திருவிவிலிய கதை: மக்களின் உயிர் வளர்த்த யேசு

திருவிவிலிய கதை: மக்களின் உயிர் வளர்த்த யேசு
Updated on
2 min read

யேசு அற்புதங்களை ஜனங்கள் மத்தியில் செய்து, கொடிய வியாதி உள்ள மக்களையும் குணமாக்கினார். மேலும் அவரின் உபதேசம் அக்காலத்தில் இருந்த யூத மதத் தலைவர்களின் உபதேசத்தைவிட மிகவும் வித்தியாசமானதாக இருந்ததால் யேசு எங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் அவரைப் பின்தொடர்ந்து மக்கள் கூட்டம் சென்றுகொண்டே இருந்தது.

இப்படியாகத் தொடர்ச்சியாக மக்களைச் சந்தித்துக்கொண்டே இருந்த இயேசு, ஒரு முறை ஓய்வெடுக்க ஊருக்கு வெளியே பாலைவனமான ஓர் இடத்துக்குச் சென்றார். இதை அறிந்த ஆயிரக்கணக்கான மக்கள் அவரைப் பின்தொடர்ந்து அவருடைய போதனைகளைக் கேட்பதற்காக் அந்தப் பாலைவனத்துக்கும் சென்றனர்.

தன்னைப் பின்தொடர்ந்து வந்த மக்கள் கூட்டத்தைக் கரிசனத்துடன் பார்த்த இயேசு, அவர்களுக்குப் போதனை செய்யத் தொடங்கினார். காலை தொடங்கி மாலை வரை யேசுவின் போதனையை மக்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சுகவீனமாக இருந்த மக்களின் வியாதியையும் குணமாக்கினார். வந்திருந்த மக்கள் யாரும் மதிய உணவோ இரவு உணவோ கொண்டு வரவில்லை.

யேசுவின் சீடர்கள் அவரிடம் வந்து, “மாலைப் பொழுதாயிற்று. மக்கள் உணவு சாப்பிடும்படி அவர்களை ஊருக்குள் அனுப்ப வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்கள்.

யேசுவோ, “நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்று சொன்னார். “இப்படி ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு கொடுக்கும் அளவுக்கு நம்மிடம் உணவும் இல்லை, கடையில் வாங்கிக் கொடுக்க பணமும் இல்லை” என்று சீடர்கள் சொன்னார்கள்.

“உங்களிடம் இப்போது என்ன இருக்கிறதோ அதைக் கொண்டு வாருங்கள்” என்று யேசு சொன்னார்.

அந்திரேயா என்கிற யேசுவின் சீடன், “இரண்டு அப்பங்களும் ஐந்து மீன்களும் மட்டுமே இருக்கின்றன. இவற்றை வைத்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு எப்படி உணவளிக்க முடியும்?” என்றார்.

“உங்களிடம் இருக்கும் உணவை என்னிடத்தில் கொண்டு வாருங்கள்” என்றார் யேசு. எல்லோரையும் வரிசையாக உட்காரச் சொன்னார். சீடர்கள் கொடுத்த உணவைக் கையில் வாங்கிய யேசு, தன் விண்ணுலகத் தந்தையிடம் வேண்டுதல் செய்து, அப்பங்களையும் மீன்களையும் வந்திருந்த மக்களுக்குப் பகிர்ந்தளிக்கச் சொன்னார்.

மக்களுக்குக் கொடுக்க கொடுக்க அவரின் கையில் இருந்த அப்பங்களும் மீன்களும் பெருகிக்கொண்டே இருந்தன. வந்திருந்த மக்கள் சாப்பிட்டது போக, மீதமிருந்த உணவைப் பாதுகாப்பாக வைக்கும்படி தன்னுடைய சீடர்களுக்கு யேசு அறிவுறுத்தினார்.

ஒரு தேவையோடு தன்னுடைய போதகத்தைக் கேட்க வந்த மக்களின் ஆன்மிகப் பசியை மட்டுமல்லாமல் அவர்களின் வயிற்றுப் பசிக்கும் உணவளித்தார் யேசு. இன்றும் தம்மை உண்மையாகத் தேடி வருகிற யாவருக்கும் விண்ணுலகில் இருந்து அவர்களின் தேவையைச் சந்திக்கிற கடவுளாக இருக்கிறார் யேசுநாதர்!

யேசு, “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்போது உங்கள் உள்ளத்துக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது: என் சுமை எளிதாயுள்ளது” என்று சொன்னார்.

- merchikannan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in