

உண்மையை என்றும் உலகுநம்பி ஏற்பதில்லை
வண்ணமின்றி யார்வாங்கு வார்!
ஆனால், உண்மைக்கோ நிறமில்லை, சுவையில்லை. என்ன செய்ய? நமக்கோ, நிறம், சுவை, அலங்காரம், நாடகம் எல்லாம் தேவைப்படுகின்றன. அவைதான் நம்மை ஆள்கின்றன. ஒரு சின்ன குழந்தையின் இயல்பான மழலைப் பேச்சைக் காட்டிலும், அது ‘நர்சரி ரைம்ஸ்' சொல்லிக் கேட்பதில்தான் நமக்கு மகிழ்ச்சி! விளக்கம் இல்லாமல் நம்மால் ஒரு கவிதையைக்கூட ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அப்படி மலினப்பட்டுக் கிடக்கிறது மனிதனின் ரசனை.
கடவுள் எனும் மர்மம்: என்ன, ரசனையா? கடவுள் என்ன ரசனை விஷயமா? ஆம். ரசிக்காதவனுக்கு சங்கீதம் சத்தம்தான். நடனம் கோணங்கித்தனம்தான். ஒப்பனை இல்லாத எந்த அழகும் கண்ணில் படாதுதான். அதனால்தான் மனிதனுக்குக் கடவுள் ஓர் எரிச்சலூட்டும் மர்மமாக இருக்கிறது.
நீலம் என்று ஒரு நிறம் இல்லையென்றால் நம்மால் வானத்தை ரசிக்க முடிவதில்லை. மேலே சென்றால்தான், வானத்துக்கு அப்படியொரு நிறம் இல்லை என்பதே புரியும். அண்டத்தின் நிறம் கறுப்பு. நட்சத்திரப் புள்ளிகளை ஆங்காங்கே இட்டும், ஒரு வெள்ளி நிலவைத் தவழவிட்டும்தான் அந்தக் கறுப்பை ரசிக்கும்படியாகச் செய்திருக்கிறது இயற்கை!
எவ்வளவு சிறிய பறவை! எவ்வளவு பெரிய வானம்! ஆனால், ஒருபோதும் வானத்தின் விரிவால் எந்தப் பறவையும் மிரண்டு போவதில்லை. மாறாக, வானம் தனது ராஜாங்கம் என்பதைப் பிரகடனம் செய்யத்தான், அவ்வப்போது மரக்கிளையில் வந்து தங்கி கானம் பாடுகிறது அந்த வண்ணப் பறவை. நாமும் அப்படி இருந்துவிடக் கூடாதா? நம்மைவிட, விலங்கினம் எவ்வளவு அல்லல்களுக்கு ஆளாகிறது! வீடு உண்டா? அவற்றுக்கு வேண்டிய வசதிகளை யாராவது செய்து தருகிறார்களா?
பொந்திலே வாழும் உயிர்கள்
மழையினைச் சபிப்பதில்லை
பொசுக்கிடும் வெய்யிலிலும்
பூச்சிகள் சலிப்பதில்லை
ஐந்தறிவோ ஓரறிவோ
உயிரெதுவும் வெறுப்பதில்லை
ஆறறிவு மனிதன் மட்டும்
அழாமல் இருப்பதில்லை!
கடவுள் என்னும் உணர்வு
ஆம்! இந்த உலகில், புலம்புவது மனிதன் மட்டும்தான். ரசிப்பவனுக்கே மனத்தில் நிறைவு வருகிறது; நெஞ்சில் நிம்மதி நேர்கிறது; அவனே கடவுளை அறிந்தவனாகிறான். கடவுள் தரிசனம் என்பது ஒரு பிரத்யேகக் காட்சியல்ல. அதில் நாடகத் தோரணைக்கு வாய்ப்பேதும் இல்லை. அது தொடக்கமும், முடிவும், தொய்வும் இல்லாத தொடர்ந்த உணர்வு. அதில் ஏக்கமும் கிடையாது. எக்களிப்பும் நிகழாது.
அகத்தே அமைதி. புறத்தே ஆனந்தம். இடையே நிறைவு. ஆர்ப்பாட்டமில்லாத நேசமே வெளிப்பாடு. இவைதான் அந்தத் தரிசனத்துக்கான நிரூபணங்கள். மற்ற எவையும் வெற்று அடையாளங்களே!
எங்கே எங்கே என்று தேடாமல், இங்கே அங்கே என்று மயங்காமல் எங்கும், எதுவும், எதிலும் அதுதான் என்கிற புரிதலே மனிதன் தொடுகிற உச்சம். அங்கே, பாதையுமில்லை, பயணமுமில்லை. இதில் மிக முக்கியமானது - எங்கும், எதுவும், எதிலும் அதுதான் என்பதே. ‘தீக்குள் விரலை வைத்தால்’ எப்படி கண்ணனைத் தீண்டிய உணர்வு கிட்டும்? அதற்கொரு பின்னணி இருக்கிறதே! காக்கைச் சிறகினில் அவன் கரிய நிறத்தைக் கண்டால்தான், பார்க்கும் மரங்களிலெல்லாம் அவனுடைய பச்சை மரகத வண்ணத்தைக் கண்டால்தான், கேட்கும் எந்த ஒலியும் அவனுடைய கீதமாகவே காதில் விழுந்தால்தான், தீயில் விரலை விட்டாலும் அவனைத் தீண்டிய இன்பம் கிட்டும். இதைத் தொட்டு, கண்டு, கவிதையில் காட்டியவன் பாரதி. நாம் இப்படிப் பாடிப் பார்ப்போம்:
பூமி போலத் தாங்கிக்கிட வேணும்
கடல் போல வாங்கிக்கிட வேணும்
எங்கெங்கும் நெறெஞ்சிருந்தாலும்
எதனாலும் தொட முடியாத
வானம் போல் வாழணும்
ஞானமே நீலம் போடும்
ஓடாம நின்னுக்கிட வேணும்
ஓடமா ஒழைக்கவும் வேணும்
கோயிலுக்கு வெளியே தெய்வம் கொள்ளை கொள்ளையாகக் கொட்டிக் கிடக்கிறது என்பது புரிந்தால்தான் கோயிலில், சந்நிதியில், சிலை தெரியாது உயிர் தெரியும்; சித்தம் சிலிர்க்கும்.
அழகான முரண்கள்: உங்களுக்கு இறைவன் என்று சொல்லப் பிடிக்கவில்லையென்றால், எல்லாம் இயற்கைதான் என்று சொல்லிக் கொள்ளுங்கள். அப்படியானால் அல்லது எப்படியானாலும் உங்களால் இயற்கையை மறுக்க முடியாது. ஆனால், ஓர் அத்வைதியால் இயற்கையைக்கூட மறுக்க முடியும் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.
உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டு மென்றால் ஓரளவுக்கு மேல், வாதம் உதவாது. அது ஒரு பக்கவாதமாகிவிடும். ஊரோடும் சரி, உங்களோடும் சரி வாதம் செய்வதை விட்டுவிட்டு, மனத்தை மொத்தம் திறந்து, கண்களை விரித்து கவனிப்பதே வழி.
குகையிலிருந்து வெகுநாள் கழித்து வெளியே வருகிறார் குரு. தவம் கலைந்தல்ல, கனிந்து. வெளியே பெருமழை. ஒருபக்கம் ஒரு மான்குட்டியை இறுக்கிக் கொண்டிருக்கிறது மலைப்பாம்பு. இன்னொரு பக்கம், தன் குட்டிக்குப் பால் கொடுத்துக் கொண்டிருக்கிறது ஒரு புலி. தனிப்பட்டதாக எந்த உணர்வும் இல்லாமல் அவருடைய உதடுகள் சற்றே பிரிந்து ‘இயற்கை’ என்கின்றன. இயற்கையின் அழகே அதன் முரண்கள்தான்!
இங்கே இருப்பது உயிர் ஒன்றுதான் என்பதை உற்றுக் கவனித்தால் உயிர்களுக்கு அவை புகுந்த உடல்களால் விளையும் இயல்புகளில் காணப்படும் வேறுபாடுகளால் நாம் குழம்ப மாட்டோம். அபிப்பிராயங்கள் கொள்ள மாட்டோம். ஆணித்தரமான தீர்மானங்களுக்கு வர மாட்டோம்.
உள்ளது உயிரொன்றே. உயிர் ஒன்றே. ஒன்றே உயிர். அதுதான் எங்கும் தெரியும். அது ஒன்றுதான் அந்தக் குகையிலிருந்து வெளிவந்த மனிதனின் கண்ணில் படும். அதற்குக் கடவுள் என்று நீங்கள் பெயர் வைத்துக்கொண்டால் அவன் ஆமோதிப்பதுமில்லை, ஆட்சேபிப்பது மில்லை.
(தரிசனம் நிகழும்)
- tavenkateswaran@gmail.com