தியாகத்தை முன்னிறுத்தும் பக்ரீத் பண்டிகை

தியாகத்தை முன்னிறுத்தும் பக்ரீத் பண்டிகை
Updated on
3 min read

இப்ராஹீம் என்கிற மகத்தான தீர்க்கதரிசி சுமார் ஐயாயிரம் ஆண்டுக்கு முன்னர் ஈராக்கின் பாபிலோனுக்கு அருகிலுள்ள உர் என்கிற ஊரில் பிறந்தார். ஏகமாக எங்கும் நிறைந்து அனைத்தையும் தன்னுள் அடக்கி ஆட்சி செய்கின்ற பேராற்றல் ஒன்றே என்கின்ற அத்வைத தத்துவத்தை (மார்க்கத்தை) நிலைநாட்டிட இப்ராஹீம் நபி எடுத்துக்கொண்ட முயற்சியும் அர்ப்பணிப்பும் அளப்பரியது.

இவர் இராக்கிலிருந்து பாலஸ்தீனப் பகுதிக்குக் குடிபெயர்ந்தார். இவருடைய மனைவியின் பெயர் சாரா. இத்தம்பதியருக்கு நீண்ட நாள்களாகியும் குழந்தை இல்லை. இதனால் வருந்திய அன்னை சாரா அந்தக் குறையைத் தீர்க்க எண்ணி தமது கணவரை வற்புறுத்தி ஹாஜரா அம்மையாரை அவருக்கு மணமுடிக்கச் செய்தார்.

இப்ராஹீம் நபியின் 86ஆவது வயதில் அன்னை ஹாஜராவுக்கு இஸ்மாயில் என்கிற ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு இப்ராஹீம் நபியின் 120 ஆவது வயதில் சாரா அம்மையாருக்கும் இஸ்ஹாக் என்கிற ஆண் குழந்தை பிறந்தது. இந்த இரண்டு புதல்வர்களுமே உலகில் பெரும் தீர்க்கதரிசிகளாக மிளிர்ந்தார்கள்.

இஸ்மாயில் நபியின் வழித் தோன்றல்களில் இருந்து மக்காவில் இறுதி நபியாக முஹம்மது நபி தோன்றினார். இவர்களுக்கு புர்கான் (குர்ஆன்) வேதம் இறைவனால் அருளப்பட்டது. அடுத்து இஸ்ஹாக் நபியின் வழித்தோன்றல்களில் பல நபிமார்கள் தோன்றினார்கள்.

அவர்களில் தாவூது நபிக்கு சபூர் வேதமும் மூஸா நபிக்கு தவ்ராத் வேதமும் ஈஸா நபிக்கு இன்ஜீல் வேதமும் இறைவனால் அருளப்பட்டன. உலகில் அருளப்பட்ட நான்கு வேதங்களுமே இப்ராஹீம் நபியின் வழித்தோன்றல்களுக்கே அருளப்பட்டுள்ளன என்பது கூடுதல் சிறப்பு.

இத்தகைய பல சிறப்புகளைப் பெற்ற இப்ராஹீம் நபி, மனைவி மக்களோடு பாலஸ்தீனத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்தபோது அவர்களுக்கு இறைவனின் கட்டளை வந்தது. அதாவது, இப்ராஹீமின் இரண்டாவது மனைவியையும் கைக்குழந்தையான இஸ்மாயிலையும் பக்கா என்கிற பாலைவனப் பள்ளத்தாக்குப் பகுதியில் விட்டுவிடும்படி அந்த இறைக்கட்டளை கூறியது.

அதன்படி தனது மனைவி ஹாஜராவையும் மகன் இஸ்மாயிலையும் ஆளரவமற்ற பக்கா (இன்றைய மக்கா) என்கிற பாலைவனப் பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கேயே விட்டுவிட்டுத் திரும்பியபோது, இப்ராஹீம் நபி இவ்வாறு இறைவனிடம் பிரார்த்தனை புரிந்தார்:

“எங்களது ரட்சகனே! நிச்சயமாக நான் என்னுடைய சந்ததியிலிருந்து கண்ணியத்துக்குரிய உன்னுடைய வீட்டின் (கஃபா) அருகில் விவசாயமற்ற பள்ளத்தாக்கில் குடியமர்த்தி இருக்கின்றேன். எங்களுடைய ரட்சகனே! தொழுகையை அவர்கள் நிலைநிறுத்துவதற்காக மனிதர்களின் இதயங்களை அவர்களின்பால் சாய்ந்ததாக (ஈர்ப்பதாக) நீ ஆக்கிடுவாயாக. அவர்கள் (உனக்கு) நன்றி செலுத்துவதற்காக அவர்களுக்குக் கனி வகைகளிலிருந்தும் உணவளிப்பாயாக!” (குர்ஆன் 14/37)

இப்ராஹீம் நபி பக்காவில் இருவரையும் விட்டுச்சென்ற சில தினங்களிலேயே அவர்களிடமிருந்த நீரும் உணவும் தீர்ந்து போனது. அதன் பின்னர், ஹாஜராவும் மழலை இஸ்மாயிலும் உணவும் நீரும் இன்றிப் பெரிதும் துயரடைந்தனர். குழந்தை பசியால் துடித்ததைக் கண்ட அன்னை ஹாஜரா, தனது குழந்தையைப் பாலைவன மண்ணிலே கிடத்திவிட்டு, தண்ணீரைத் தேடி ஸபா, மர்வா ஆகிய இரு குன்றுகளுக்கு மத்தியிலே அங்குமிங்குமாக ஓடி உதவியைத் தேடினார். ஆனால், எந்த உதவியும் கிடைக்கவில்லை.

அந்த நேரத்தில் ஓர் ஆச்சரியம் நடந்தது. குழந்தை இஸ்மாயில் தனது கால்களை உதைத்து வீறிட்டு அழுத இடத்தில் ஒரு நீரூற்று பொங்கி எழுந்து வழிந்தோடியது. இதைக் கண்ட அன்னை ஹாஜரா பெரிதும் மகிழ்ந்தார். பொங்கி வரும் நீர் கட்டுக்குள் நிற்க வேண்டும் என்பதற்காக ‘ஜம் ஜம்’ (நில் நில்) என்று கூறினார்.

இறையருளால் அந்தப் பொங்கும் சுனைநீர் கட்டுக்குள் நின்றது. மக்காவில் இன்றும் அந்த ஜம் ஜம் நீர் ஊற்று (கிணறு) வற்றாத நீரூற்றாக மக்களின் தாகத்தைத் தணித்துக்கொண்டிருக்கிறது. தாகத்தைத் தணிக்கும் தடாகம் மட்டுமல்ல; பல பிணிகளையும் போக்கும் அருமருந்தாகவும் அந்தப் புனித நீர் விளங்குகிறது.

பக்காவில் விட்டுச் சென்ற தன் மனைவியையும் மகனையும் காண்பதற்காக பாலஸ்தீனத்திலிருந்து இப்ராஹீம் நபி மீண்டும் பக்கா வந்தபோது மகன் இஸ்மாயில் நடக்கும் பருவத்தை அடைந்திருந்தார். மனைவியோடும் மகனோடும் அங்கு மகிழ்ச்சியாக வாழ்ந்த தருணத்தில் இப்ராஹீம் நபிக்குப் பலமுறை கனவுகள் வந்தன.

தனது மகன் இஸ்மாயிலைத் தானே அறுத்துப் பலியிடுவதாகக் கனவில் காட்சிகள் வந்தன. அதை இறைவனின் கட்டளை என்று கருதிய இப்ராஹீம் நபி தனது மனைவியிடமும் மகனிடமும் தான் கண்ட கனவை எடுத்துக் கூறி, அவர்களது சம்மதத்தைக் கேட்டார். “இறைவனின் ஆணை என்றால் அதைத் தாராளமாக நிறைவேற்றுங்கள்” என்றனர் இருவரும்.

ஒரு கையில் மகனையும் மற்றொரு கையில் கூரிய கத்தியையும் பிடித்தவண்ணம் ஆள்நடமாட்டம் இல்லாத பாலை நிலத்தை நோக்கி நடந்தார் இப்ராஹீம் நபி. அவர்கள் இருவரும் மினா என்கிற பகுதியைக் கடந்து சென்றபோது சைத்தான் (சாத்தான்) அவர்களின் மன உறுதியைக் கெடுக்க விரும்பிப் பல ஆசை வார்த்தைகளைக் கூறிப் பார்த்தான். அது சாத்தானின் ஊசாட்டம் என்பதை உணர்ந்துகொண்ட இப்ராஹீம் நபி சில கற்களை எடுத்து அவன் மீது வீசி எறிந்து, அவனை விரட்டியடித்தார்.

மிகுந்த மன உறுதியோடு இறைவனின் கட்டளையை நிறைவேற்றிடத் தனது மகன் இஸ்மாயிலைப் பாலை மண்ணில் கிடத்தி அறுக்க முற்பட்ட போது, அது முடியவில்லை. செய்வது அறியாது திகைத்து நின்ற இப்ராஹீம் நபிக்கு ஓர் அசரீரி கேட்டது.

“ஓ இப்ராஹீமே! நீர் கண்ட கனவை உண்மைப்படுத்தினீர். உமது தியாகத்தை இறைவன் ஏற்றுக்கொண்டான். உமது மகனுக்குப் பகரமாக ஒரு ஆட்டை அறுத்து நீர் பலியிடுவீராக” என்று அந்த அசரீரி ஒலித்தது. அதன் பிறகு, இப்ராஹீம் நபி ஒரு ஆட்டை அறுத்துப் பலியிட்டார்.

* ‘மனித உயிரை அறுத்துப் பலியிடுகிற நரபலி கூடாது என்று தடுத்த இறைவன் அந்த மனித பலியை விலங்கு பலியாக மாற்றித் தந்தான்’ என்பதே இந்த வரலாற்று நிகழ்வு மனித குலத்துக்கு வலியுறுத்துகிற செய்தியாகும்.

இஸ்லாத்தின் ஐந்தாம் கடமையான புனித ஹஜ் கடமையானது இப்றாஹீம் நபியின் வாழ்வியல் தியாகங்களையும் அவரது நினைவுகளையும் போற்றும் விதமாகவே அமைந்துள்ளது. உலகில் சத்தியத்தை நிலைநாட்டிட இறைவனுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார் என்பதற்கான ஓர் அடையாளமாகவே உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ஆடு, மாடு, ஒட்டகங்களை அறுத்து அவற்றின் இறைச்சியை மற்றவருக்கு வழங்கி பக்ரீத் பண்டிகையை ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள்.

- ervaimohdsalahudeen@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in