கண்முன் தெரிவதே கடவுள்: சந்தி, சந்நிதியாக எப்போது மாறும்?

கண்முன் தெரிவதே கடவுள்: சந்தி, சந்நிதியாக எப்போது மாறும்?
Updated on
2 min read

‘இறையே குருவாக இறங்கி வருகிறது’ என்பதே பண்டைய பாரதக் கோட்பாடு. குருவே இறைவன் என்பதைப் புரிந்துகொள்வதில்தான் ஒரு ஜீவனின் பயணம் நிறைவடைகிறது என்பார்கள். அவதார நோக்கம் அறத்தை நிலைநிறுத்துவது. குருவின் நோக்கம் அறவழியில் ஒருவனை நிற்கவைத்து ஆன்ம விடுதலை தருவது.

நம்மால் கடவுளைக் காண முடியாது.

அட, என்னடா? கண்முன் தெரிவதே கடவுள் என்று தலைப்பை வைத்துவிட்டு இப்படிச் சொன்னால் எப்படி?

இருங்கள்! பொறுங்கள்! முழுமையாகக் கேளுங்கள்!

நம்மால் கடவுளைக் காண முடியாது. ஆனால், நம்மால் கடவுளர்களைக் காண முடியும். நம்மால் கடவுளர்களாக மாற முடியாது. ஆனால், நம்மால் கடவுளாக முடியும். என்ன, பேச்சையே காணோம்?!

கடவுள் என்பது ஒற்றை வடிவம், ஒரே உருவம், ஓரிடம் என்பதாக இல்லை. அதனால், அதைக் குறிப்பிட்டுப் பார்க்க முடியாது. எத்தனையோ தெய்வ வடிவங்கள் நம் முன்னோரின் தவத்தில் தென்பட்டிருக்கின்றன. அவற்றை அவர்கள் முறையாக வகுத்தும் தந்திருக்கிறார்கள். பிள்ளையார், முருகன், உமை, சிவன், மாலவன், அனுமன் என்று எத்தனையோ! இவை யாவுமே அந்த உருவம், வடிவம், இடம், தடம் ஏதுமில்லாத இறையின் பல்விதமான செயல் வெளிப்பாடுகளே.

தேர்ந்த உபாசனை மூலம் இவற்றை உருவாய், வடிவாய்க் காணலாம். ஒரு ஜீவனின் வினைகளெல்லாம் தீரும்போது, விருப்பு வெறுப்புகளிலிருந்து விடுதலை பெறும்போது அவன் உருவம், வடிவம், குணம் எதுவுமில்லாமல் கரைந்து கடவுளாகிறான். ஆனால், ஒருவனால் ராமனாகவோ, துர்கையாகவோ ஆக முடியாது. சிவமாகித் தீரலாம். சிவனாக முடியாது. புரிகிறதல்லவா?

அறியாமை என்னும் பழக்கம்: புரிகிறது. ஆனால், நமக்குப் போதவில்லை. ஏன்? உடலில் புகும்போது உயிராகத்தான் இருந்தோம். பிறகு நாம் உயிர் என்பது ஏனோ நமக்கு மறந்துபோய் இந்த உடம்புதான் ‘நாம்’ என்று எண்ணிக்கொள்ளத் தொடங்கினோம். இந்த எண்ணம் பெரிதும் வேரூன்றிப்போய், உயிரை உணர முடியாமல் செய்துவிட்டது. இதைத்தான் ‘தேகாத்ம பாவனை’ என்பார்கள்.

‘உடம்பே நான்’ என்னும் இந்த உண்மைக்குப் புறம்பான நிலைப்பாட்டால், நாம் உயிருள்ள எல்லா வடிவங்களையும் உடம்புகளாகவே பார்க்கிறோம். இதனால்தான் உலகில் நாம் உழல்கிறோம். இதுதான் நம் பிரச்சினை. இதன் பெயர்தான் அறியாமை. இந்த அறியாமை என்பது ஒரு பழக்கமே, அறிவைப் போலவே!

அறியாமையிலிருந்து அறிவதற்கு நம்மைப் பழக்குவதற்காக பரமே நரமாகப் பாருக்கு வருவதே குருவின் தோற்றம். கடவுள் தன் முகத்தைப் பார்த்துக்கொள்ளும் கண்ணாடியே கவிதை. தன்மை எதுவுமே இல்லாத கடவுளுக்குத் தன்னுணர்வு தோன்றும் வாய்ப்பே ‘குரு’ என்னும் வடிவம். இதைத் தெளிவாகத் தெரிந்துகொள்பவன் ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்கிறான். என்ன அது? குருவின் உபதேசங்களைக் காட்டிலும் குருவே முக்கியம் என்பதை! ஆம், ஏனென்றால் குருவே இறைவன். அவனே கண்கண்ட கடவுள்.

உலகத்தையே கவர்ந்துகொள்ளத் தயாராக இருப்பதுபோல், கவிந்து நிற்கின்றன கருத்த முகில்கள். ஆனால், மழை பெய்யக் காணோம். அதற்கு ஒரு திறப்பு விழாத் தருணம் தேவைப்படுகிறது. அது குறுக்கே பறக்கும் ஒரு வெள்ளைப் பறவையின் சிறகுச் சீண்டலாகக்கூட இருக்கலாம்! ஆனால், அது நேர்ந்தால்தான் அந்த ‘அமுத வைரக் கோல்கள்’ அம்புகளாக மண்ணின் மீது வந்துவந்து விழுகின்றன. அவ்வளவு மேகங்கள் திரண்டிருந்தாலும், அவற்றால் தம்மைத் தாமே அவிழ்த்துக்கொண்டு கவிழ்த்துக்கொள்ள முடிவதில்லை.

அதே போலத்தான் நம் கதையும். நம்முடைய ஜீவன் என்பது சின்னஞ் சிறிய வடிவுள்ளது. அதை அரிசிமுனை ஒளி என்பார்கள். ஆனால், அதை எது இங்கே கட்டிப் போட்டிருக்கிறது? ஒரு மூட்டையளவு வினை. வினை என்றால் செயல். நம்முடைய செயல்களின் விளைவுகளின் தொகுதியே விதி. எண்ணம் என்றொன்று இருக்கும்வரை, நம்மால் எதையும் செய்யாமல் இருக்க முடியாது. மனம் என்றொன்று உள்ளவரை நம்மால் எண்ணமில்லாமல் இருக்க முடியாது. எனில், நாம் எப்போது, எப்படி விடுதலை பெறுவது?

தீர்வுக்குப் பெயர் குரு: இந்தச் சின்ன துளியொளித் துகளுக்கும், அந்த மலையளவு வினைகளுக்கும் உள்ள தொடர்பை அனுபவித்துத் தீர்க்க முடியாது. ஏனென்றால், நாம் தொடர்ந்து எண்ணுகிறோம், செயல்கள் செய்கிறோம், அவற்றின் விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறோம். அதனால் நம் வீதி வீங்கிக்கொண்டே போகிறது. இதை ஆழமாக நினைத்துப் பார்த்தால் நம் உயிரே வெலவெலத்துப் போகிறது.

படைப்பு ரீதியால் வந்த இந்தச் சிக்கலுக்குப் படைப்பிலிருந்துதான் தீர்வொன்று வரவேண்டும். அந்தத் தீர்வுக்குப் பெயர்தான் குரு. காரணமற்ற கருணையே தன்னுடைய ஒரே இயல்பாகக் கொண்ட, கடவுளே இறங்கிவந்த குருவால் வழங்கப்படுவதே விடுதலை.

உடல் எனும் சிறை: அந்தத் தொடர்பைக் கத்தரிக்கும் கருணை, வலிமை, உரிமை குருவுக்கே உண்டு. உடம்பு என்பது வினையின் விளைவால் வந்த சிறையாக இருக்கலாம். ஆனால், விடுதலைக்கு அதுவே கருவியாகிறது. அதுபோல விடுதலை என்பது வழங்கப்படுகிற ஒன்று என்பதாலும், அதை அவனே வழங்குவதாலும் குருவே நமக்குக் கதியாகிறான்.

இந்தக் காரணங்களால்தாம் நம் பாரதப் பண்பாட்டில் பெற்ற தாய்க்கும், உற்ற குருவுக்கும் மிக உன்னதமான இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த இருவருக்கும் மேலாக ஒரு பதவியே இங்கே கிடையாது.

இந்த வாழ்க்கை ஒரு பயணம் என்கிறோம். பெரும்பாலும் அது அலைச்சலும் தேடலுமாகத்தான் இருக்கிறது. நம் வாழ்வில் நாம் ஒரு குருவைச் சந்திக்கும் கணத்தில்தான் நம்முடைய அகப்பயணம் தொடங்குகிறது. அதுவரை நாம் சந்தியில் நின்றுகொண்டு விழித்துக் கொண்டிருக்கிறோம். அவனைச் சந்தித்த பிறகே சந்தி, சந்நிதியாக மாறுகிறது.

வாருங்கள்! குருவை, தூய அன்பின் உருவை, உருவில் அருவை, நம் ஒற்றை நம்பிக்கையைச் சந்திப்போம்!

(தரிசனம் நிகழும்)

- tavenkateswaran@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in