டதால் திருப்புலிவனநாதர் என்று இறைவன் அழைக்கப்பட்டார்.
குழல்நீண்ட ஈசன்: காலம் பல சென்றது. புலிக்கால் முனிவர் பூஜித்த சிவலிங்கபிரானுக்கு அழகிய ஆலயம் எழுப்பப்பட்டது. அந்த ஆலயத்தில் புலிக்கால் முனிவர் தரிசித்த தட்சிணாமூர்த்திக்கும் தனி சந்நிதி அமைக்கப்பட்டது. ஈசனுக்கு ‘வியாக்ரபுரீசன்’ என்றும் அம்பிகைக்கு ‘அமிர்த குசலாம்பாள்’ என்றும் பெயர் சூட்டப்பட்டன.
இந்த ஈசன் மீது அபார பக்தி கொண்ட மன்னன் ஒருவன் கோயிலுக்குப் பல திருப்பணிகள் செய்தான். மேலும், தனக்குத் தினமும் இந்த ஈசனின் பிரசாதத்தைக் கொண்டு வந்து தரவேண்டும் என்றும் கோயிலில் தினப்படி பூஜை செய்யும் குருக்களை வேண்டிக்கொண்டான். அதன்படி அந்தக் கோயில் குருக்கள் தினமும் மன்னனுக்கு இறைவனின் பிரசாதத்தைக் கொண்டு சென்று கொடுத்தார்.
அப்படி ஒரு நாள் இறைவனுக்குச் சூடிய மாலையைப் பிரசாதமாக மன்னனிடம் கொடுத்த போது, அதில் ஒரு கரிய நீண்ட மயிரிழை இருந்தது. அதைக் கண்ட மன்னன், குருக்களைச் சினந்தான்.
மன்னனது கோபத்துக்குப் பயந்து, “கோயிலில் இருக்கும் சிவலிங்கபிரானுக்கு நீண்ட குழல் உண்டு” என்று குருக்கள் சொல்லிவிட்டார். குருக்கள் சொன்னதைக் கேட்டு நகைத்த மன்னன், “அப்படியெனில், அதை எனக்குக் காட்டுங்கள்” என்றான்.
குருக்களுக்கு என்ன பதில் சொல்வது என்று விளங்கவில்லை. சொல்லுக்குக் கட்டுப்பட்டு அரசனுடன் கோயிலுக்கு வந்தார் பட்டர், பயந்துகொண்டே சந்நிதிக்குள் சென்றார். அவரது மனம் ஈசனைப் பிரார்த்தித்தது. குருக்கள் மெதுவாகச் சிவலிங்கத்தின் பின்னால் கைவிட்டுத் துழாவினார்.
அவர் கையில் எதோ தட்டுப்பட்டது. அது என்ன என்று முன்னே இழுத்துப் பார்த்த பட்டருக்குத் தான் காண்பது கனவா அல்லது நனவா என்று விளங்கவே இல்லை. அதிர்ச்சியில் சிலையாக நின்றுவிட்டார். அவரின் கைவிரல்கள் கேசத்தை ஸ்பரிசித்தன. ஈசனின் கேசத்தைக் கையில் எடுத்து மன்னனுக்குக் காட்டினார். அதைக் கண்ட மன்னன் அதிர்ந்து போனான். சிறந்த பக்திமானைத் தவறாக எண்ணிவிட்டோமே என்று பதறி குருக்களின் காலில் விழுந்து மன்னிக்க வேண்டினான்.
இன்றளவும் அந்தக் குருக்களுக்கு அருளியதற்கு அடையாளமாகச் சிவலிங்கத்தின் உச்சியில் குடுமி போன்ற ஒரு அமைப்பு காணப்படுகிறது. மேலும், புலிக்கால் முனிவர் பூஜித்த ஈசன் என்பதால் ஈசனின் சிவலிங்கத் திருமேனியில் புலியின் நகத்தால் உண்டான வடுக்கள் இருக்கின்றன.
இந்தக் கோயிலில் மேலும் பல அதிசயங்கள் உள்ளன. வியாக்ர பாத முனிவரின் சந்நிதியில் அவரது சமாதி இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. மேலும், அப்பர் பாடிய ‘க்ஷேத்திரக் கோவை திருத்தாண்டக’த்தில் பதினொன்றாம் பாட்டில் முதல் தலமாக விளங்கும் ‘புலிவலம்’ என்கிற தலம், இந்தத் தலம்தான் என்றும் சொல்லப்படுகிறது.
பட்டினத்து அடிகள் பாடிப் பரவிய அற்புத ஈசனை வணங்கினால் புத்திரபாக்கியம் தக்க தருணத்தில் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும், நமது வாழ்வில் அனைத்து ராஜபோகங்களையும் இந்த சிம்ம தட்சிணாமூர்த்தி தருகிறார் என்பதும் ஐதீகம்.
அம்பிகையும் ஈசனும் ஒரே உருவத்தில் காட்சி தருவதால், கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை நீக்கி, அவர்களுக்குள் அன்பை வளர்க்கும் கண் கண்ட தெய்வமாக இவர் விளங்குகிறார். மேலும், இங்கு அம்பிகை அமிர்த குசலாம்பாள், பிணி நீக்கும் அருளைப் பொழிபவளாக இருக்கிறாள்.
அமைவிடம்: உத்திரமேரூரில் இருந்து காஞ்சி சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் திருப்புலிவனநாதர் ஆலயம் உள்ளது. காஞ்சியில் இருந்தும் உத்திரமேரூரில் இருந்தும் ஆட்டோவிலோ பேருந்திலோ செல்லலாம்.