

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவு, வெறும் சலுகையாக இருக்கிறது. ஆனால், அந்த உறவை ‘நண்பர்களைப் போல் உதவும் பெற்றோர்களாக இருங்கள்’ என்று விவிலியம் சொல்கிறது.
பிள்ளைகள் புறவுலகில் எவ்வாறான பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள் என்பது பற்றிப் பெரும்பாலான பெற்றோர் அலட்டிக் கொள்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரை, ‘பிள்ளைகள் அடிபட்டுக் கற்றுக்கொள்ளட்டும்’ என்பதையே சரியென நினைக்கிறார்கள்.
பிள்ளை வளர்ப்பில் இந்த அணுகுமுறை எல்லா நேரத்திலும் உதவாது. அவர்களுடைய பிரச்சினைகளை நம்மிடம் மனம் திறந்து பகிர்ந்து, அதற்கு நமது அனுபவத்தின் வழியான ஆலோசனையைப் பெற்றுக்கொள்கிறவர்களாக அவர்களை உருவாக்குவது முக்கியம்.
இதைத்தான் புனித விவிலியத்தின் யோக்கோபு புத்தகத்தின் 1ஆவது அதிகாரத்தின் 19ஆவது வசனம் “பெற்றோர் நன்றாகக் காதுகொடுத்துக் கேட்கிறவர்களாகவும், யோசித்து நிதானமாகப் பேசுகிறவர்களாகவும் இருக்க வேண்டும்” என்று கூறுகிறது. பெற்றோராகிய உங்களுக்கு இறைவன் இரண்டு காதுகளைக் கொடுத்திருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.
‘பிள்ளைகள் எங்களிடம் எதுவுமே சொல்வ தில்லை’ என்று சொல்லும் பெற்றோர் என்றால், சிக்கல் பிள்ளைகளிடம் இல்லை; உங்களிடம்தான் இருக்கிறது. பிள்ளைகள் புறவுலகில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து, அதாவது, தங்கள் மனதை ஆக்கிரமித்துக்கொள்ளும் பயங்களையும் கவலைகளையும் உங்களிடம் எடுத்த எடுப்பிலேயே கொட்டிவிடுவார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்.
அவர்கள் கொஞ்சமாகச் சொல்லத் தொடங்குவதை, உரிய அக்கறையுடன் பொறுமையாகக் கேளுங்கள். அப்போது ஒன்று விடாமல் உங்களிடம் மனம் திறந்து அனைத்தையும் சொல்லிவிடுவார்கள். அவை, தேர்வு குறித்த பயமாகவோ, கணிதம் போன்ற ஒரு குறிப்பிட்ட பாடம் குறித்த பயமாகவோ, அல்லது ஒரு குறிப்பிட்ட ஆசிரியரின் அணுகுமுறை பற்றிய பயமாகவோ, அவர்களுடைய சக மாணவன், மாணவி குறித்த பயமாகவோ இருக்கலாம். அவர்களுடைய பிரச்சினை எதுவெனத் தெரிந்தால்தான் நீங்கள் உதவ முடியும். அதற்கு அவர்கள் ‘அம்மாவிடமோ அப்பாவிடமோ சொன்னால் தீர்வு கிடைத்துவிடும்’ என்று நம்பும் நண்பர்களாக இருங்கள்.
பிள்ளைகளின் நம்பிக்கைக்குரிய பெற்றோராக இருக்க வேண்டும் எனில், ‘குடும்பம் பாதுகாப்பாக இருப்பதற்குக் குடும்பத் தலைவராக நீங்கள் என்னவெல்லாம் செய்கிறீர்கள்’ என்பதை பிள்ளைகளிடம் சொல்லுங்கள். அது ஒருபோதும் தவறல்ல. இப்போது, உங்கள் பங்களிப்பின் மீது ஓர் உறுதியான மரியாதை அவர்கள் மனதில் உருவாகும். உங்களை அவர்கள் பாதுகாப்பு அரணாக நினைப்பார்கள்.
இப்போது, ‘பிள்ளைகள் தங்கள் மனதில் இருக்கிற எல்லாவற்றையும் மனம் திறந்து சொல்வதற்கு ஏற்ற சூழலைக் குடும்பத்தில் ஏற்படுத்துங்கள். பிரச்சினைகளைக் கேட்கிறேன் என்கிற பெயரில், அவர்களை நேருக்கு நேர் உட்கார வைத்துப் பேசினால், அதில் அதிகாரத் தோரணைகூட வந்துவிடலாம். அப்போது அவர்கள் சிலவற்றை மறைத்துவிடலாம். அதுவே, ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் அவர்கள் மனம் திறந்து பேசலாம். அதுபோன்ற சந்தர்ப்பத்தில் நீங்கள் அவர்களுக்கு ஒரு நண்பராக மாறியிருப்பீர்கள்.
இந்த இடத்தில், ‘பிள்ளை களிடம் நண்பரைப் போல் நடந்து கொண்டால், அவர்களை எப்படிக் கண்டிக்க முடியும்?’ என்று தோன்றலாம். ‘நீங்கள் கண்டிப்பதை எல்லா சமயத்திலும் பிள்ளைகள் வெறுக்கமாட்டார்கள்’ என்று விவிலியத்தின் நீதிமொழிகள் கூறுகிறது. எனவே, பிள்ளை களை அளவாகக் கண்டியுங்கள்.
ஏனென்றால் பிறக்கும் போதே எது சரி, எது தவறு என்பது அவர்களுக்குத் தெரியாது. அதைக் கற்றுக்கொடுக்கும்போது கண்டித்துத் திருத்துவது அவசியம் (ரோமர். 2:14, 15). பெற்றோர், பிள்ளைகளை அன்புடனும் கனிவுடனும் கண்டித்துத் திருத்தும்போது பிள்ளைகள் பாதுகாப்பாக உணர்வார்கள்.
சுதந்திரத்துக்கு ஒரு வரம்பு இருப்பதையும் தாங்கள் செய்கிற ஒவ்வொரு தகாத செயலுக்கும் விளைவுகள் இருப்பதையும் அவற்றை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பதையும் பிள்ளைகள் கற்றுக்கொள்வார்கள். பெற்றோரிடமிருந்து நல்ல பண்புகளைக் கற்றுக்கொண்ட பிள்ளைகள் அமைதியாகவும் அதேநேரம் ஆற்றல் மிக்கவர்களாகவும் விளங்குவார்கள். அதற்கு அவர்களின் உடல் ஆரோக்கியமும் கைகொடுக்கும். இதைத்தான் நீதிமொழிகள் புத்தகம் 14: 30 ‘அமைதியான உள்ளம் உடலுக்கு ஆரோக்கியம்’ என்று சொல்கிறது.