

குறுமுனி இன்பப் பொருள் பெற அன்று உற்பன மனுவும் சொல்
குருநாதா-குலகிரி துங்கக் கிரி உயர் குன்றக்குடி வளர் கந்தப் பெருமாளே - திருப்புகழ்
மனம் இடைவிடாது அலைகிறது. சுழலில் சிக்கிய தூசிபோல் சுற்றிச் சுழன்று அல்லல்படுகிறது. இளைப்பாறவும், துன்பம் தீரவும், அருள் வேண்டும் என்றே முருகனைத் தேடி ஓடுகிறோம். ஏனென்றால், கூப்பிட்டதும் ஓடி வருவான் கந்தன். சலிக்கும் மனது முருகனின் வாகனமாக இருக்கவும், அவன் பாதத்தில் உதிரும் பூவாகவும் இருக்கவே விரும்புகிறது.
ஒரு கவிஞர் ‘மயிலாக நான் மாற வேண்டும். வள்ளி மணவாளன் என் தோளில் இளைப்பாற வேண்டும்’ என்றே பாடுகிறார். ஆனால், அந்த மயிலே கந்தனுக்காக மலையாக மாறி நிற்கிறது குன்றக்குடியில்.
மலையான மயில்: பிரார்த்தனைத் தலங்களில் முதன்மை யானது குன்றக்குடி. குன்றக்குடியில் காவடி எடுத்தால் தீராத வினைகளே இல்லை என்று வழக்கு மொழியே உள்ளது. கண்மூடித்தனமான கோபத்தில், ஆணவத்துடன் இருந்த மயிலை மலையாக மாறும்படி முருகன் சபிக்கிறான். மயில் இங்கு வந்து மலையாக மாறித் தவமிருந்து, சாப விமோசனம் பெற்றது.
அரசவனம் என்று புராணங்களில் இந்த ஊர் போற்றப்படுகிறது. அனைத்து விதமான வேண்டுதல்களையும் இங்கு அருள்பாலிக்கும் சண்முகநாதன் நிறைவேற்றி வைக்கிறான். அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பல இடங்களில் குன்றை நகர், குருநாதன் என்றே குறிப்பிடுகிறார். ஞானம் வழங்கும் ஞானகுருவாக இங்கு
விளங்குகிறான் சிவகுருநாதன்.
தித்திக்கும் திருப்புகழ்: வழக்கம்போல் அரிதான பல புராணச் செய்திகளை இங்கும் கூறுகிறார் அருணகிரியார்.
‘எழுது கும்பகன் பின் இளைய தம்பி நம்பி எதிர் அடைந்து
இறைஞ்சல் புரி போதே இடம் மகிழ்ந்து இலங்கை அசுரர்
அந்தரங்கம் மொழிய வென்ற கொண்டல் மருகோனே’ என்று கும்பகர்ணனின் தம்பி விபீஷணன், இலங்கை அசுரர்களின் ரகசியங்களைச் சொல்ல, வெற்றி பெற்ற ராமனின் மருகோனே என்று மகாவிஷ்ணுவும், அம்பிகையும் உடன்பிறந்தவர்கள் என்று ஒரு செய்தியைக் கூறுகிறார்.
தந்தைக்குப் பிரணவப் பொருள் உரைத்த செய்தியை, ‘மழு உகந்த செம் கை அரன் உகந்து இறைஞ்ச மநு இயம்பி நின்ற குருநாதா’ என்று மகிழ்பவர், ‘வளம் மிகுந்த குன்ற நகர் புரந்து துங்க மலை விளங்க வந்த பெருமாளே’ என்கிற வரிகளில் குன்றக்குடி பரிசுத்தமான தலம், எனவே அங்கு மலை மீது அமர்ந்து அருள் வழங்குகிறாய் என்கிறார்.
‘சிறுமை பொருத்திப் பெருமை முடங்கிச் செயலும் அழிந்து’ என இவ்வாறு மாதர்களின் பின் சென்று அவமானமும், அசிங்கமும் படாமல் கர்வமும், சூது எண்ண மும் கொண்ட சூரனை அவன் கிளைகளுடன் அழித்தவனே என்று கொஞ்சிப் பின்,
‘குறுமுனி இன்பப் பொருள் பெற அன்று உற்பன மநுவும்
சொல் குருநாதா - குலகிரி துங்கக் கிரி உயர் குன்றக்குடி
வளர் கந்தப் பெருமானே’ - என்று வணங்கித் தன்னைக் காக்க வேண்டுகிறார்.
மற்றொரு பாட்டில்
‘அழியாத மேலான பதம் மீதில் ஏகீ
உன்னுடன் மேவ அருள் தாராய்’ என்று கேட்கிறார். இங்கும் யசோதையின் மகனான முராரியின் மருகோனே என்றுதான் முருகனை விளிக்கிறார்.
‘தாம் மோகமுடன் ஊறு பால் தேடி, உரலோடு தான் ஏறி
விளையாடும் ஒரு போதில் தாயாக வரு(ய)சோதை காணாது
களவாடு தாமோதரன் முராரி மருகோனே’
என்று கிருஷ்ணனை உரலோடு கட்டிப் போட்ட ஒரு புராண நிகழ்வைக் குறிப்பிடு கிறார். இந்தத் திருப்புகழில் ‘மாயூரகிரி’ என்று குன்றக்குடியை அழைக்கிறார்.
முருகன் உறைவதற்கு நல்ல இடம்: முருகன் பல இடங்களில் குடியிருந் தாலும், ‘நெஞ்சகமே நீ இருக்கும் இடம்’ என்கிறார் அருணகிரியார். இதையே ‘காக்கக் கடவிய நீ காவா திருந்தக்கால் ஆர்க்கும் பரமாம்’ எனும் நக்கீரர், உன்னுடைய இரக்கமும், அருளும் மிகவும் தேவைப்படுகின்ற பெரும் பாவியினும் பாவி நான் என்கிறார். ‘நல்ல இடங்காண் இரங்காய் இனி’ என்று அருணகிரியாரைப் போலவே குறிப்பிடுகிறார்.
குன்றக்குடி குமரன்: குன்றக்குடி சென்று அவனைத் துதிக்க முடியாதவர்கள்கூட, வீட்டிலிருந்து அவனை நினைத்து வணங்கினால், மயில் உயிர்பெற்று எழ முருகன் பறந்தோடி வருவான். உன்னையொழிய ஒருவரையும் நம்புகிலேன் என்கிற நம்பிக்கைதான் அவன் வேண்டுவது.
(புகழ் ஓங்கும்)
- gaprabha1963@gmail.com