

பொது ஆண்டுக்கு முன் (கி.மு.) 623ஆம் ஆண்டில் இமயமலை பகுதி அருகில் அமைந்துள்ள அன்றைய சாக்கிய நாட்டில் (இன்றைய நேபாளம்) கபிலவஸ்து, லும்பினித் தோட்டம், சால மரத்தடியில் சாக்கிய மன்னர் சுத்தோதனருக்கும் மகாராணி மகாமாயாதேவிக்கும் சித்தார்த்த கெளதமர் பிறந்தார். அவர் பிறந்தவுடன் ஏழு காலடிகள் எடுத்து வைத்தார் என்றும் அந்த ஏழு காலடியிலும் அழகிய தாமரை மலர்கள் மலர்ந்ததாகவும் பெளத்த நூல்கள் கூறுகின்றன.
இளவரசர் சித்தார்த்த கெளதமர் வெவ்வெறு காலகட்டங்களில் கண்டுணர்ந்த நான்கு காட்சிகளின் (வயது முதிர்ந்தவர், நோயுற்றவர், இறந்தவரின் உடல், அமைதியான துறவி) மூலம் அவரின் மனத்தில் இருந்த தேடல் வெளிப்பட்டது. மனித குலத்தின் துன்பத் துக்கான காரணங்களைத் தேடி 29 வயதில் சுகபோக வாழ்க்கையைத் துறந்து, அரண்மனை யிலிருந்து வெளியேறி ‘உயரிய துறவு’ பூண்டார். பல யோக, தியான முறைகளை அறிந்து குறுகிய காலத்தில் உயர்நிலை தேர்ச்சி அடைந்தார்.
ஏற்கெனவே மெய்ஞ்ஞானத்தைத் தேடிக்கொண்டிருந்த ஐந்து துறவிகளும் போதிசத்துவராகிய சித்தார்த்த கெளதமருடன் இணைந்து உடலை வருத்திக்கொண்டு பயிற்சி செய்தனர். பிறகு பிஹாரில் உள்ள கயையில் ஆலமரத்தடியில் உடலை வருத்திக்கொண்டு, உணவு உண்ணாமல் நீண்ட நாள்கள் கடுமையான தியானத்தில் ஈடுபட்டார். இதனால் உடல் மிகவும் நலிவடைந்தது.
ஒரு நாள் அந்த இடத்திலுள்ள மரத்தைச் சுற்றி வழிபடத் தன் தோழியுடன் வந்த சுஜாதா என்கிற பெண்மணி, மரத்தடியில் போதிசத்துவர் தியான நிலையில் அமர்ந்திருப்பதைக் கண்டு, அவரையே மரத்தின் கடவுளாக நினைத்து, படைப்பதற்காக எடுத்து வந்த சுவையான பால் சாதத்தை போதிசத்துவராகிய சித்தார்த்தரின் பிண்டப் பாத்திரத்தில் வழங்கினார். இதைத் தொலைவிலிருந்த ஐந்து துறவிகளும் பார்த்து போதிசத்துவர், உணவு உட்கொள்ளும் சுகபோக நிலைக்குச் சென்றுவிட்டார் என்று தவறாகக் கருதி அவரிடமிருந்து விலகி காசி மாநகருக்குச் சென்றனர்.
சுஜாதா கொடுத்த பால்சாத உணவை உட்கொண்டவுடன், அவருடைய நலிவடைந்த உடல் புத்துணர்வு பெற்றது. மெய்ஞ்ஞான மடைவதற்கு உடல் ஆரோக்கியம் முக்கியம் என்றும் உடலை வருத்திக்கொள்வதும், அதிக இன்பத்தில் திளைப்பதும் தவறானது என்றும் சிந்தித்து இரண்டுக்கும் இடைப்பட்ட ‘மத்திய மார்க்க’த்தைக் கண்டுணர்ந்தார்.
சமநிலையில் விழிப்புநிலை: போதிசத்துவர் பல காலமாக வளர்த்துக் கொண்ட முழுமையான பத்து நற்குணங்களின் (தஸ பாரமித்தா) பலனாக, சூரியன் மறையும் முன் மாரனால் (தீய சக்தி) ஏற்படுத்தப்பட்ட இடைஞ்சல்களை முறியடித்தார்.
இவ்வாறு மாரனை வென்ற பிறகு, தியானத்தின் ஒவ்வொரு நிலையின் மூலம், ஞானக்கண்ணினால் (திப்ப சக்கு) முந்தைய பிறப்புகளைப் பற்றிய ஞானத்தையும், சார்புநிலைத் தோற்றம் பற்றிய விதியையும் அறிந்தார். அதைத் தொடர்ந்து ஐந்து சேர்க்கையினால் (பஞ்ச கந்த) எழும் பற்றுதலையும் அவற்றை நிறுத்தும் நுண்ணறிவின் வளர்ச்சியால் நான்கு உன்னதப் பாதைகளை உணரும் அறிவும் அவருக்கு அடுத்தடுத்து ஏற்பட்டன.
இதன் விளைவாகப் பொது ஆண்டுக்கு முன் (கி.மு.) 588இல் மே மாதம் முழுநிலவு அன்று விருப்பு, வெறுப்பில்லாத உள்ளச் சமநிலையுடன் ‘விழிப்புணர்வு நிலை’ அடைந்து, 35ஆவது வயதில் புனித ‘சம்மா சம் புத்தர்’ ஆனார் (யாருடைய உதவியுமின்றி முழுமை யாக மெய்ஞ்ஞானமடைதல்). பிறகு அந்தப் பகுதியிலேயே ஏழு வாரங்கள் (49 நாள்கள்) வெவ்வேறு இடங்களில் மெய்ஞ்ஞானப் பலனின் பேரின்பத்தை அனுபவித்து மகிழ்ந்தார்.
மீண்ட ஐவர்: 50ஆவது நாளில் மரத்தடியில் அமர்ந்து, ‘யாருக்கு முதலில் கோட்பாட்டைப் போதிப்பது நல்லது, யார் தம்மத்தை விரைவாகப் புரிந்து கொள்வார்?’ என்று எண்ணினார். தன்னுடன் முதலில் சில காலம் தங்கியிருந்த ஐந்து துறவிகள் அவரது ஞானக்கண் தரிசனத்தில் தோன்றினர். அவர்களை அழைத்துவர புத்த கயையிலிருந்து புறப்பட்டு சாரநாத்தை அடைந்து அந்த ஐந்து துறவிகளையும் சந்தித்தார்.
புத்த பகவானைப் பார்த்ததும் ‘மெய்ஞ்ஞான மடைந்துவிட்டார்’ என்று ஐந்து துறவிகளும் வணங்கி மான்சோலைக்கு அவரை அழைத்துச் சென்றனர். ஒருவர் இருக்கையைத் தயார்படுத்தினார். இன்னொருவர் அவரது பாதங்களைக் கழுவ நீர் கொண்டு வந்தார். பிறகு காசிக்கு அருகில் உள்ள சாரநாத்தின் மான்சோலையில் உயர்ந்த இருக்கையில் புத்தரை அமரவைத்தனர்.
அந்த இருக்கையின்கீழ், ஐந்து துறவிகளும் (கொண்டஞ்ஞர், வாப்பர், பத்தியர், மகாநாம, அஸ்ஸஜி) அமர்ந்தனர். நான்கு மேன்மைமிக்க வாய்மைகளை எடுத்துரைக்கும் ‘தம்ம சக்க பவத்தண சுத்த’ எனப்படும் (உன்னத வாய்மை, இயற்கையின் சட்டம்) தர்மச் சக்கரத்தைச் சீடர்கள் சுழற்றினர். இதுவே புத்த பகவான் இவர்களுக்கு வழங்கிய முதலாவது ‘தம்மப் பேருரை’.
இந்தப் புனிதப் பேருரை ஜூலை மாத முழு நிலவில் நிகழ்ந்தது. பிறகு ‘இருப்பின் மூன்று பண்புக’ளான (திலக்கண: அனிச்சா, துக்க, அநத்தா) நிலையாமை, திருப்தியின்மை, நிலையான ஆன்மா இல்லாமை ஆகியவை பற்றி எடுத்துரைக்கும் பேருரையைக் கேட்டதும் இந்த ஐந்து துறவிகளும் இறுதி ஞானநிலையான அரஹந்த நிலையை அடைந்து, புத்த பகவானின் முதல் சீடர்கள் ஆனார்கள். ‘சங்கங் சரணங் கச்சாமி’ என்கிற மூன்றாவது சரணம் உருவானது.
உன்னத வாய்மைகள்:
1. துன்பம் (துக்க) வாழ்க்கையில் உள்ளது. 2. துன்பத்துக்குக் காரணம் உள்ளது (துக்க சமுதாய). 3. துன்பம் ஒழிக்கப்படக்கூடியது (துக்க நிரோத). 4. துன்பத்தை ஓழிக்க வழி உள்ளது (துக்க நிரோத காமனீ படிபதா). இவை உன்னதமான வாய்மைகளாகும்.
புத்த பகவான் மெய்ஞ்ஞானமடைந்து 45 ஆண்டுகள் மனித சமுதாயம் மேன்மையடைய இறுதிவரை மக்களிடம் தம்மத்தை உபதேசித்தார். பிறகு பொது ஆண்டுக்கு முன் (கி.மு.) 543ல் குசிநகர் சாலமரத்தின் கீழ் 80ஆவது வயதில் மகாபரிநிப்பாணம் (மரணமில்லாப் பேரின்ப நிலை) அடைந்தார்.
250 ஆண்டுகளுக்கு பின்னர் வந்த மாமன்னர் தேவனாம்பிய அசோகர், புத்தரின் தம்மத்தை ஆசியா முழுவதும் பரவச் செய்தார். புத்தரின் 84,000 சுத்தாக்களின் நினைவாக 84,000 ஸ்தூபிகளைத் தென்கிழக்கு ஆசியா முழுவதும் நிறுவினார்.
புத்த பகவானின் தம்மச் சக்கரத்தைக் கல் தூண்களில் பொறிக்கச் செய்தார். இதையே நம் இந்தியத் தேசியக் கொடியில் இடம் பெறச்செய்தனர். நான்கு சிங்க முகங்களின் சிற்பமும் இந்திய அரசு சின்னமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மாமன்னர் அசோகர் பாறைக் கல்வெட்டுகளில் புத்த பகவானின் தம்மத்தை பிராக்ருத (பிராமி) மொழியில் பொறிக்கச் செய்தார்.
- கட்டுரையாளர்: பௌத்த உபாசகர்
(3.7.2023 - அசால்ஹபூர்ணிமா - முழுநிலவு நாள்