தித்திக்கும் திருப்புகழ் நாயகன் 20: திருத்தணி கோயில் | நினைத்ததை நிறைவேற்றும் நிகரற்ற முருகன்

தித்திக்கும் திருப்புகழ் நாயகன் 20: திருத்தணி கோயில் | நினைத்ததை நிறைவேற்றும் நிகரற்ற முருகன்

Published on

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ் செகுத்தவர்

ருயிர்க்குஞ் சினமாகச்- சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

திருப்புகழ் நெருப்பென் றறிவோம் யாம். - திருப்புகழ்.

சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்த பகை அறுக்கும் முருகன் இருக்கும் இடம் திருத்தணிகை. திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தனை நினைத்தாலே வினைகள் தீரும் என்று பக்தர்களால் கொண்டாடப்படும் தலம்.

திருத்தணிகை வேலன்: ஐந்தாம் படை வீடு. முருகனின் சக்தி வாய்ந்த தலங்களில் முதன்மையானது. தேவாசுரப் போர் முடித்து முருகன் வந்து சினம் தணிந்து அமர்ந்த மலை இது. வள்ளியை மணம் புரிந்த தலம். முருகனை வழிபட்டு திருமால், தாரகாசுரனிடமிருந்து தன் சங்கு, சக்கரங்களைப் பெற்றார்.

ராமர் இங்கு முருகனைத் தரிசித்து ராவணனை வெல்லும் ஆற்றல் பெற்றுத் திரும்பும்போது, கந்தனிடம் சிவஞானம் பெற்றார் என்று சொல்லப்படுகிறது. திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் திருத்தணியைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இங்கு அருணகிரிநாதர் அறுபத்தி மூன்று பாடல்கள் பாடியுள்ளார். வருடத்தின் நாள்களைக் குறிக்கும் வகையில் 365 படிகள் மலையில் உள்ளன.

திருத்தணி படிபூஜை: திருத்தணி படிபூஜை மிகவும் சிறப்பு பெற்றது. டிசம்பர் 31ஆம் தேதி இரவு மலையின் 365 படிகளிலும் சந்தனம் குங்குமம் இட்டு பூஜை செய்து ஒவ்வொரு படிக்கும் ஒரு திருப்புகழ் பாடி மலை ஏறி முருகனைத் தரிசிப்பார்கள் பக்தர்கள். வள்ளிமலை சுவாமிகள் திருவிழாவாகக் கொண்டாடியதைப் பக்தர்கள் இன்று வரை சிறப்பாகத் தொடர்கிறார்கள்.

நினைத்ததை நிறைவேற்றும் நாயகன்

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும் செகுத்தவர்

உயிர்க்கும் --- திருப்புகழ் நெருப்பென்று அறிவோம் யாம்.

- என்கிற பாடலில் முருகன் அடியவர்களிடம் சினம் கொள்பவரையும் பகைவர், பழிப்பவர், ஏளனப்படுத்துபவர் ஆகியோரையும் திருப்புகழே நெருப்பாகி அணைக்கும் என்கிறார். ‘பிறவித் துன்பத்திலிருந்து உய்யும் ஞானநெறியை எந்நாளும் கைவிடாது இருக்க, நீ அருள வேண்டும்’ என்பவர், ‘நமக்குள்ள மயக்க இருள் போக்கும் மெய்ப்பொருள் முருகனே’ என்கிறார். இத்திருப்புகழைப் பாடுவதன் மூலம் நினைத்ததை நிறைவேற்றுவான் முருகன் என்கிறார்கள் பக்தர்கள்.

ஆன்மா எடுக்கும் எண்ணிலாத் துன்பங்களில் முக்கியமானது பிறவித் துன்பம். இது நீங்கினால்தான் துன்பங்கள் நீங்கும் என்கிறார் மற்றொரு பாடலில் அருணகிரியார்.

உய்ய ஞானத்து நெறி கைவிடாது எப்பொழுதும் உள்ள

வேதத்துரை கொடு உணர்வோதி உள்ள மோகத்து இருளை

விள்ள - - - - தெய்வயானைக்கினிய பெருமாளே

- என்று வேண்டுகிறவர், நோய்களைப் பட்டியலிடுகிறார். இருமல், வலிப்பு நோய், நீரிழிவு, தலைவலி, பெருவயிறு, நுரையீரல் கோழை என்று பட்டியலிடும் அருணகிரியார், இந்த நோய்கள் பிறவிகள்தோறும் என்னை அணுகாதபடி நீயே காக்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்கிறார்.

இருமலுரோகன் முயலகன் வாத மெரிகுண நாசி

விடமே நீரிழிவு விடாத தலைவலி சோகை எழுகள மாலை

இவையோடே - - - - சலமிடை பூவின் நடுவினில் வீறு

தணிமலை மேவு பெருமாளே!

- என்கிற இத்திருப்புகழைப் பாடுவதன் மூலம் தீராத நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வேல்மாறல் வேலன்: பக்தர்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை, மனக் குழப்பம் என்று அனைத்தையும் தணிக்கும் இடமாதலால் திருத்தணி என அழைக்கப்பட்டது. மலை மிகவும் அழகாகக் காட்சி அளிப்பதால் அழகுத் திருத்தணி மலை என்றே அழைக்கிறார் அருணகிரியார்.

வினைகளைத் தீர்க்கவல்ல வேல்மாறல் பதிகத்தை வேலனை நினைத்து வள்ளிமலை சுவாமிகள் தொகுத்தருளியுள்ளார். அது ‘வேல்மாறல் பதிகம்’ என்று பக்தர்களால் நம்பிக்கையுடன் இன்றும் பாராயணம் செய்யப்படுகிறது.

பக்தர்களின் பரம தயாளன்: தனக்கென வாழாமல் பசியுற்றவருக்குப் பரிவுடன் அன்னம் தர வேண்டும் என்று, ‘அடையப் பசியுற்றவருக்கு அமைவுற்று அமுதைப் பகிர்தற்கு இசையாதே’ என்று கூறும் அருணகிரிநாதர், ‘அழியும் இந்த உடம்பின்மேல் பற்று வைத்து அழியாதே’ என்கிறார்.

‘கலைப் புலவோர் பண் படைத்திட, ஓதும் கழல் புகழ் ஓதும் கலை தாராய்’ என்று முருகனிடம் வேண்டுகிறார். நம் அனைவரின் பிரார்த்தனையும் இதுவாகவே இருக்க வேண்டும். அவன் திருவடியை இறுகப் பற்றிக்கொண்டால் திருத்தணி முருகன் வழித்துணை வருவான்.

(புகழ் ஓங்கும்)

- gaprabha1963@gmail.com

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in